ழகரம்
(முதல் பருவம்)
இசை, நமது மனத்தை மகிழ்விக்க வல்லது. இசைக்கு மயங்காத உயிர்கள் இல்லை. இசைக்கு மொழியும் இல்லை. இசைக்கலைக்கு உயிரூட்டிய கலைஞர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ளனர். அவர்கள் தமது இசை ஆர்வத்தைச் சிறுவயதிலேயே வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர், லுட்விக் வான் பீத்தோவன். அவர், தமது ஆறாவது வயதிலேயே மேடையேறி, இசைத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். லுட்விக் வான் பீத்தோவன் ஜெர்மனி நாட்டிலுள்ள பான் என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய தந்தை, யோகன் பீத்தோவன். இவர் சிறந்த இசை ஆசிரியர். ஆதலால், தம் மகனுக்கும் அவரே இசை கற்றுக்கொடுத்தார். பீத்தோவன் தம் தந்தையிடம் மட்டுமல்லாமல், பிறரிடமும் பியானோ, வயலின் ஆகியவற்றை வாசிக்கக் கற்றுக்கொண்டார். |
|
பீத்தோவன் வாழ்வில் குறிப்பிடத்தக்க இசை ஆசிரியர் கிறிஸ்டியன் கோட்லாப் நீஃப். அவரிடம் இசை எழுதக் கற்றுக்கொண்டதுடன், தமது முதல் இசைப்படைப்பையும் பீத்தோவன் வெளியிட்டார். நீஃப்பின் துணை இசைக்கலைஞராகப் பணியாற்றிய பீத்தோவன், அரசவைக் குழுவிலும் இடம்பெற்றார்.
பீத்தோவனது காலத்தில், வியன்னா நகரில் புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் மொசார்ட். அவருடன் இணைந்து பணியாற்றப் பீத்தோவன் முடிவு செய்தார். அதனால், வியன்னாவிற்குச் சென்று, மொசார்ட்டைச் சந்தித்தார். ஆனால், வியன்னாவில் இருந்த சிறிது காலத்திற்குள், தாயின் மறைவுச் செய்தியைக் கேட்க நேர்ந்தது, அதனால், பான் நகருக்குத் திரும்பிச் சென்றார். அங்குத் தந்தையின் உடல் நலமும் பாதிப்படையவே, குடும்பப்பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளும் சூழல் உருவானது.
லுட்விக் வான் பீத்தோவன் தமது இருபத்தாறாவது வயதில், உடற்குறைபாட்டால் துன்புற்றார். அவரது செவிகள் சிறிது சிறிதாகக் கேட்கும் திறனை இழந்து கொண்டிருந்தன. ஏறக்குறைய பதினைந்து ஆண்டிற்குப்பின் அவர் கேட்கும் தகுதியை முற்றிலுமாக இழந்தார்.
காதுகேளாத தன்மையுடன் டைபஸ் என்னும் நோயும் அவருக்கு இருந்தது. மேலும், இருமுனையப் பிறழ்வு என்னும் மனநோயாலும் துயருற்றார்.
பீத்தோவன் உடல்நலமில்லாத காலத்திலும், இசைமீது தாம் கொண்டிருந்த பற்றை விடவில்லை. பியானோவும் வயலினும் நன்கு வாசிக்கத் தெரிந்த அவர், சிறந்த இசையமைப்பாளர் ஆவார். அவருடைய சிம்ஃபொனி (Symphony) என்னும் ஒத்தினி இசையில் ஐந்தாவதும் ஒன்பதாவதும் ஒரு வயலின் இசைவடிவம், முப்பத்திரண்டு பியானோ தனியிசை வடிவங்கள், பதினாறு நரம்பிசை வடிவங்கள் மிகவும் புகழ்பெற்றவை ஆகும்.
பீத்தோவன் தனது ஒன்பதாம் ஒத்தினி இசையை வாசிக்கும்போது, அந்த இசை அவரது காதுகளில் விழவில்லை. பார்வையாளர்களின் கைத்தட்டல்கூட அவருக்கு எட்டவில்லை. பின்னர், தம் இசையை அனைவரும் பாராட்டுவதை உணர்ந்த பீத்தோவன், பொதுமக்கள் முன்னிலையில் வாசிப்பதை நிறுத்திக்கொண்டார். அந்த அளவிற்கு அவர் காது கேளாமையால் துன்பப்பட்டார்.
காது கேளாமை பிரச்சனையால் வருந்தினாலும், பீத்தோவன் பிறருடன் தமது தொடர்பைக் கைவிடவில்லை. தாம் கூற விரும்புவதை உரையாடல்களாக எழுதிக்காட்டினார். நண்பர்களும் அவரவர் கருத்துகளை உரையாடலாகப் பதிவுசெய்தனர். அதற்கு மறுமொழியாகப் பீத்தோவன் வாய்மொழியாகவோ எழுத்து வாயிலாகவோ விடை கூறுவார். இதுபோன்று ஏறக்குறைய நானூறு உரையாடல் கையேடுகள் அவரிடம் இருந்தன. அவற்றுள் பல இப்போது இல்லை. எனினும் அவற்றுள் சிலவற்றை அவர்தம் அருங்காட்சியகத்தில் காணலாம்.
பீத்தோவனது வாழ்க்கை வரலாற்றை மையப்பொருளாகக் கொண்டு திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. அவருடைய எழுபத்தைந்தாம் ஆண்டின் நினைவாக, பான் நகரில் நினைவுச்சின்னம் வைக்கப்பட்டது. ஜெர்மனியில் இசையமைப்பபாளர் ஒருவருக்காக உருவாக்கப்பட்ட முதல் சிலை இதுவாகும்.
பாஸ்டன் நகரில் சிம்ஃபொனி அரங்கம் அமைக்கப்பட்டது. அதில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தகடுகளில் ஒரே ஒரு தகட்டில் மட்டும் பீத்தோவனது பெயர் இடம்பெற்றுள்ளது. மற்ற தகடுகள் அனைத்திலும் யாருடைய பெயரும் இல்லை. இதனால், பீத்தோவனது சிறப்பு நன்கு விளங்கும்.
பீத்தோவன் பிறந்த பான் நகரில், ஓர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இதே நகரில் பீத்தோவன் இசைவிழா என்ற பெயரில் இசைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. புதன்கோளின் மீதுள்ள மூன்றாவது கிண்ணக்குழிக்குப் பீத்தோவனது பெயர் சூட்டப்பட்டுள்ளமை, அவருக்குப் பெருமைசேர்க்கிறது.
இசைக்கலைஞர்கள் மறைந்தாலும் அவர்களுடைய இசைக்கு அழிவில்லை. அது என்றென்றும் நமது காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். மேற்கத்திய இசையில் செவ்விசையாளராக அறியப்பட்ட லுட்விக் வான் பீத்தோவனது பெயரும் என்றென்றும் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
| 1. | செவிகள் | - | காதுகள் | ||
| 2. | பற்று | - | விருப்பம் | ||
| 3. | துயருற்றார் | - | வருத்தப்பட்டார் | ||
| 4. | பிரச்சனை | - | சிக்கல் | ||
| 5. | நெஞ்சம் | - | உள்ளம் |
லுட்விக் வான் பீத்தோவன் ஜெர்மனி நாட்டிலுள்ள பான் என்னும் ஊரில் பிறந்தார்.
பீத்தோவின் இசை ஆசிரியர் கிறிஸ்டியன் கோட்லாப் நீஃப். அவரிடம், பீத்தோவன் இசை எழுதக் கற்றுக்கொண்டார். நீஃப்பின் துணை இசைக்கலைஞராகப் பீத்தோவன் பணியாற்றினார். நீஃப்பின் உதவியுடன் அரசவைக் குழுவிலும் இடம்பெற்றார்.
பீத்தோவன் வியன்னா நகரில் மொசார்ட் என்பவரைச் சந்திக்கச் சென்றார்.
காதுகேளாத தன்மையுடன் டைபஸ் என்னும் நோயும் அவருக்கு இருந்தது. மேலும், இருமுனையப் பிறழ்வு என்னும் மனநோயாலும் துயருற்றார்.
காது கேளாத நிலையிலும் பீத்தோவன், தாம் கூற விரும்புவதை நண்பர்களிடம் உரையாடல்களாக எழுதிக்காட்டினார்.
பீத்தோவனின் எழுபத்தைந்தாம் ஆண்டின் நினைவாக, ஜெர்மனியில் உள்ள பான் நகரில் இவருக்கு நினைவுச்சின்னம் வைக்கப்பட்டது. இதுவே ஜெர்மனியில் இசையமைப்பாளர் ஒருவருக்காக உருவாக்கப்பாட்ட முதல் சிலை ஆகும்.