ழகரம்
(முதல் பருவம்)

பாடம் - 28
28.5 கேட்டல் கருத்தறிதல்

நேர்மை தந்த பரிசு

இளமாறனும் வளவனும் அருகருகே கடை வைத்துக் காய், பழம் விற்று வந்தனர். ஒருநாள் இரவு நேரம். கடையை மூடும்போது, பெரியவர் ஒருவர் இளமாறனின் கடைக்கு வந்தார். அப்போது ஒரு முலாம்பழம் மட்டுமே கடையில் இருந்தது. பெரியவர், அந்தப் பழத்தை வாங்க விரும்பினார். “ஐயா, இந்தப் பழம் ஒரு பக்கத்தில் அழுகியுள்ளது“ என்று உண்மையைக் கூறினான் இளமாறன். “சரி, தம்பி. நான் அருகிலுள்ள கடையில் வேறு பழம் இருக்குமா எனப் பார்க்கிறேன்“ என்று கூறியவாறு வளவனின் கடைக்கு வந்தார். அங்கு ஒரு தேங்காய் மட்டும்தான் இருந்தது. அந்தத் தேங்காய் நன்றாக இருக்கிறதா என்று கேட்டார் பெரியவர். வளவனும் உடனே, “ஐயா, நல்ல தேங்காய்தான்“ என்றான். அந்தப் பெரியவரும் தேங்காயை வாங்கிக்கொண்டார். அவர் சென்றபின், இளமாறனைப் பார்த்த வளவன், “என்னப்பா, பிழைக்கத் தெரியாதவனாய் இருக்கிறாயே? இப்படி நீ உண்மையைச் சொன்னால் எப்படி விற்கமுடியும்? என்னைப் பார். நான் சொன்னதை அப்படியே நம்பிவிட்டார் அந்தப் பெரியவர். உண்மையில் அந்தத் தேங்காய் நன்றாக இல்லை என எனக்கே தெரியும். ஆனாலும் விற்றால்தானே பணம் கிடைக்கும்“ என்றான். அவன் கூறியதைக் கேட்ட இளமாறன், “நான் இன்று விற்பனை செய்த பொருள்களின் மூலம் தேவையான அளவு தொகை கிடைத்தது. அழுகிய பொருளை நன்றாக இருக்கிறது என்று பொய் சொல்லி விற்பது எனக்குப் பிடிக்கவில்லை. நான் ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டேன்“ என்று உறுதிபடக் கூறினான். சில நாள் கழித்து, அன்று வந்த பெரியவர் மீண்டும் இளமாறனின் கடைக்கு வந்தார். “தம்பி, என் ஊரிலேயே ஒரு கடை வைத்திருக்கிறேன். எனக்கு நம்பிக்கையான ஆள் வேண்டும். உன்னைப்போல ஒரு நேர்மையான ஆளைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். என் கடையில் வேலைக்குச் சேருகிறாயா?“ என்று கேட்டார். இளமாறனும் ஒப்புக்கொண்டான்.

வினாக்கள்

இளமாறனின் கடைக்கு வந்த பெரியவர் முலாம்பழத்தை வாங்க விரும்பினார்.

இளமாறன் முலாம்பழத்தில் ஒரு பக்கம் அழுகியுள்ளது என்று உண்மையைக் கூறினான்.

வளவன் அழுகிய தேங்காயை நல்ல தேங்காய் என்று பொய் சொல்லி விற்பனை செய்தான்.

பெரியவர், இளமாறனின் நேர்மையைக் கண்டு தன்னுடைய கடையில் வேலைக்குச் சேருமாறு கூறினார். அவனும் வேலைக்குச் சேர்ந்தான்.

நம்மை நம்பி வாங்குபவருக்கு நாம் தீங்கு நினைக்கக்கூடாது. எனவே பொருளை விற்பதிலும் ஓர் அறம் வேண்டும்.

தகவல் துளி

அவதானம் என்பதற்குக் கவனம் என்பது பொருள். அவதானிப்பவரைக் கவனகர் எனக் கூறுவர். ஒரே நேரத்தில் பல செயல்களைச் செய்பவர்களை அவதானிகள் என்று அழைப்பர். அவதானம் பல வகைப்படும். ஒரே நேரத்தில் ஆறு செயல்களைச் செய்வது சட்டாவதானம். எட்டுச் செயல்களைச் செய்வது அட்டாவதானம். பத்து வகையான செயல்களைச் செய்வது, தசாவதானம். பதினாறு அவதானம் செய்வது சோடசாவதானம். ஒரே நேரத்தில் நூறு பேர் கேட்கும் கேள்விகளுக்கு நூறு வகையான அவதானங்களைச் செய்வது சதாவதானம். செய்குத் தம்பி பாவலர் என்னும் தமிழறிஞர் சதாவதானக் கலையில் சிறந்து விளங்கினார். 1907ஆம் ஆண்டு சென்னை விக்டோரியா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இவர் தமது சதாவதானக் கலையை மெய்ப்பித்தார்.