ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 26
26.2 படிப்போம்

உயிர் காத்த மருத்துவர்
(வானொலி உரைச்சித்திரம்)

அனைவருக்கும் வணக்கம். இன்று ஜூலை 1. இந்நாளைத் தேசிய மருத்துவர்கள் நாளாகக் கொண்டாடுகிறோம். இந்நன்னாளில் தன்னலம் அற்ற மருத்துவர் ஒருவரை உங்களிடையே அறிமுகப்படுத்துவதில், பிபிசி வானொலி நிலையம் பெருமை கொள்கிறது.

மருத்துவத்தொழிலை அறம் காக்கும் சேவையாகச் செய்தவர், ஒரு நூற்றாண்டின் ஈடுஇணையற்ற வரலாறாக வாழ்ந்தவர், அவர்தாம் மருத்துவர் சாந்தா அம்மையார். மருத்துவத்துறையில் அவர் செய்த அரிய சாதனைகளை இப்போது நாம் அறிந்துகொள்வோம்.

மருத்துவர் சாந்தா, சென்னையிலுள்ள மயிலாப்பூர் என்னும் இடத்தில் பிறந்தார். இவர், தொடக்கக் கல்வியைத் தம் தாயாரிடமே கற்றார். கல்வி கற்பதில் மிக்க ஆர்வம் கொண்டிருந்தார். தாம் விரும்பியபடியே மருத்துவராக ஆனார். சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.


மருத்துவர் சாந்தா அம்மையார் (1927-2021)

சென்னை அடையாறில் 1954ஆம் ஆண்டு புற்றுநோய் நிறுவனம் தொடங்கப்பட்டது. அதனை மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் தொடங்கினார். அந்நிறுவனத்தில் தம்மை இணைத்துக்கொள்ள விரும்பினார் சாந்தா. அதனால், தமது அரசுப்பணியைத் துறந்துவிட்டு, பெரும் விருப்பத்துடன் அந்நிறுவனத்தில் சேர்ந்தார்.

புற்றுநோய் என்றாலே ‘உயிரிழப்பு’ உறுதி எனப் பலரும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, புற்றுநோயால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அச்சம் கொள்ளவேண்டாம்; அந்நோய் குணப்படுத்தக்கூடிய நோய்தான் என நோயாளிகளுக்கு நம்பிக்கை கொடுத்தவர் மருத்துவர் சாந்தா. நோயாளிகளுக்குத் தரமான சிகிச்சை அளித்து நோயாளிகளைக் காப்பாற்றினார். தமிழகம் தவிர வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இந்த மையத்தை நாடி வந்தனர். நாடி வந்தவர்களின் உயிரைக் காப்பாற்றியவர் மருத்துவர் சாந்தா. ஆயிரக்கணக்கான திறமையான மருத்துவர்களையும் செவிலியர்களையும் உருவாக்கி மருத்துவ ஆசிரியராகவும் திகழ்ந்தார்.

1997ஆம் ஆண்டு அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் தலைவரானார் மருத்துவர் சாந்தா. அரசு மற்றும் தனியாரிடம் நிதியுதவி பெற்று, புற்றுநோய் நிறுவனத்தை விரிவுபடுத்தினார். இன்று, 130 மருத்துவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் புற்றுநோய் நிறுவனம் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு ஒன்றரை இலட்சம் பேர் சிகிச்சைபெறும் அளவிற்கு விரிவடைந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட, வசதி குறைந்தவர்களுக்கு இன்றும் இலவசமாகவே சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இவர், தம் வயது முதிர்வையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பணியாற்றினார். புற்றுநோயாளிகளின் நலனுக்கும் புற்றுநோய் நிறுவன வளர்ச்சிக்கும் பணியாற்றியதே மருத்துவர் சாந்தாவின் 67 ஆண்டுகால அடையாளம் ஆகும்.

ஆசியாவின் உயரிய விருதான மக்சேசே விருது, இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவ்விருதுகளைவிட, நோயிலிருந்து குணமாகிச் செல்பவர்களின் வணக்கமும், ஆனந்தக் கண்ணீரும் இவருக்குக் கிடைத்த பெரும் விருதுகள் எனக் கருதினார். இன்று, இவர் நம்மோடு இல்லாவிட்டாலும் நமது ஒவ்வொருவரின் உள்ளத்திலும் வாழ்கின்றார்.

வானொலி நேயர்களே, தேசிய மருத்துவர்கள் நாளான ஜூலை 1ஆம் நாளில், உயிர் காக்கும் மருத்துவர் சாந்தா அம்மையாரை நினைவுகூர்ந்தோம். அவரைப் பற்றிய செய்திகளை உங்களிடையே பகிர்ந்து கொண்டதில் பிபிசி வானொலி நிலையம் பெருமகிழ்ச்சி கொள்கிறது. நன்றி.

குறிப்பு: வானொலி உரைச்சித்திரம் என்பது, ஒரு நிகழ்வையோ செய்தியையோ உரை வடிவில் எழுதி, கேட்போர் விரும்பும்வண்ணம் குரல் ஏற்றஇறக்கத்துடன் வானொலியில் உரையாற்றுவது ஆகும்.

பொருள் அறிவோம்

1. மகப்பேறு மருத்துவம் - குழந்தைப்பேறு மருத்துவம்
2. துறந்து - விலகி
3. அஞ்சி - நடுங்கி
4. சாதனை - வியத்தகு செயல்
5. பாதிப்புகள் - விளைவுகள்
6. இலவசம் - கட்டணம் இல்லாச் சேவை
7. சிகிச்சை - மருத்துவம்

மருத்துவர் சாந்தா, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராகப் பணியில் சேர்ந்தார்.

சாந்தா, சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவனத்தில் தம்மை இணைத்துக் கொள்ள விரும்பினார். அதனால், தமது அரசு பணியைத் துறந்து விட்டு, பெரும் விருப்பத்துடன் அந்நிறுவனத்தில் சேர்ந்தார்.

மருத்துவர் சாந்தா, புற்று நோயால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அச்சம் கொள்ள வேண்டாம். அந்நோய் குணப்படுத்தக் கூடிய நோய்தான் என நோயாளிகளுக்கு நம்பிக்கை கொடுத்தார்.

மருத்துவர் சாந்தா, அரசு மற்றும் தனியாரிடம் நிதியுதவி பெற்று புற்றுநோய் நிறுவனத்தை விரிவுபடுத்தினார்.

ஆசியாவின் உயரிய விருதான மகசேசே விருது, இந்தியாவின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.