ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 24
24.5 கேட்டல் கருத்தறிதல்

நிலத்தில் கிடைத்த மோதிரம்

அறிவுக்கரசன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில், வேலன் கூலிக்காக வேலை செய்துவந்தான். வழக்கம்போல வயலை உழுதுகொண்டிருக்கும்போது, ஒரு தங்க மோதிரத்தைக் கண்டெடுத்தான். வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் தான் கண்டெடுத்த மோதிரத்தைத் தன் மனைவியிடம் காட்டினான். அதைப் பார்த்ததும் அவன் மனைவி, தன் காதுக்குக் கம்மல் செய்து போட்டுக்கொள்ள ஆசைப்பட்டாள். “நிலம் அறிவுக்கரசனுக்குச் சொந்தமானது. நான் கூலிக்காகவே உழுகிறேன். நிலத்தில் கிடைப்பது அவரைத்தானே சேரும். நாம் எடுத்துக் கொள்வது அவருக்குத் துரோகம் செய்வதாகும்“ என்றான் வேலன்.

கணவன் கூறியதில் மனைவிக்கு உடன்பாடில்லை. “அறிவுக்கரசனுக்கு எப்படித் தெரியும்? அவர் வந்து பார்த்தாரா?” என்று அவள் வேலனிடம் வாதாடினாள். இருவருக்கும் இரவு முழுதும் தூக்கம் வரவில்லை. “அறிவுக்கரசன் வந்து பார்க்கவில்லைதான். ஆனாலும் என் மனச்சாட்சி உறுத்துகிறது“ என்று கூறிவிட்டு, காலையில் எழுந்தவுடன் அறிவுக்கரசனைப் போய்ப் பார்த்தான் வேலன். அவரிடம் உண்மையைக் கூறினான். அவன் கூறியதைக் கேட்ட அறிவுக்கரசன் மிகவும் மகிழ்ச்சி அடைந்து, “நிலம் என்னுடையதாக இருக்கலாம். ஆனால் உன் உழைப்பினால் கிடைத்தது இந்த மோதிரம். நீ நிலத்தை உழவில்லையெனில் இந்த மோதிரம் வெளியே வருவதற்கு வாய்ப்பே இல்லை. மேலும் கிடைத்த மோதிரத்தை நீயே எடுத்துக் கொள்ளாமல் என்னிடம் வந்து கொடுத்திருக்கிறாய். உன்னுடைய நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் இந்த மோதிரத்தை உனக்கே பரிசாகத் தருகிறேன்“ என்று அவனை வாழ்த்தி அனுப்பினார்.

வினாக்கள்

வேலன், அறிவுக்கரசனுக்குச் சொந்தமான நிலத்தில் உழவு வேலை செய்து வந்தான்.

வேலன் நிலத்தை உழும் போது தங்க மோதிரத்தைக் கண்டெடுத்தான்.

மோதிரத்தைப் பார்த்ததும் வேலனின் மனைவி காதுக்குக் கம்மல் செய்து போட்டுக் கொள்ளலாம் என்றாள்.

வேலன், நிலம் அறிவுக்கரசனுக்குச் சொந்தமானது. நான் கூலிக்காகவே உழுகிறேன். நிலத்தில் கிடைப்பது அவரைத்தானே சேரும். நாம் எடுத்துக் கொள்வது அவருக்குத் துரோகம் செய்வதாகும் என்றான்.

அறிவுக்கரசன், வேலனிடம் நிலத்தை உழவில்லை என்றால் மோதிரம் கிடைத்திருக்காது. மேலும் மோதிரத்தை எடுத்துக் கொள்ளாமல் என்னிடம் கொடுத்த உன்னுடைய நேர்மை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எனவே இந்த மோதிரம் உனக்கு தான் சொந்தம் என்று வேலனுக்கே பரிசாகக் கொடுத்தார்.

தகவல் துளி

ஔவையார் இயற்றிய அறநூல்களுள் ஒன்று ஆத்திசூடி. இந்நூலின் சிறப்பு யாதெனில், அகரவரிசை முறையில் பாடல்கள் அமைந்திருக்கும். ஒவ்வொரு பாடலும் ஓர் அடியை மட்டுமே கொண்டிருக்கும். ‘அறம் செய விரும்பு‘ என்பது இதன் முதல் பாடலாகும். ஆத்திசூடியின் சிறப்புணர்ந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆத்திசூடி நூல்கள் தோன்றியுள்ளன. மகாகவி பாரதியார் ‘புதிய ஆத்திசூடி‘ என்னும் பெயரிலும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ‘இளையார் ஆத்திசூடி‘ என்னும் பெயரிலும் எழுதியுள்ளனர். ஆத்திசூடிப் பாடல்கள் மிக எளிமையாகவும் சிறுசிறு தொடர்களாகவும் அமைந்திருப்பதால் அனைவராலும் விரும்பிக் கற்கப்படுகின்றன.


ஔவையார்