ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 22
22.2 படிப்போம்

தமிழரின் கப்பல் கட்டுமானத் தொழில்நுட்பம்

தொழில்நுட்பம் என்பது பல்வேறு அறிவியல் துறைகளின் அடிப்படையில் இயந்திரங்கள், கட்டடங்கள், சாலைகள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றை உருவாக்குதலும் அவற்றைப் பராமரித்தலும் ஆகும். இத்தகைய தொழில்நுட்ப அறிவைப் பழந்தமிழர்கள் பெற்றிருந்தனர். வேளாண்மை, பாதுகாப்பு, கட்டுமானம், கைவினைப்பொருள்கள், உற்பத்தி எனப் பல நிலைகளிலும் பழந்தமிழர்கள் தம் தொழில்நுட்ப அறிவை வெளிப்படுத்தினர்.

தமிழரின் கட்டுமானத் தொழில்நுட்ப அறிவை அவர்கள் உருவாக்கிய கப்பல்களில் காணலாம். அவர்கள் கடல் வாணிகத்தில் சிறந்து விளங்கியதற்கு இத்தொழில்நுட்மும் ஒரு சான்றாக உள்ளது. துறைமுகங்களில் கப்பல்கள் சுற்றித் திரிந்த காட்சிகள், இலக்கியங்களில் கவினுற விளக்கப்பட்டுள்ளன.

தமிழர் கடல் போக்குவரத்திற்காகப் பல்வேறு கலன்களை உருவாக்கினர். கடலில் செலுத்தப்படும் மரக்கலன்கள் பல பெயர்களில் அழைக்கப்பட்டன. வங்கம், பாதை, தோணி, யாணம், மதலை, திமில், பாறு, அம்பி, ஓங்கல், ஓடம், கலம், கட்டை, சொங்கு, கரிசல், வள்ளம், பஃடு, பஃறி, பகடு, பட்டிகை, படுவை, புணை, மிதவை, தெப்பம், சதா, நவ்வி, போதம், தொள்ளை, நாவாய், கப்பல் என்பன மரக்கலத்தின் வகைகளைக் குறிக்கும் பெயர்களாகும்.

தமிழர்கள் தாம் பயன்படுத்திய மரக்கலன்களை அவற்றின் பயன்பாட்டிற்கு ஏற்ப பல்வேறு வடிவங்களில் உருவாக்கினர். குதிரை, யானை, பறவை, மனிதன் எனக் கப்பலின் முகப்பில் பல்வேறு முக வடிவங்கள் இருந்தன.

கடலில் செல்லும் பெரிய கலத்தை நாவாய் என அழைத்தனர். பூம்புகார்த் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த நாவாய்கள் அலைகளால் அசைந்தன. அவை பார்ப்பதற்குக் கட்டுத்தறியில் கட்டப்பட்ட யானைகள் அசைவதுபோல் இருந்தன என்னும் செய்தி தமிழ் இலக்கியத்தில் உள்ளது. பெரிய நாவாய்கள் காற்றின் துணைகொண்டு இயங்கின. அவை பாய்மரக் கப்பல்கள் எனப்பட்டன. உப்பங்கழிகளில் செலுத்துவதற்குச் சிறிய படகுகளும் கடலில் செலுத்துவதற்குப் பெரிய நாவாய்களும் பயன்படுத்தப்பட்டன.

கடல் வாணிகத்தில் ஈடுபடுத்தப்படும் கலன்களில் பழுது ஏற்பட்டால் அவற்றை நீக்குவதற்காகக் கப்பல் பொறியாளர்கள் பணி அமர்த்தப்பட்டனர். பயணம் செய்யும்போது இவர்களும் உடனிருப்பர். இவர்களைப் ‘பண்ணிய விலைஞர்‘ எனப் பதிற்றுப்பத்து என்னும் நூல் குறிப்பிட்டுள்ளது.

கப்பல் கட்டுமானக் கூடத்தின் ஒரு பகுதியாக, பழுதுபட்ட கலன்களைச் செப்பனிடும் தொழிற்கூடம் அமைந்திருந்தது. கப்பல் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் வல்லுநர்கள் ‘கம்மியர்கள்‘ என அழைக்கப்பட்டனர். இவர்களைக் கப்பல் பயணத்தின்போது உடன் அழைத்துச் செல்லும் வழக்கம் இருந்ததை மணிமேகலை என்னும் காப்பியநூல் குறிப்பிட்டுள்ளது.

கடல் கடந்து செல்லும் வகையில், பலவகையான மரக்கலங்களைக் கட்டுவதில் பழந்தமிழர் சிறந்து விளங்கினர். பொருள்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்வதற்கு ஏற்பத் துறைமுகங்களை அமைப்பதிலும் வல்லுநர்களாகத் திகழ்ந்தனர்.

பழந்தமிழரின் தொழில்நுட்ப உத்திகளும் கண்டறிந்த கருவிகளும் இன்றைய பொறியியல் தொழில்நுட்பத் திறனுக்கு அடிப்படையாக உள்ளன. இவை, தமிழரின் வியக்கவைக்கும் அறிவியல் சிந்தனையை வெளிப்படுத்துகின்றன.

பொருள் அறிவோம்

1. கவினுற - அழகுபட
2. கலம் - கப்பல்
3. பழுது - குறைபாடு
4. செப்பனிடுதல் - குறை நீக்குதல்
5. உத்திகள் - முறைகள்

விடை காண்போம்

தொழில்நுட்பம் என்பது, பல்வேறு அறிவியல் துறைகளின் அடிப்படையில் இயந்திரங்கள், கட்டடங்கள், சாலைகள், விமானங்கள், கப்பல்கள் போன்றவற்றை உருவாக்குதலும் அவற்றைப் பராமரித்தலும் ஆகும்.

வேளாண்மை, பாதுகாப்பு, கட்டுமானம், கைவினைப்பொருள்கள், உற்பத்தி எனப் பல தொழில் நுட்பங்களில் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கினர்.

கப்பல் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் வல்லுநர்கள் ‘கம்மியர்கள்’ என அழைக்கப்பட்டனர். பழுது பட்ட கலன்களைச் செப்பனிடுவது இவர்களது பணி ஆகும்.

வங்கம், பாதை, தோணி, யாணம், மதலை, திமில், பாறு, அம்பி, ஓங்கல், ஓடம், கலம், கட்டை, சொங்கு, கரிசல், வள்ளம், பஃடு, பஃறி, பகடு, பட்டிகை, படுவை, புணை, மிதவை, தெப்பம், சதா, நவ்வி, போதம், தொள்ளை, நாவாய், கப்பல் என்பன மரக்கலத்தின் வகைகளைக் குறிக்கும் பெயர்களாகும்.

கடல் அலையில் அசையும் நாவாய்கள் பார்ப்பதற்குக் கட்டுத்தறியில் கட்டப்பட்ட யானைகள் அசைவது போல் இருந்தன என்று நாவாயை யானையுடன் ஒப்புமைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது.