ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 26
26.3 மொழிக்கூறு

வல்லினம் மிகும் இடங்கள்

சொற்கள் ஒன்றோடு ஒன்று சேரும்போது க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்கள் மிகுந்து வரும். இவ்வாறு வருவன வல்லினம் மிகும் இடங்களாகும். இவற்றைப் புரிந்துகொள்வதற்காகக் கீழே கதை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. வல்லினம் மிகுந்து வரும் இடங்களைப் பின்வரும் கதைப்பகுதி வாயிலாக அறிந்துகொள்வோம்.

காகத்தின் தந்திரம்

காகம் ஒன்று தாகத்தால் தவித்தது. எந்தப் பக்கம் தேடியும் தண்ணீர் கிடைக்வில்லை. கடைசியாக ஒரு வீட்டின் பின்னால் தண்ணீர்ப் பானையைக் கண்டுபிடித்தது. அப்பானையின் அடிப்பகுதியில் சிறிதளவு தண்ணீர்தான் இருந்தது. ஆவலுடன் பானையின் வாய்ப்புறத்தில் அமர்ந்து தலையை உள்ளே விட்டுத் தண்ணீர் குடிக்க விரும்பியது. காக்கைக்கு அது முடியவில்லை. பானையின் வாய் குறுகியதாக இருந்ததால் அதனால் தன்னுடலை உள்ளே செலுத்த முடியவில்லை. எப்படியும் இந்தத் தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும் என்ற நிலை. அப்போது தெருமுனையில் மரத்தின் கீழ் ஒருவர் இளநீர் விற்றுக்கொண்டிருந்தார். அவர் அந்த இளநீரைக் குடிப்பதற்கு ‘ஸ்ட்ரா’ என்னும் உறிஞ்சுகுழலைப் பயன்படுத்தினார். இதைக் கவனித்தது அந்தக் காகம். ஒருவர் அப்பொழுதுதான் இளநீரைக் குடித்துவிட்டு ‘ஸ்ட்ராவை’ அங்குக் கீழே போட்டுவிட்டுச் சென்றார். காகம் அக்குழலை (ஸ்ட்ரா) எடுத்து வந்து, தண்ணீர்ப்பானையில் நுழைத்துத் தண்ணீரைக் குடித்தது.

மேற்கண்ட கதைப்பகுதியில் வண்ணமிட்ட சொற்களுக்கு இடையே வல்லினம் மிகுந்துள்ளது. இவ்வாறு வல்லின மெய்களை மிகுத்து எழுதுவதற்குப் பல விதிகள் உள்ளன. அவற்றுள் சில விதிகளை இங்கு அறிந்துகொள்வோம்.

விதி 1

அ, இ, எ என்னும் சுட்டெழுத்துகளின் பின் வல்லினம் மிகும்.
1. அப்பானையின்
2. அக்குழலை

விதி 2

அந்த, இந்த, எந்த என்னும் சுட்டுத்திரிபுகளின் பின் வல்லினம் மிகும்.
1. எந்தப் பக்கம்
2. இந்தத் தண்ணீரைத்தான்
3. அந்தக் காகம்

விதி 3

அங்கு, இங்கு, எங்கு என்னும் சுட்டுப்பெயர்கள் பின் வல்லினம் மிகும்
1. அங்குக் கீழே

விதி 4

இரண்டாம் வேற்றுமை விரியில் (ஐ) வல்லினம் மிகும்
1. பானையைக் கண்டுபிடித்தது (பானை + ஐ = பானையை)
2. இளநீரைக் குடிப்பதற்கு (இளநீர் + ஐ = இளநீரை)
3. குழலைப் பயன்படுத்தினார் (குழல் + ஐ = குழலை)