ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 27
27.5 கேட்டல் கருத்தறிதல்

உலகமும் மனிதநேயமும்

அலுவலில் ஈடுபட்டிருந்தார் தந்தை. குறும்புத்தனம் மிக்க அவருடைய எட்டு வயது மகன் அடிக்கடி இடையூறு செய்துகொண்டிருந்தான். மகனின் கவனத்தை வேறுதிசையில் திருப்பவேண்டும் என தந்தை நினைத்தார். அவர் அருகில் உலக வரைபடத்தாள் இருந்தது. அதனைப் பல மடிப்புகளாகக் கிழித்துத் தம் மகனிடம் கொடுத்தார். ‘இதை ஒன்றாகச் சேர்த்துக் கொண்டுவா’, என்று கூறி மீண்டும் பணியில் ஈடுபட்டார் தந்தை. மகனால் அது முடியாது, நாம் நிம்மதியாக வேலையில் ஈடுபடலாம் என்று அவர் நம்பினார். தந்தையின் நம்பிக்கை வீண் போனது. அவர் எதிர்பாராத வகையில் ஐந்து மணித்துளிக்குள் கிழிக்கப்பட்ட உலகப்படத்தை எந்தெந்த நாடு எங்கெங்கு இருக்க வேண்டுமோ அங்கெல்லாம் சரியாக வைத்துத் தந்தையிடம் கொடுத்தான் மகன். வியப்படைந்த தந்தை எப்படி இது முடிந்தது என்று கேட்டபோது மகன் சொன்னான்.

உலகப்படத்துக்குப் பின்னாலிருந்த மனிதனைச் சரியாகப் பொருத்திவிட்டேன். உலகம் வந்துவிட்டது. மகனைப் பார்த்து, தந்தை சொன்னார், ”மனிதனை வைத்து உலகத்தைப் பொருத்திவிட்டாய். மனிதன் உலகத்தைச் சரியாகப் பொருத்திக் கொண்டால் அதுதான் ”மனிதநேயம்”.

வினாக்கள்

மகன் தந்தையைப் பணி செய்ய விடாமல் அடிக்கடி இடையூறு செய்து கொண்டிருந்தான்.

மகனைத் திசை திருப்ப தந்தை, ஒரு வரைபடத்தாளைப் பல மடிப்புகளாகக் கிழித்து அதை ஒன்றாகச் சேர்த்து கொண்டு வருமாறு கூறினார்.

மகன் உலகப்படத்துக்குப் பின்னாலிருந்த மனிதனின் படத்தை வைத்துப் பொருத்தினான்.

தந்தை, மகனிடம் மனிதனை வைத்து உலகத்தைப் பொருத்தி விட்டாய். மனிதன் உலகத்தைச் சரியாகப் பொருத்திக் கொண்டால் அது தான் “மனித நேயம்” என்று அறிவுரை கூறினார்.

தந்தை தான் கொடுத்த வேலையை மகன் முடிக்க முடியாது. எனவே தன்னைத் தொல்லை செய்ய மாட்டான் என்று நம்பினார். ஆனால் அவர் மகன் ஐந்து மணித்துளிக்குள் வேலையை முடித்ததால் தந்தையின் நம்பிக்கை வீண் போனது.

தகவல் துளி

தமிழ்ப் புலமையும் ஆங்கில அறிவும் ஒருங்கே பெற்றவர், மாயூரம் வேதநாயகம். இவர் நீதிபதியாகப் பணியாற்றினார். இலக்கியத்தில் மிக்க ஆர்வம் கொண்டிருந்த இவர் ‘பிரதாப முதலியார் சரித்திரம்‘ என்னும் புதினத்தை எழுதினார். தமிழில் வெளிவந்த முதல் புதினம் இதுவே ஆகும். ஆங்கில மொழியிலிருந்து நீதிமன்றச் சட்டங்களைத் திரட்டித் தமிழில் ‘சித்தாந்த சங்கிரகம்‘ என்ற நூலை உருவாக்கினார். சமரச நோக்கம் கொண்ட இவர், ‘சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள்‘ பாடியுள்ளார். இவர் இயற்றிய ‘நீதிநூல்‘ இவரது ஆழ்ந்த அனுபவ அறிவையும் கருத்துச் செறிவையும் வெளிப்படுத்துகிறது.


மாயூரம் வேதநாயகம்
1826 - 1889