உகரம்
(இரண்டாம் பருவம்)
அன்னை தெரசா 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் நாள் தென் யுகோஸ்லாவியாவில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஷா போஜ்ஷேவ் (Agnes Gonsha Bhojshew). இவர், சிறுவயதிலிருந்தே பிறருக்குத் தொண்டு செய்யும் நல்ல உள்ளம் கொண்டு விளங்கினார். தமது 18ஆவது வயதில் அயர்லாந்து நாட்டில் இருந்த லொரேட்டோ கன்னித் துறவிமார் திருச்சபை மடத்தில் சேர்ந்தார். பின்னர், ஓராண்டு கழித்து இந்தியாவிலுள்ள கொல்கத்தாவுக்கு வந்தார். அங்குக் கன்னித்துறவிகள் நடத்திவந்த புனிதமேரிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
நோய், வறுமை போன்ற காரணங்களினால் துன்பப்படுகின்ற சிறு வயது குழந்தைகள், முதியோர்கள் போன்றவர்களின் துயரங்களைப் போக்குவதில் அன்னை தெரசா தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
ஒரு முறை அன்னை தெரசா. தொழுநோயால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவரைப் பார்த்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அவர், சிகிச்சைபெற உதவினார். ஆனால், மருத்துவமனையிலிருந்த மற்ற நோயாளிகளின் நிலை அவரைப் பெரிதும் பாதித்தது.
அவர்களைப் பராமரிக்க நினைத்தார். அதற்காகப் பலரின் உதவியை நாடினார். அவர்களைப் பாதுகாக்கவும் சிகிச்சை அளிக்கவும் இட வசதி கேட்டார். அப்போது, சுகாதார அலுவலர் ஒருவர், இரண்டு அறையைக் காண்பித்தார். அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கூறியதைக் கேட்ட தெரசா மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
தம்முடன் இருந்த தன்னார்வலர்களை அழைத்தார். அவர்களிடம் ‘அறையைத் தூய்மை செய்யுங்கள்; இங்குதான் நம் பணி தொடரப் போகிறது; தொழுநோய் பாதித்தவர்களைக் கவனத்துடனும் பரிவுடனும் பார்த்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.
தொழுநோய் பாதித்த ஒருவரைத் தெரேசா சுத்தம் செய்துகொண்டிருந்தார். அதனைக் கண்ட அவரின் நண்பர், ‘எவ்வளவு பணம் கொடுத்தாலும் இதுபோன்ற செயல்களை நான் செய்யமாட்டேன்' என்றார். அதற்குத் தெரசா, ‘இச்செயலைச் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனெனில், தொழுநோயாளிகள் என்று எவரும் இல்லை. தொழுநோய் என்ற வியாதி மட்டுமே இருக்கிறது. அதையும் குணப்படுத்திவிட முடியும்’ என்றார். நண்பர் தெரசாவின் அன்னை உள்ளத்தை உணர்ந்து பாராட்டினார்.
பல இன்னல்கள் அவருக்கு வந்தபோதிலும், தாம் எடுத்த காரியத்தில் பின்வாங்காமல் ஏழைமக்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும் என்பதையும், அவர்களின் பசி நீங்கவேண்டும் என்பதையுமே தம் முழுமூச்சாகக் கொண்டார். அதன் பின்னரே கொல்கத்தா மாநகரில் “அன்பின் பணியாளர்” (Missionaries of Charity) என்ற சபையினை நிறுவிப் பலரும் ஏழை மக்களுக்காகத் தொண்டு செய்ய வழிவகுத்தார்.
“உண்ண உணவு, உடுத்த உடை இல்லாதவர்கள், வீடு இழந்தவர்கள், மாற்றுத் திறனாளிகள், தொழுநோயாளிகள் ஆகியவர்களையும், சமூகத்திற்கே பெரும் பாரமெனக் கருதப்பட்டு அனைவராலும் வெறுக்கப்பட்டவர்களையும் கவனித்தலே இந்தச் சபையின் குறிக்கோள் ஆகும்” என்றார் தெரசா. இந்தக் குறிக்கோளைச் செயல்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டார். கொல்கத்தாவில் பதின்மூன்று உறுப்பினரோடு தொடங்கப்பட்ட இச்சபை, இவர் இறந்தபோது நூற்றிருபத்து மூன்று நாடுகளில் அறுநூற்றுப் பத்துச் சபைகளாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகிலேயே மனித குலத்திற்குத் தொண்டுகள் செய்ததற்காக அதிக அளவு விருது பெற்றவராக அன்னை தெரசா விளங்குகிறார். சமூகசேவை, சகிப்புத்தன்மை மூலம் இவரது புகழ் உலகம் முழுவதும் பரவியது. 1962ஆம் ஆண்டு அன்னை தெரசாவின் தொண்டுகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கியது. அதே ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் ரமோன் மக்சேசே அமைப்பு, இவரின் தொண்டினைப் பாராட்டி விருது வழங்கிச் சிறப்பித்தது. 1969ஆம் ஆண்டு சர்வதேசப் புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது அன்னை தெரசாவிற்கு வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1979இல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதும் அன்னை தெரசாவிற்குக் கிடைத்தன.
இவை மட்டுமல்லாமல், அமெரிக்க ஜனாதிபதி பதக்கம், ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆர்டர் ஆஃப் மெரிட் உள்ளிட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட விருதுகளையும் சிறப்புகளையும் இவர் பெற்றுள்ளார்.
| 1. | சிகிச்சை | - | மருத்துவம் | ||
| 2. | நோயாளி | - | உடல்நலம் இல்லாதவர் | ||
| 3. | தன்னார்வலர் | - | தன்னலம் கருதாது விருப்பத்துடன் தொண்டு செய்பவர் | ||
| 4. | பரிவு | - | அன்பு | ||
| 5. | சுத்தம் | - | தூய்மை | ||
| 6. | வியாதி | - | நோய் |
அன்னை தெரசா, தொழுநோயால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அன்னை தெரசா, பிறரிடம் நோயாளிகளை பாதுகாக்கவும் சிகிச்சை அளிக்கவும் இடவசதி கேட்டார்.
அன்னை தெரசா, தொழுநோய் பாதித்த ஒருவரைச் சுத்தம் செய்தகொண்டிருந்தார். இச்செயலைக் கண்ட அவரின் நண்பர், ‘எவ்வளவு பணம் கொடுத்தாலும் இதுபோன்ற செயல்களை நான் செய்யமாட்டான்’ என்று கூறினார்.
அன்னை தெரசா, தொழுநோயளிகள் என்று எவரும் இல்லை. தொழுநோய் என்ற வியாதி மட்டுமே இருக்கிறது. அதையும் குணப்படுத்திவிடமுடியும் என்றார். மேலும் நண்பரிடம் தெரசா ’இச்செயலைச் செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறினார்.
1962 ஆம் ஆண்டு அன்னை தெரசாவின் தொண்டுகளைப் பாராட்டி இந்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருது வழங்கியது. அதே ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டின் ரமோன் மகசேசே விருது, 1969ஆம் ஆண்டு சர்வதேசப் புரிந்துணர்வுக்கான ஜவஹர்லால் நேரு விருது வழங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1979இல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதும் அன்னை தெரசாவிற்கு வழங்கப்பட்டன. இவை மட்டுமல்லாமல், அமெரிக்க ஜனாதிபதி பதக்கம், ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஆர்டர் ஆஃப் மெரிட் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட விருதுகளையும் சிறப்புகளையும் இவர் பெற்றுள்ளார்.