ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 11
11.2 படிப்போம்

உலககளாவிய தொழிற்புரட்சி

தொடக்கத்தில் மக்களின் சமூக, பொருளாதார அமைப்புமுறை பல்வேறு தொழில்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. பின்னர் ஏற்பட்ட அறிவியல் முன்னேற்றத்தினால், தொழில் துறையில் பெரும் மாறுதல்கள் உண்டாயின. இத்தகைய மாறுதல்களால் தொழில்துறையில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையே தொழிற்புரட்சி என்கிறோம்.

தொழிற்புரட்சியின் தோற்றம்

தொழிற்புரட்சி, இங்கிலாந்தில்தான் முதன்முதலில் தோற்றம் பெற்றது. பின்னர், ஐரோப்பா, வடஅமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி, இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் பரவியது. தொழிற்புரட்சியின் காரணமாக ஒரு நாட்டின் பொருளாதாரம் வேளாண்மையை மட்டும் சார்ந்திருந்த நிலை மாறித் தொழிலகப் படைப்புகளின் பங்களிப்பும் ஏற்படத் தொடங்கியது. கைகளால் செய்யப்பட்டு வந்த பஞ்சு நூற்பாலை முதல் பல தொழில்கள் இயந்திரமயமாகின. இதனால், பெரும் எண்ணிக்கையில் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டன. அச்சுத்தொழில், மக்கள் தொடர்பு ஊடகங்கள், போக்குவரத்து, கல்வி, மருத்துவம் முதலானபல துறைகள் பெருகத் தொடங்கின.

நெசவு

மக்கள்தொகைப் பெருக்கத்தினால், துணிகளின் தேவை அதிகரித்தது. இதனால், நெசவுத்தொழிலுக்கு உதவும் இயந்திரங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பருத்தித் துணிகளின் உற்பத்தி பன்மடங்கு பெருகியது. நாளடைவில் தையல் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், பருத்தித் துணியாலான அழகிய ஆடைகள் உருவாயின.

வேளாண்மை

வேளாண்மை துறையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் உதவியால் நிலங்களைப் பண்படுத்துவதற்குப் புதிய கருவிகள் தயாரிக்கப்பட்டன. இதன் மூலம் வேளாண்மையில் உடல் உழைப்பின் பங்கு குறைந்து இயந்திரங்களின் பங்கு பெருகியது. ‘டிரில்‘ என்னும் விதை விதைக்கும் கருவி, எஃகினாலான கலப்பைகள், கதிர் அறுக்க உதவும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மண்ணை வளப்படுத்த பயிர்சுழற்சிமுறை செயல்படுத்தப்பட்டது.

போக்குவரத்து

தொழிற்புரட்சியினால் உற்பத்தி அதிகரித்தது. இதனால், வாணிகம் பெருகியது. உற்பத்தியாகும் பொருள்களை உலகெங்கும் கொண்டு செல்ல, போக்குவரத்தின் தேவை ஏற்பட்டது. புதிய சாலைகள் உருவாக்கப்பட்டன. ஐன் மெக்காடம் என்பவர் உறுதியான மேற்பரப்பு கொண்ட சாலைகளை அமைத்தார். ஆனால், கனமான பொருள்களை எடுத்துச் செல்ல நீர்ப்போக்குவரத்து தேவைப்பட்டது. இதற்குப் பிரிட்ஜ் வாட்டர் டியூக் மற்றும் ஜேம்ஸ் பிரின்ட்லியும் உதவினர். ஜார்ஜ் ஸ்டீவன்சன் கண்டுபிடித்த நீராவி இயந்திரம் இரயில் பாதை தொடங்க உதவியது. இரப்பரைக்கொண்டு சக்கரங்கள் உருவாக்கியதால் சாலைப்போக்குவரத்தில் பெரும்புரட்சி ஏற்பட்டது.

தகவல் தொடர்பு

செய்திகளைப் பரிமாறிக்கொள்ளும் தகவல் தொடர்புத் துறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ரௌலண்ட் ஹில் என்பவர், இங்கிலாந்தில் அஞ்சல் முறையை ஏற்படுத்தினார். இவரை ‘நவீன அஞ்சல் முறையின் தந்தை‘ என அழைக்கிறோம். மின்னாற்றல் கண்டுபிடிக்கப்பட்டபின் தந்தி, தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி முதலான கருவிகள் தோற்றம் பெற்றன.

தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட விளைவுகள்

தொழிற்புரட்சியினால் ஏராளமான நன்மைகள் ஏற்பட்டன. பெரிய ஆலைகள் அமைக்கப்பட்டதால், பொருள் உற்பத்தி அதிகரித்தது. அதிக எண்ணிக்கையிலும் விலை மலிவாகவும் விரைவாகவும் பொருள்கள் தயாரிக்கப்பட்டன.

நன்மைகள் ஏற்பட்டாலும் தொழிற்புரட்சியால் பாதிப்புகளும் ஏற்பட்டன. தொழிற்சாலைகள் பெருகியதால் அதிக மக்கள் நகர்பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். இதனால், நகரப்பகுதிகளில் கூட்ட நெரிசல், சுகாதாரமற்ற வாழ்க்கை, தொற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டன.

தொழிற்சாலைகள் பெருமளவு தோற்றம் பெற்றதால், சிறுதொழில்கள் செல்வாக்கு இழந்தன. மேலும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.

தொழிற்சாலை முறையால் முதலாளி, தொழிலாளி என்னும் பிரிவுகள் உண்டாயின. கடுமையான வேலை, குறைந்த கூலி இவற்றால் தொழிலாளிகள் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாகத் தொழிற்சங்கங்கள் உருவாயின.

இன்றைய அறிவியல் தொழில்நுட்பம், தொழிற்புரட்சிக்குப் பெரிதும் உதவுகிறது. பாதிப்புகளைக் குறைத்து, நன்மைகளை அதிகரித்ததன் மூலமாக தொழிற்புரட்சியினால் ஏற்பட்ட மாற்றத்தை நம்மால் காணமுடிகிறது. மக்களின் பொருளாதாரம், நாகரிகம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன. வருங்கால இளைஞர் சமுதாயம் இதனை நன்குணர்ந்து உலகளாவிய தொழிற்புரட்சிக்கு மேலும் வழிவகுக்கலாம்.

பொருள் அறிவோம்

1. வேளாண்மை - உழவு
2. உற்பத்தி - தயாரிப்பு
3. இயந்திரம் - கருவி
4. கனமான - எடை மிகுந்த
5. மலிவு - குறைவு
6. பாதிப்பு - தாக்கம்

விடை காண்போம்

அறிவியல் முன்னேற்றத்தினால், தொழில் துறையில் பெரும் மாறுதல்கள் உண்டாயின. இத்தகைய மாறுதல்களால் தொழில்துறையில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டது. இதனையே தொழிற்புரட்சி என்கிறோம்.

தொழிற்புரட்சி முதன்முதலில் இங்கிலாந்தில் தோன்றியது.

வேளாண்மைத் துறையில் ஏற்பட்ட மாறுதலே பசுமைப்புரட்சி என்பர்.

ரௌலண்ட் ஹில் என்பவர் “நவீன அஞ்சல் முறையின் தந்தை” என அழைக்கப்பட்டார்.

தொழிற்புரட்சியினால் ஏராளமான நன்மைகள் ஏற்பட்டன. பெரிய ஆலைகள் அமைக்கப்பட்டதால், பொருள் உற்பத்தி அதிகரித்தது. அதிக எண்ணிக்கையிலும் விலை மலிவாகவும் விரைவாகவும் பொருள்கள் தயாரிக்கப்பட்டன. இதனால், வாணிகம் பெருகியது.

6. தொழிற்புரட்சியின் விளைவாக தொழிற்சாலைகள் பெருமளவு தோற்றம் பெற்றதால், சிறுதொழில்கள் செல்வாக்கு இழந்தன. மேலும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் கழிவுகளால் மக்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டது.