ழகரம்
(இரண்டாம் பருவம்)

பாடம் - 27
27.3 மொழிக்கூறு

புணர்ச்சி இலக்கணம்

பனை (நிலை மொழி)
மரம் (வருமொழி)
பனைமரம்

புணர்ச்சி இரு வகைப்படும்

புணர்ச்சி
இயல்பு புணர்ச்சி
விகாரப் புணர்ச்சி

1. இயல்பு புணர்ச்சி

நிலைமொழியின் கடைசி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் சேரும்போது எவ்வித மாற்றமும் இன்றிப் புணர்வது (சேர்வது) இயல்பு புணர்ச்சி எனப்படும்.

(எ.கா.)

குதிரை + வண்டி = குதிரைவண்டி
மலர் + மாலை = மலர்மாலை
வான் + மேகம் = வான்மேகம்

2. விகாரப் புணர்ச்சி

விகாரம் என்பதற்கு மாற்றம் என்பது பொருள். இரு சொல் புணரும்போது விகாரம் தோன்றுவதால் (மாற்றம்) அது விகாரப் புணர்ச்சி எனப்படும்.

நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதல் எழுத்தும் புணரும்போது, மூன்று மாற்றங்கள் ஏற்படும்.

1. ஓர் எழுத்து புதிதாகத் தோன்றும் (தோன்றல் விகாரம்)
2. ஓர் எழுத்து மற்றோர் எழுத்தாகத் திரியும் (திரிதல் விகாரம்)
3. ஓர் எழுத்து கெடும் (கெடுதல் விகாரம்)

தோன்றல் விகாரம்

பூ + சோலை = பூஞ்சோலை
'ஞ்' என்னும் புதிய எழுத்து தோன்றி பூஞ்சோலை எனப் புணர்ந்துள்ளது.

திரிதல் விகாரம்

பல் + பசை = பற்பசை
'ல்' என்னும் எழுத்து 'ற்' எனத் திரிந்து பற்பசை எனப் புணர்ந்துள்ளது.

கெடுதல் விகாரம்

மரம் + வேர் = மரவேர்
'ம்' என்னும் எழுத்து கெட்டு மரவேர் எனப் புணர்ந்துள்ளது.