ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 5
5.5 கேட்டல் கருத்தறிதல்

அன்பு பரிசு

விடிந்தால் புத்தாண்டு, கமலா பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். வீட்டைத் தூய்மைப்படுத்துவதற்கே பாதி நேரம் போயிற்று. இது தெரியாமல், அன்பும் எழினியும் வீடு முழுக்கத் தாள்களைக் கிழித்துப் போட்டுக்கொண்டு இருந்தார்கள். கமலாவுக்கு வந்ததே கோபம். இருவரையும் அழைத்துக் கடுமையாகத் திட்டிவிட்டாள். உதவவில்லை என்றாலும் பரவாயில்லை. தொல்லை செய்யாதீர்கள் என்று கடிந்துகொண்டாள். அம்மாவின் கோபத்தைக் கண்டு குழந்தைகள் சற்றுப் பயந்துவிட்டனர். இருவரும் அமைதியாக இருந்தனர்.

காலையில் கண்விழித்த கமலா, தன்னருகே வண்ணத் தாள்களாலான சிறு அட்டைப்பெட்டியைக் கண்டாள். அதன்மேல், அன்புள்ள அம்மாவிற்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள் என்று எழுதியிருந்தது. கமலா அதனைப் பிரித்தாள். உள்ளே அழகான குருவிக்கூடு. அதில், தாய்ப்பறவை உணவூட்ட, பறவைக் குஞ்சுகள் உணவு உண்பதுபோல சிறுசிறு துண்டுத்தாள்களைக் கொண்டு ஒட்டப்பட்ட படம் இருந்தது. அதனைக் கண்ட கமலாவின் கண்ணீர் துளிர்த்தது. தன் குழந்தைகள் நேற்று இதைத்தான் செய்துகொண்டு இருந்திருக்கிறார்கள். அவர்களுடைய மனத்தைப் புண்படுத்திவிட்டேனே! என்று எண்ணி வருந்தினாள். அப்போது குழந்தைகள் இருவரும் அவளுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் பரிசு பிடித்திருக்கிறதா? என்று கேட்டனர். கமலா தலையை ஆட்டினாள். குழந்தைகள் தங்களுடைய அன்பையே பரிசாகக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், நான்? என்று யோசித்த கமலா, அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன என்பதைப் புரிந்துகொண்டாள்.

வினாக்கள்

விடிந்தால் புத்தாண்டு, அதனால் கமலா பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள்.

கமலாவின் குழந்தைகள் வீடு முழுக்கத் தாள்களைக் கிழித்துப் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.

அட்டைப்பெட்டிக்குள் குருவிக்கூடு. அதில் தாய்ப்பறவை உணவூட்ட குஞ்சுகள் உண்பதுபோல சிறுசிறு துண்டுத்தாள்களைக் கொண்டு ஒட்டப்பட்ட படம் இருந்தது.

தாய்ப்பறவை உணவூட்ட, பறவைக் குஞ்சுகள் உணவு உண்பதுபோல சிறுசிறு துண்டுத்தாள்களைக் கொண்டு ஒட்டப்பட்ட படத்துடன் அழகிய குருவிக்கூடு தாய் அன்பை விளக்குவதாக இருந்தது அதன் சிறப்பாகும்.

புத்தாண்டு பரிசு அல்லது தாய் உள்ளம்.

தகவல்துளி

விலங்குகளுள் யானைகள் கூட்டமாக வாழும் இயல்பு கொண்டவை. மனிதர்களைப்போல, குடும்ப உறவுகளைப் பேணுபவை. குடும்பத்தில், பெண்யானைகளுக்கு முதன்மை உண்டு. இடம்விட்டு இடம் நகரும்போது பெண் யானையே முன்னால் சென்று வழிகாட்டுகிறது. அதனைப் பின்தொடர்ந்துதான் மற்ற யானைகள் செல்கின்றன. குழந்தைகள் தன் தாயின் கைகளைப் பிடித்து நடப்பதைப் போன்றே, யானைக் கன்றும் தன் தாய் யானையின் வாலைப் பிடித்து நடக்கும்.