ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 2
2.5 கேட்டல் கருத்தறிதல்

செல்வத்துப் பயனே ஈதல்

ஓர் ஊரில் முனியப்பன் என்பவன் இருந்தான். அவன் மிகவும் வசதி படைத்தவன். அதே ஊரில் பொன்னன் என்பவனும் இருந்தான். அவன் அவ்வளவு வசதியில்லாதவன். இருந்தபோதும் ஊரில் இருந்தவர்கள் பொன்னனுக்கு அளித்த மதிப்பும் மரியாதையும் முனியப்பனுக்குத் தரவில்லை. ஒருநாள் ஒரு துறவி அந்த ஊருக்கு வந்தார். அவரிடம் பலரும் தத்தமது குறைகளைச் சொல்லி ஆறுதல் பெற்றனர். முனியப்பனும் துறவியைக் கண்டான். தன்னை யாரும் மதிப்பதில்லை என்று குறைபட்டுக் கொண்டான். அப்போது அங்குப் பொன்னனும் வந்தான். அங்கிருந்த ஊர்மக்கள், பொன்னனை வாழ்த்தினர். பொன்னன், அனைவரையும் வணங்கிவிட்டுத் துறவியைக் காணச் சென்றான். துறவி அனைத்தையும் உற்றுநோக்கினார். முனியப்பனை வணங்காத ஊர்மக்கள், பொன்னனை வாழ்த்துவது ஏன் எனக் சிந்தித்தார். அவருக்கு விடை கிடைத்தது. பொன்னன் சென்றபிறகு. முனியப்பனை அழைத்தார். உன்னைவிட வசதியில் குறைந்து இருந்தும் பொன்னன் ஊர்மக்களுக்கு நன்மை செய்கிறான். அவர்களிடம் நலம் விசாரிக்கிறான். அவர்களோடு இணக்கமாகப் பழகுகிறான். அவனது உழைப்பில் ஈட்டும் தொகையில் சிறிதளவு பிறருக்கும் கொடுத்து உதவுகிறான். அதனால்தான் அவனை எல்லாரும் மதிக்கிறார்கள். ஆனால், உன்னிடம் செல்வம் மிகுந்திருந்தாலும், பிறருக்குக் கொடுக்க மனமில்லை. இரக்கமும் அன்பும் இருந்தாலே போதும். பொருள் கொடுத்து உதவினாலும் உதவாவிட்டாலும் ஊர்மக்கள் உன்னையும் மதிப்பார்கள் என்றார் துறவி. அவர் கூறிய கருத்துக்கு உடன்பட்ட முனியப்பனும் உண்மையை உணர்ந்து, துறவிக்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றான்.

வினாக்கள்

முனியப்பன் வசதி படைத்தவன். அவனிடம் செல்வம் மிகுந்திருந்தாலும், பிறருக்குக் கொடுக்க மனமில்லை.

பொன்னன் ஊர் மக்களுக்கு நன்மை செய்கிறான்; அவர்களிடம் நலம் விசாரிக்கிறான்; அவர்களோடு இணக்கமாகப் பழகுகிறான்; அவனது உழைப்பில் ஈட்டும் தொகையில் சிறிதளவு பிறருக்கும் கொடுத்து உதவுகிறான். அதனால் தான் அவனை எல்லாரும் மதிக்கிறார்கள்.

துறவியிடம் முனியப்பன் தன்னை யாரும் மதிப்பதில்லை என்று குறைபட்டுக் கொண்டான்.

பொன்னன் சிறந்த பண்பாளன் என்பதை துறவி, ஊர்மக்களிடம் அவன் காட்டும் அன்பையும் மற்றவருக்கு கொடுக்கும் ஈகை குணத்தையும் உற்று நோக்கிக் கண்டறிந்தார்.

கதையின் வாயிலாக நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய பண்புகள் இரக்கமும் அன்பும் பிறருக்குக் கொடுக்கும் ஈகை குணமும் ஆகும்.

தகவல் துளி

இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும் சிறந்த எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்படுகிறது. இது, இலக்கியத்திற்காக வழங்கப்படும் ஓர் உயரிய விருதாகும். இந்த விருதானது காசோலை, பட்டயம், பாராட்டுச்சான்றிதழ், சரசுவதி சிலை ஆகியவற்றை உள்ளடக்கியது. பாரதிய ஞானபீடம் பண்பாட்டு இலக்கியக்கழகம் என்னும் அமைப்பு இந்த விருதினை வழங்குகிறது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ மொழிகளில் எழுதும் எந்த ஓர் எழுத்தாளரும் இவ்விருதினைப் பெற தகுதிடையவர் ஆவார். தமிழில் முதன்முதலில் ஞானபீட விருதுபெற்ற எழுத்தாளர் அகிலன். இவர், தமது சித்திரப்பாவை என்னும் நூலுக்காக இவ்விருதினைப் பெற்றார்.


ஞானபீட விருது