ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 20
20.2 படிப்போம்

உயிர்காக்கும் வங்கிகள்

(மருத்துவர்களுடன் மாணவ, மாணவியர் கலந்துரையாடல்)
மாணவர்கள் : வணக்கம். உங்களுடன் கலந்துரையாடுவதில் மகிழ்ச்சி. மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள புதுமைகள் பற்றிச் சொல்லுங்கள்.
மருத்துவர்கள் : வணக்கம். மருத்துவ உலகில் ஏற்பட்டுள்ள புதுமைகளுள் குறிப்பிடத்தக்கவை உயிர் காக்கும் வங்கிகள்.
மாணவர்கள் : உயிர் காக்கும் வங்கிகளா? அப்படி என்றால் என்ன?
மருத்துவர்கள் : பொதுவாக, வங்கி என்பது நம்முடைய பணத்தையும் பொருளையும் சேமித்து வைக்கும் இடம். நமக்குத் தேவைப்படும்போது, அவற்றை எடுத்துப் பயன்படுத்தலாம். அதுபோல, உடல் உறுப்புகளைச் சேமித்து வைக்கும் இடமே உயிர் காக்கும் வங்கிகள். இவை, உயிருக்குப் போராடும் ஒருவருக்குத் தக்கநேரத்தில் உதவும்.
மாணவர்கள் : உண்மையிலேயே புதுமைதான். எந்ததெந்த உறுப்புகளை இவ்வாறு சேமித்து வைக்கலாம்? அவற்றைப் பற்றி ஒவ்வொன்றாகச் சொல்லுங்கள்.
கண் மருத்துவர் : முதலில் கண் வங்கி பற்றிச் சொல்கிறேன். உலகின் முதல் கண் வங்கியை நியூயார்க்கில் 1944ஆம் ஆண்டு மருத்துவர் ஆர். டௌன்லி பேடன் என்பவர் தொடங்கினார். கண் வங்கியின் மூலம், கண்தானம் ஊக்குவிக்கப்படுகிறது. இதன்மூலம் பெறப்படும் கருவிழிகள் முறையாகப் பரிசோதிக்கப்படுகின்றன. பின்னர், இவை கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு அனுப்பப்படுகின்றன. கருவிழி கூம்பல், விழி வெண்படலம், வடு போன்ற கண்திசுக்களும் இந்தக் கண் வங்கியில் தானமாகப் பெறப்படுகின்றன.
மாணவர்கள் : கண் வங்கி பற்றி அறிந்துகொண்டோம். இதுபோல, இரத்தத்தையும் சேமிப்பார்கள் என அறிந்துள்ளோம்.
பொதுநல மருத்துவர் : ஆம். இரத்தத்தைச் சேமிக்கும் வங்கியே இரத்த வங்கி. எதிர்பாராத விபத்துகள், நோய்கள், அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றின்போது நோயாளிகளுக்கு இரத்தம் தேவைப்படுகிறது. அவர்களுக்குத் தேவைப்படும் இரத்தத்தை இரத்த வங்கிகள் வழங்குகின்றன. 18 வயதிற்கு மேற்பட்ட, 50 கிலோ எடை கொண்ட, நல்ல உடல்நலத்துடன் இருக்கும் ஆண்களும் பெண்களும் இரத்த தானம் செய்யலாம். மேலும், இரத்த தானம் செய்பவர்கள் 6 மாதத்திற்கு ஒருமுறை தம் இரத்தத்தைத் தானமாக வழங்கலாம்.
மாணவர்கள் : இரத்த வங்கியின் மூலம் பெறப்படும் இரத்தம், உயிர் காக்க உதவுகிறது என்பதைப் புரிந்துகொண்டோம். அடுத்து எந்த வங்கியைப் பற்றிச் சொல்லப் போகிறீர்கள்?
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் : எலும்பு வங்கி பற்றிக் கூறுகிறேன். விபத்து, கிருமித்தொற்று, புற்றுநோய் காரணமாக எலும்புகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட எலும்பை எடுத்துவிட்டு, அங்கு மாற்று எலும்பைப் பொருத்துவதே எலும்பு மாற்றுச் சிகிச்சை. இதற்கு எலும்பு வங்கி உதவுகிறது. இறந்தவர்கள், மூளைச்சாவு ஏற்பட்டவர்கள் மற்றும் விருப்பம் உள்ளவர்கள் முதலானோரிடமிருந்து எலும்புகள் தானமாகப் பெறப்படுகின்றன. அவ்வாறு பெறப்பட்ட எலும்புகள், எலும்பு வங்கியில் முறையாகப் பாதுகாக்கப்படுகின்றன.
மாணவர்கள் : எலும்பு வங்கியின் இன்றியமையாமையைத் தெரிந்துகொண்டோம். அடுத்த வங்கி பற்றிச் சொல்லுங்கள்.
தோல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் : எலும்பு வங்கியின் இன்றியமையாமையைத் தெரிந்துகொண்டோம். அடுத்த வங்கி பற்றிச் சொல்லுங்கள்.
மாணவர்கள் : உயிர் காக்கும் வங்கிகள் பற்றிய செய்திகளை நன்கு தெரிந்துகொண்டோம். எங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தன.
மருத்துவர்கள் : உடல் உறுப்புத் தானம் பற்றிய விழிப்புணர்வும் உங்களுக்குத் தேவை. உடல் உறுப்புத் தானம் என்பது, ஒருவர் இறந்தபிறகு அவரது உடல் உறுப்புகளைத் தேவைப்படும் மற்றொருவருக்கு அளிப்பதாகும். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்படும். 2005ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13ஆம் நாள் உலக உடல் உறுப்புத் தான நாளாகக் கொண்டாடப்படுகிறது. மாணவர்களாகிய நீங்கள், உங்கள் பெற்றோர்க்கும் உறவினர்க்கும் உறுப்புத் தானத்தின் இன்றியமையாமையை எடுத்துக்கூற வேண்டும்.
மாணவர்கள் : நீங்கள் கூறியபடி, உயிர் காக்கும் வங்கிகள் பற்றியும் உறுப்புத் தானத்தின் தேவை பற்றியும் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவோம். மிக்க நன்றி.

பொருள் அறிவோம்

1. வங்கி - பொருளைச் சேமிக்கும் இடம்
2. பரிசோதித்தல் - ஆய்வு செய்தல்
3. தானம் - கொடுத்து உதவுதல்
4. சிகிச்சை - மருத்துவம்

கண் வங்கி, இரத்த வங்கி, எலும்பு வங்கி, தோல் வங்கி

கண்வங்கி என்பது கண் தானம் மூலம் பெறப்பட்ட கருவிழி, கூம்பல், விழி வெண்படலம், வடு போன்ற கண் திசுக்களும் தானமாகப் பெறப்பட்டு சேமிக்கப்படும் இடம் ஆகும்.

18 வயதிற்கு மேற்பட்ட 50 கிலோ எடை கொண்ட ஆண்களும் பெண்களும் நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும். இவர்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இரத்தத்தைத் தானமாக வழங்கலாம்.

உடல் உறுப்புத்தானம் என்பது, ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகளைத் தேவைப்படும் மற்றொருவருக்கு அளிப்பதாகும். இதனால் பல உயிர்கள் காப்பாற்றப்படும்.

உயிர் காக்கும் வங்கிகள் பற்றியும் உறுப்புத்தானத்தின் தேவைகள் பற்றியும் மாணவர்கள், பெற்றோர்க்கும் உறவினர்க்கும், மற்றவர்களுக்கும் எடுத்துக் கூறுவதன் வாயிலாக உயிர்காக்கும் வங்கிகளுக்கு உதவலாம்.