ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 17
17.2 படிப்போம்

தமிழரின் அடையாளம் – பொருநை

உலகின் பல பகுதிகளில் அகழாய்வு நடைபெறுகிறது. அகழாய்வின் மூலம், மனிதன் வாழ்ந்த காலத்தையும் அவனது பண்பாட்டையும் அறிந்துகொள்ள முடிகிறது. இன்றைய தொழில்நுட்பத்தின் உதவியுடன் அகழாய்வில் கிடைக்கப்பெறும் பொருள்களைக்கொண்டு, அவற்றின் தொன்மை நிறுவப்படுகிறது. அவ்வகையில், ‘தமிழ்ப் பண்பாட்டின் தொட்டில்‘ என்று சிறப்பிக்கப்படும் ‘பொருநை‘ ஆற்றங்கரையில் நடைபெற்ற அகழாய்வு தமிழரின் தொன்மை, பண்பாட்டுக்கூறுகள் முதலியவற்றை வெளிப்படுத்தியுள்ளது.

இன்று தாமிரபரணி ஆறு என அழைக்கப்படும் பொருநை ஆற்றின் சிறப்பினைத் தமிழ் இலக்கியங்களில் காணலாம். ‘பொருநை‘, ‘பொருநல்‘, ‘பொருந்தம்‘, ‘தண்பொருநை‘, என இலக்கியங்களிலும் ‘தண்பொருந்தம்‘, ‘தாம்பபண்ணி‘ எனக் கல்வெட்டுகளிலும் பல பெயர்களில் இந்த ஆறு குறிக்கப்பட்டுள்ளது.

‘காவிரி, தென்பெண்ணை, பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை, பொருநை நதி

எனத் தமிழ்நாட்டின் வளம் பெருக உதவிய ஆறுகளுள் பொருநையையும் பாரதியார் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் முதல் அகழாய்வு, பொருநை ஆற்றங்கரை இடங்களில் ஒன்றான ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்டது. இந்த ஊர், பொருநை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. ஜெர்மனியைச் சேர்ந்த முனைவர் ஜாகோர் என்பவர், 1876ஆம் ஆண்டு ஆதிச்சநல்லூர் பறம்பில் ஆய்வு செய்துள்ளார். இரண்டாவது அகழாய்வினை அலெக்சாண்டர் ரீ என்பவர் 1903ஆம் ஆண்டில் மேற்கொண்டார். அவர் அகழ்ந்து எடுத்த தொல்பொருள்களைச் சென்னை அரசு அருங்காட்சியகத்தில் இப்போதும் காணலாம்.

இந்திய அரசின் தொல்லியல் கண்காணிப்பாளர் சத்தியமூர்த்தி 2003 – 2005ஆம் ஆண்டுகளில் மீண்டும் அகழாய்வு செய்தார். இங்கு நூற்று அறுபதுக்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுள் மட்பாண்டங்கள், வெண்கலம், இரும்பினால் செய்யப்பட்ட கிண்ணங்கள் முதலிய பொருள்கள் இருந்தன.

அகழாய்வில் கருப்பு - சிவப்பு நிற மட்பாண்டங்கள், நான்கு கால் உள்ள சாடிகள், வீடுகளின் களிமண் தரையைத் தேய்க்க உதவும் கற்கள், அரைவைக்கற்கள், கிண்ணங்கள் உள்ளிட்ட பொருள்கள் கிடைத்தன.

இரும்பால் செய்யப்பட்ட எறிவேல், ஈட்டி உள்ளிட்ட 32 வகையான வேட்டைக்கருவிகள், செம்பாலும் இரும்பாலும் செய்யப்பட்ட மோதிரங்கள், தந்தத்தில் செய்யப்பட்ட மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், தங்கத்தாலான பட்டங்கள் முதலிய அணிகலன்களும் கண்டெடுக்கப்பட்டன.

கழிவுநீர் செல்வதற்காகக் கிடைமட்டத்தில் அமைக்கப்பட்ட சுடுமண் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 847 தொல்பொருள்கள் இங்குக் கிடைத்துள்ளன. இத்தொல்பொருள்கள் பல ஆண்டுகளுக்குமுன் இங்கு வாழ்ந்த மக்களின் வாழ்க்கைமுறை, தொழில், பழக்கவழக்கங்கள் முதலியவற்றை உலகறியச் செய்துள்ளன.

பொருநை ஆற்றின் வடக்குக் கரையில் அமைந்துள்ள ஊர், ‘சிவகளை‘. இங்கு நடத்தப்பட்ட முதல்கட்ட அகழாய்வில், ‘ஆதன்‘ என்ற தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கிடைத்தது. கருப்பு - சிவப்பு வண்ணக்கலயங்கள், குடுவைகள், பானைமூடிகள் முதலியன கிடைத்தன. இவை அழகிய வடிவமைப்பில் வெள்ளை வண்ணவேலைப்பாடுகளுடன் இருந்தன.

சிவகளையில் கண்டெடுக்கப்பட்ட உமி நீக்கப்பட்ட நெல், கரிமப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதனை அமெரிக்காவிலுள்ள பீட்டா பகுப்பாய்வுச் சோதனை ஆய்வகம் மேற்கொண்டது. இச்சோதனையின் முடிவில், உமி நீக்கப்பட்ட நெல்லின் காலம் கி.மு. 1155ஆம் ஆண்டு என வரையறை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மனித நாகரிகம் தோன்றியுள்ளது என்பதை அறிய முடிகிறது.

பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொற்கை என்னும் இடத்தில் 1968ஆம் ஆண்டு அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த அகழாய்வில் சேகரிக்கப்பட்ட கரிமம் ஒன்றைப் பகுப்பாய்வு செய்ததில், இதன் காலம் கி.மு.785ஆம் ஆண்டு எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

கொற்கை அகழாய்வில் சங்கு வளையல்கள், வெள்ளி முத்திரைக் காசுகள், மெருகூட்டப்பட்ட கருமை நிறப் பானைகள் முதலியன கிடைத்தன. சங்கு வளையல்கள் அதிக அளவில் கிடைத்துள்ளதால், இங்குச் சங்கு வளையல் தயாரிக்கும் தொழில் நடைபெற்றிருக்கலாம் என அறியமுடிகிறது.

சதுர வடிவிலான செங்கல் கட்டுமானம் ஒன்றும் இங்குக் கிடைத்துள்ளது. இச்செங்கற்கள், சங்க காலத்தைச் சேர்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்கட்டுமானத்திற்கு அருகில் துளைகளுடன் கூடிய ஒன்பது அடுக்கு கொண்ட வடிகட்டும் குழாய் உள்ளது. இதன் அருகே மேற்கத்திய நாட்டுப் பானை ஓடுகளும் கிடைத்துள்ளன. இச்சான்றுகள், நெடுங்காலமாகத் தமிழ்நாடு பிறநாடுகளுடன் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது என்பதைத் தெரிவிக்கின்றன.

ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய ஊர்களைப் பெற்றுள்ள பொருநை ஆற்றங்கரை நாகரிகம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை அகழாய்வின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இங்குக் கிடைக்கப்பெற்ற வெண்கலம் முதலான பொருள்கள் தமிழர்களின் வளமான பொருளாதாரத்திற்கும் சமூக வாழ்க்கை நிலைக்கும் சான்றுகளாய் உள்ளன.

பொருள் அறிவோம்

1. மட்பாண்டங்கள் - மண்ணால் செய்த பொருள்கள்
2. தாழி - புதைத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட மட்கலன்
3. பகுப்பாய்வு - பரிசோதனை செய்தல்
4. உமி - நெல்லின் மீதுள்ள தோல்
5. சான்று - சாட்சி

பொருநை ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் அகழாய்வு நடைபெற்றது.

ஆதிச்சநல்லூரில் செம்பாலும் இரும்பாலும் செய்யப்பட்ட மோதிரங்கள், தந்தத்தில் செய்யப்பட்ட மணிகள், சுடுமண்ணால் செய்யப்பட்ட மணிகள், தங்கத்தாலான பட்டங்கள் முதலிய அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டன.

பொருநல், பொருந்தம், தண்பொருநை, தண்பொருந்தம், தாம்பபண்ணி, தாமிரபரணி என்பன பொருநை ஆற்றுக்கு வழங்கும் வேறு பெயர்கள் ஆகும்.

சிவகளையில் தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு, கறுப்பு – சிவப்பு வண்ணக் கலயங்கள், குடுவைகள், பானை மூடிகள், உமிநீக்கப்பட்ட நெல் முதலியன கிடைத்தன.

கொற்கை அகழாய்வில் சங்கு வளையல்கள், வெள்ளி முத்திரைக்காசுகள், மெருகூட்டப்பட்ட கருமை நிறப்பானைகள், சதுரவடிவிலான செங்கல் கட்டுமானம் முதலியன கிடைத்தன.

மனிதன் வாழ்ந்த காலத்தையும், தொன்மை, நாகரிகம், பண்பாட்டுக் கூறுகள் முதலியவற்றை அறிந்து கொள்வதே அகழாய்வு செய்வதற்கான நோக்கங்கள் ஆகும்.