ழகரம்
(முதல் பருவம்)
உலக மக்களை வேறுபடுத்திப் பார்க்காத உயரிய சிந்தனை தமிழர்களுக்கு உண்டு. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் வாயிலாக இதனை அறிந்துகொள்ளலாம். உலக ஒற்றுமையை வலியுறுத்திப் பாடப்பட்ட பாடல்கள் தமிழில் மிகுதியாக உள்ளன. அவற்றுள்ளும் சகோதரத்துவச் சிந்தனையை உலகம் முழுவதும் கொண்டு சென்றது ஒரு பாடல். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனத் தொடங்கும் அப்பாடல், எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றில் (பாடல் 192) அமைந்துள்ளது. இப்பாடற்கருத்தை மேற்கோளாகக் காட்டிப் பேசாத பேச்சாளரே தமிழ்நாட்டில் இல்லை எனலாம்.
மனிதநேயச் சிந்தனைகளை வலியுறுத்தும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் பாடலைக் கணியன் பூங்குன்றனார் பாடினார். அந்தப் பாடல் உலகம் முழுவதையும் ஒரு குடும்பமாகப் பார்க்கிறது. எல்லா ஊரும் என்னுடைய ஊர்தான். எல்லா மக்களும் என்னுடைய உறவினர்தாம். நன்மையும் தீமையும் என்னால்தான் ஏற்படுமே தவிர வேறு யாராலும் ஏற்படாது. துன்பம் ஏற்படுவதும் பின்னர் அது தீர்வதும் அத்தகையதே. இறப்பு என்பது புதிய செய்தி அன்று. இயல்பாக நடப்பதுதான். வாழ்தல் இனிது என்று மகிழ்ச்சி அடைவதும், வெறுப்பு தோன்றும்போது இன்னாதது எனக் கூறுவதும் அறிவுடையவருக்குப் பொருந்தாது. ஆற்றிலே மிதந்து செல்லும் சிறு ஓடம்போல, இவ்வுலக உயிர்கள் விதியின்படி செல்லும் இயல்புடையன. ஆதலால், நற்செயல்கள் செய்தால், வாழ்க்கை நல்வழியில் செல்லும். எனவே, அறியாமையால் பெருமை கருதிப் பெரியோரை உயர்த்திப் பேசுதலும் சிறுமை கருதிச் சிறியோரை இகழ்ந்து பேசுதலும் கூடாது என்பன பாடலில் கூறப்பட்ட சிறந்த கருத்துகளாகும். பாடலைப் படித்து மகிழ்வோம். உலக ஒற்றுமையைக் காப்போம்.
| 1. | கேளிர் | - | உறவினர் | ||
| 2. | நோதல் | - | துன்புறுதல் | ||
| 3. | தணிதல் | - | ஆறுதல் | ||
| 4. | புணை | - | சிறிய ஓடம் | ||
| 5. | மாட்சி | - | பெருமை |
”யாதும் ஊரே யாவரும் கேளிர்”
கணியன் பூங்குன்றனார்
உறவினர்
இன்பம் வரும்போது மகிழ்ச்சி அடையவும் கூடாது; துன்பம் வரும்போது வெறுக்கவும் கூடாது என்று கணியன் பூங்குன்றனார் கூறுகிறார்.
’ஆற்றிலே மிதந்து செல்லும் சிறு ஓடம்போல, இவ்வுலக உயிர்கள் விதியின் படி செல்லும் இயல்புடையன’ என்ற உண்மையை இப் பாடல் அடி உணர்த்துகிறது.