உகரம்
(இரண்டாம் பருவம்)
மனிதனை மனிதனாக வாழச்செய்வது அன்பு. அந்த அன்பை அனைத்து உயிர்களிடமும் காட்டுவதே மிகச்சிறந்த மனிதநேயமாகும்.
எந்த உயிரையும் துன்புறுத்துதல் கூடாது; எல்லா உயிர்களையும் தன்னுயிர்போல எண்ணுதல் வேண்டும்; உயிர்க் கொலை அறவே கூடாது; எல்லாரையும் சமமாகக் கருதுதல் வேண்டும்; ஏழைகளின் பசியைப் போக்குதல் வேண்டும் ஆகிய உயர்ந்த கருத்துகளை வலியுறுத்தினார். அதன்படி வாழ்ந்தும் காட்டினார். அவர்தாம் திருவருள் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்பட்ட இராமலிங்க அடிகள்.
இராமலிங்க அடிகள், 1823 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி கடலூர் மாவட்டத்திலுள்ள மருதூரில் இராமையா பிள்ளை – சின்னம்மையார் இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
இராமலிங்கனாரின் கொள்கைகளுள் முதன்மையானது, உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதலாகும். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய இவர், மனிதர்கள்மீது மட்டுமல்லாமல் தாவரங்கள், விலங்குகள் மீதும் அன்பு செலுத்துதல் வேண்டும் என்றார்.
மனிதர்களுக்கு ஏற்படும் துன்பங்களுள் கொடுமையானது பசியினால் ஏற்படும் துன்பம் என்பதை உணர்ந்திருந்தார். வறுமையில் வாடும் மக்களின் பசியைத் தீர்ப்பதே வாழ்வின் சிறந்த நெறியாகும் என்று வலியுறுத்தினார். அதனால்தான், 1867 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூர் என்னும் சிற்றூரில், சத்திய தருமச் சாலை என்னும் அமைப்பை நிறுவினார். இதன்மூலம் உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஏழை, பணக்காரன், ஆண் – பெண் என வேறுபாடுகள் இன்றி அனைவரின் பசியையும் போக்கினார். அன்று அவர் மூட்டிய அடுப்பின் தீ இன்றும் அணையாமல் பசித்தோர்க்கு உணவளித்து வருகிறது.
இந்தத் தருமசாலையைத் தேடி வருபவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது. தற்போது தருமசாலைக்கான உணவுப் பொருள்களைத் தமிழக அரசு குறைந்த விலைக்கு வழங்கி வருகிறது.
பசித்தவர்களின் பசிப்பிணியைப் போக்கும் “வள்ளல்” தன்மை கொண்டவராக இராமலிக்க அடிகள் திகழ்ந்ததால் மக்கள் இவரை “வள்ளலார்” என அன்புடன் அழைத்தனர். இன்றும் வள்ளலாரின் பெயரால் இலட்சக்கணக்கான மக்களின் பசியாற்றப்படுகிறது. வடலூரில் தலைமை இடம் இருந்தாலும், உலகமெங்கும் அவரது கொள்கையைப் பின்பற்றுகின்றவர்கள் அனைவருக்கும் உணவளித்துப் பசியாற்றுகிறார்கள்.
பசித்துன்பத்தைப் போக்கியதுடன் மக்களின் அறியாமை இருளைப் போக்கவும் வள்ளலார் அறிவுரை வழங்கினார். அதற்காக வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இது, வள்ளலாரின் வாழ்வியல் நெறிகளை வளர்க்கும் இடமாக இன்றும் விளங்குகிறது.
வள்ளலார் சமத்துவம், கல்வி, தியானயோகம் இவற்றை வலியுறுத்தினார். உயிர்ப்பலியைத் தடுத்து நிறுத்தினார். சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை, அறக் கூழ்ச்சாலை என்று அவர் தோற்றுவித்த ஆன்மிகப் பணிகள் இன்றும் வடலூரில் நடந்து வருகின்றன. வள்ளலார் வாரவழிபாட்டு நிலையங்கள், வள்ளலார் மன்றங்கள், அருட்பிரகாச சபைகள், சன்மார்க்க சங்கங்கள் என வெவ்வேறு பெயர்களில் அவை செயல்படுகின்றன. தமிழகத்தில் ஏராளமான ஊர்களில் வள்ளலாருக்குச் சிறிய ஆலயங்களும் உள்ளன. வள்ளலார் ஜோதியில் கலந்ததாகச் சொல்லப்படும் தைப்பூச நாள் அவருக்கான குருபூஜை நாளாக இன்றும் கொண்டாடப்படுகிறது.
வள்ளலாரின் எளிய கொள்கைகள் பலரால் இன்றளவும் பின்பற்றப்படுகின்றன. அவை பின்வருமாறு:
பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருதவேண்டும்.
பசித்த உயிர்களுக்கு உணவு அளித்து ஆதரிப்பதும் உயிர்க்கொலை செய்யாத பண்புமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.
ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு !
எல்லா உயிரையும் தம் உயிர்போல் நினைக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைப்பிடிக்க வேண்டும் !
| 1. | அறவே | - | முழுவதுமாக | ||
| 2. | கருதி | - | நினைத்து | ||
| 3. | இரந்து | - | பிறரிடம் கேட்டு | ||
| 4. | மூட்டிய | - | உண்டாக்கிய | ||
| 5. | நெறி | - | கொள்கை |
மனிதனை மனிதனாக வாழச்செய்யும் அன்பை, அனைத்து உயிர்களிடம் காட்டுவது மனிதேநேயம் எனப்படும்.
பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருதுதல், பசித்த உயிர்களுக்கு உணவு அளித்தல், உயிர்களிடத்தில் அன்பு செலுத்துதல் ஆகியவை வள்ளலாரின் கொள்கைகள் ஆகும்.
வள்ளலார் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினார்.
பசித்துன்பத்தைப் போக்கியதுடன் மக்களின் அறியாமை இருளைப் போக்கவும் வள்ளலார் அறிவுரை வழங்கினார். அதற்காக வடலூரில் சத்திய ஞான சபை ஏற்படுத்தப்பட்டது.
5. சத்திய தருமச் சாலையின் மூலம் உயர்ந்தோர், தாழ்ந்தோர், ஏழை, பணக்காரன், ஆண், பெண் என வேறுபாடுகள் இன்றி அனைவரின் பசியையும் போக்கினார். அன்று அவர் மூட்டிய அடுப்பின் தீ இன்றும் அணையாமல் பசித்தோர்க்கு உணவளித்து வருகிறது. இந்தத் தருமசாலையைத் தேடி வருபவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்படுகிறது