முன்னுரை
‘நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்
தமிழ்வரம் பறுத்த தண்புனல் நன்னாட்டு
மாட மதுரை’
என, ஆசிரியர் இளங்கோவடிகளால் போற்றப்படும் மதுரை மாநகர்க்கண் நம் முன்னோர் முதல், இடை, கடையென்னும் முச்சங்கங்கள் நிறுவித் தென்மொழியாம் நம் சீர்சால் தமிழ்மொழியை நன்கு வளர்த்து வளம்படுத்தினாரென்ப. அச்சங்கங்களுள் இடைச்சங்ககாலத்தே தொல்காப்பியனாரால் இயற்றப்பெற்ற முதல் இயல்நூல் தொல்காப்பியம் ஆகும்.
தொல்காப்பியத்தின் தொன்மை
இதனை நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையில் இயற்றி அரங்கேற்றியதாகத் தொல்காப்பியப் பாயிரம் வகுத்த பனம்பாரனார் கூற்றால் அறியக்கிடக்கின்றது. இந்நூல் இற்றை நாள் நமக்குக் கிடைத்துள்ள நூல்களுள் காலத்தால் முந்தியதோடன்றிச் சிறப்பினாலும் தமிழர்தம் மொழிச்சீர்மை, அறம் மறம் மானம் அரசு அமைச்சு படை செல்வம் முதலிய எல்லாச் சிறப்பும் அறிதற்கு உறு கருவியாய் நின்று உதவும் பெற்றியானும் வீழா ஞாயிறு போன்று நின்றொளிர்கின்றது. ஆகலான் இயற்கைப் பண்பினானும் முந்தியதாகவே உள்ளது.
தொல்காப்பியம் பொதுவாக நுவன்ற பொருள்கள்
இது, எழுத்து சொல் பொருள் என முப்பகுப்புடையது. எழுத்ததிகாரத்தால் தமிழ்மொழியின் சீரிய கூரிய இனிய மெல்லிய ஒலியமைப்புமுறை, அதன் புணர்நிலையால் ஒலி மாற்ற அமைப்பு முதலியன விளக்கப்பட்டுள்ளன. சொல்லதிகாரத்தால் தமிழ்ச்சொல்லின் சிறப்பும், திணை பால் முதலிய உயிர்ப்பகுப்பு உயிரில்பகுப்பு முறையும், தமிழர் நாகரிகச் சொற்றிறமையும், ஒவ்வொரு சொற்களும் காரணத்தோடு அமைக்கப்பெற்றன வென்பதற்குரிய விதிவழிவகைகளும் தெற்றென விளக்கப் பெற்றுள்ளன. பொருளதிகாரத்தால் மக்களின் மன இயல்பாகிய அகமும், வீரமும், சுவைகளும், உவமங்களும், பாவின் பண்பு மரபுமுறை முதலிய யாவும் ஒருங்கே
முற்ற முடிய எடுத்து விளக்கிக் காட்டப் பெற்றுள்ளன.
தொல்காப்பியர் வரலாறும் காலமும் இச் சீரிய நூலை ஆக்கி உதவியருளிய இந்நூலாசிரியரான தொல்காப்பியரைப் பற்றிய வரலாறுகள் ஒன்றும் தெற்றெனப் புலனாகவில்லை. திருவள்ளுவர் வரலாறு அறிதற்குரிய சான்றுகள் இல்லாதன போலவே , ஆசிரியர் தொல்காப்பியனார் வரலாற்றுண்மைகளும் நன்கு அறிதற்குரிய சான்றுகள் இந்நூலகத்தும் பிற நூல்களினகத்தும் தென்படவில்லை. இவ்வாறே பழங்காலந் தொட்டு இற்றைஞான்று வரை தமிழகத்தில் வாழ்ந்த புலவர்கள், வள்ளல்கள், அரசர்கள் , பெரியார்கள், கூத்தர்கள், பாணர்கள் முதலியோர்களின் வரலாறுகள் ஒன்றும் தெளிவாக அறிதற்கில்லை. வரலாறுகள் எதையெடுத்தாலும், யாருடைய வாழ்க்கை முறைகளை ஆய்ந்துணர முற்பட்டாலும், அவற்றுள் பிற்காலக் கட்டுக்கதைகளைப் புகுத்தியும், முற்கால வழக்கில் இல்லாதனவும் பிற்கால வழக்கத்தில் வந்தனவுமாகிய பாக்களைக் கொண்டு அவர் புனைந்தனவாகக் கொண்டு காட்டியும், அவர்தம் உண்மை வரலாற்றை
அறிய வொண்ணாத வகையில் போலி வரலாறெழுதிய பலர் வரலாற்று முறைக்குக் கறைசெய்து போதருவாராயினர். இன்னும் இதனானே எதையும் சிக்கறுத்துக் காண்டற் கியலாததாயிற்று. சங்ககால நூல்களில் பல்லாயிரக்கணக்கான பாடல்கள் உள்ளன. அவற்றைப் பாடிய புலவர்களின் பெயரே தெரியாதவண்ணம் இருக்கின்றன. ஆனால், அவர் அமைத்த அரிய சொற்றொடர், உவமை , கருத்துநயம் இவற்றைக் கொண்டே பெயர்கள் அமைத்துத் தொகுப்பாசிரியர் வெளியிட்டுள்ளனர். அவை, கல்பொருசிறுநுரையார், தொடித்தலை விழுத்தண்டினார், பதடிவைகலார், அணிலாடு முன்றிலார், கவைமகனார் என்பன போன்ற பல புலவர்களின் பெயர்களைக் கொண்டு தெளிக. இவ்வாறே இந்நூலாசிரியரைத் தொல்காப்பியரல்லர், இவர் பெயர் திரணதூமாக்கினி யென்றும் இவர் சமதக்கினியார் புதல்வரென்றும் கூறி ஆரியராக்குவாரும் உள்ளனர். இந் நூற்றாண்டினும் இதற்கு முந்திய நூற்றாண்டினும் வாழ்ந்தருந்த புலவர்கள் பெயர்களும்கூட மறைந்து வருகின்றனவென்றால் தமிழக மாந்தர்தம் மொழிப்பற்று நாட்டுப்பற்று அறிஞர்பற்று எவ்வளவென்பதை அளந்தறிமின்! இவ்வாறு பற்றற்று இருந்த காரணத்தால் நூல்களையெல்லாம்
'வாரணங்கொண்ட தந்தோ வழிவழிப் பெயரும் மாள' என்று இரங்கும் நிலை வந்துற்றது. இதுகாறும் நாம் ஆய்ந்து கண்டவற்றால் தொல்காப்பியர் காலத்தை இவ்வளவிற்றென வரையறுத்துக் கூறுதற்கியலாததாய்
இருக்கின்றது. வரலாற்றாசிரியர் பலரும் இவர் வாழ்ந்த காலம் ஐயாயிரம் யாண்டுக்கு முற்பட்ட தென்பாரும், பதினாயிரம் யாண்டென்பாரும் , இன்னும் பல திறத்தினராய்ப் பிளவுபட்டு ஒருவர்க்கொருவர் முரண்படவுரைப்பர். அஃது எவ்வாறாயினுமாகுக. ஆசிரியர் தொல்காப்பியனார் இருந்த காலம் மிகப் பழமையான காலமென்பதை மட்டும் எவரும் மறுக்க வொண்ணாததாகும். ஆனால் இவர் காலத்தேயே தமிழகத்தில் ஆரியக் கொள்கைக் கலப்புகள் கலந்துவிட்டன. ஆரிய மொழிகளும் தமிழ்மொழியிற் கலந்து வழக்காறாக வழங்கத் தலைப்பட்டன என்பதற்குரிய சான்றுகள்
இந்நூற்கண் காணப்படுகின்றன. அதற்குச் சான்றாக இவர் சொல்லதிகார எச்சவியலில்,
'வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே' என்று வடமொழி தமிழிற்கலந்து வழங்குதற்கு வரையறை செய்து வகுத்துரைத்திருப்பதும், காதலாற் பிணிப்புண்ட தலைவன் தலைவியர்களிடையே உண்மைக்காதல் திரிந்து பொய்ம்மை புகுந்த்தெனவும் , அதனால் ஆன்றோர் முன்னிலையில் ஒரு கட்டுப் பாடமைத்துத் திருமணம் நிகழ்ந்து வந்ததாகவும் கற்பியலில், 'பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப' என நூற்பா வகுத்தமைத்துரைத்திருப்பதும் நோக்கின், பழங்காலத்துக்கும் பிற்காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தேதான் தொல்காப்பியர் வாழ்ந்தனராக ஊகிக்கலாம். எனவே ஏறக்குறைய இற்றைக்கு ஐயாயிரம் 'யாண்டெனக் கொள்ளுதல் சாலும். இந்நூல் மரபியலில், 'வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை'
என்றும், 'வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்லது இல்லென மொழிப பிறவகை நிகழ்ச்சி' என்றும் கூறப்பட்டுள்ளன. ஆனால் , இது பழந்தமிழர் கொள்கைக்கு முற்றும் மாறுபட்டனவாக இருத்தல் கண்கூடு தமிழர் வாழ்வுமுறை நிலத்தையொட்டியது; நிலச் சார்பாக அவர்கள் பெயரமைத்து அழைக்கப்பட்டனரன்றிப் பிறப்பால் சாதி வகுக்கப்பட்டு அழைத்தனரில்லை; இவரே பிறிதோரிடத்து, 'ஆயர் வேட்டுவர் ஆடூஉத் திணைப்பெயர்' என்று கூறுகின்றார். எனவே , மேற்கூறிய சாதிபற்றிய வகுப்புமுறை கொண்ட நூற்பாக்கள், பிற்கால இளம்புலவர்களால் ஆக்கி இடைச்செருகலாக அமைக்கப்பெற்றனவோ என ஐயுறற்கு ஏற்றனவாக இருக்கின்றன. இவற்றுள் வரும் சொற்களையும், குலம் வகுத்துக் குலத்துக்கேற்ற நீதி நெறிகளும் வகுக்கின்ற முறையையும் நோக்கின், பிற்காலத்தன வென்பது தெற்றென விளங்கும். அவற்றை ஈண்டு விரித்தல் மிகை. எனவே , இவற்றுக்கு உரை வகுத்த ஆசிரியர்களும் எவ்வாறானாலும் நூலினுள் அடங்கிக்கிடப்பதால் அவற்றை ஒதுக்கிவிடாது, அவற்றுக்கும் உரை வகுத்துரைப்பா ராயினர். கற்று உண்மைகாண விழைவார் காய்தல் உவத்தல் அகற்றி நோக்கின் உண்மை தோன்றாமற்போகா. தொல்காப்பியப் பொருளதிகாரம் சிறப்பாக நுவன்ற பொருள்கள் இனி இப் பொருளதிகாரத்துள் நுவலப்படும் பொருள்கள் அரிய பெரிய நுண் கருத்துக்கள் கொண்டமைந்தனவாகும். அவைகளுள் அகத்திணையியல், காதலர்கள் வாழ்க்கை துவங்கும் நிலப்பாகுபாடு முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள்களை எடுத்துக் காட்டும் விளக்க நூலாய் நிலநூல் என்று கருதற்குரியதாய் உள்ளது என்னலாம். புறத்திணையியல், வீரர் மேம்பாடு கிளந்தெடுத்துரைத்தலானும், அரசனாவான் படைகளை இயக்கும் முறையும் அரண் அமைக்கும் முறையும் போர் செய்யும் முறையும் கூறப்படலானும் அரசியல் நூலுமாக மிளிர்கின்றது. களவியல் கற்பியல் என்பன, ஒத்த குலனும் ஒத்த பண்புமுடைய காதலர்கள் ஒன்றுபட்டுத் தாமே தேர்ந்து மணந்துகொண்டு இல்லறக்கிழமை பூண்டொழுகும் உலகியல் வாழ்வுமுறை நூலாகத் திகழ்கின்றது. மெய்ப்பாட்டியல் மக்களின் உணர்ச்சி நிலையை விளக்குவதாகும். உணர்ச்சியாவது ஒன்றைக் கண்டு உவத்தல் அஞ்சுதல் வியத்தல் முதலிய உளப் பண்புகள். இவை உடலில் வெளிப்பட்டுத் தோன்றும் தன்மையவான செயல்களை உணர்த்தும் உடல் நூல் ஆகும். இவை பலபட விரித்துரைக்கப்படுமாயினும் அவை யெல்லாம் ஒன்பது சுவை (நவரசம்) எனப் பாகுபடுத்துரைப்பார் வடநூலாரும் பிறருமாக, இவர் அவையிற்றை எண்வகைச் சுவையவாகக்கொண்டு எட்டுவகை மெய்ப்பாடுகளாக அமைத்துரைப்பாராயினார். பிறரெல்லாம் ஒன்பது சுவை அமைக்க இவர் எவ்வாறு எண்சுவையாக்கினரென வினவின், நாம் ஒரு சிங்கத்தையோ புலி கரடி முதலியவற்றையோ ஒரு காட்டில் காண்போமாயின் அவையிற்றைக் கண்டதும் அச்ச உணர்ச்சி உள்ளத்தில் தோன்றி அவ்வுணர்ச்சியின் உந்துதலால் கால் கைகள் நடுங்கிச் செயலற்றுப்போகின்றோம். இது போன்ற நிகழ்ச்சிகளை ஒருவன் கூறக்கேட்பினும் அவ்வளவு நடுக்கங் கொள்ளாவிட்டாலும் அந் நினைவலைகள் தாக்கப்பெற்று அவ்வச்ச உணர்ச்சியால் உடல் மயிர் சிலிர்ப்புறுகின்றன. இது போன்ற பிற
உணர்ச்சிகளையும் கேட்டவுடனே கண்டவுடனே காட்டுவதே மெய்ப்பாடு; மெய்யின்கண்
உண்டாதல் என்பதாகும். இவ்வாறான சுவைகள், நகை அழுகை இளிவு மருட்கை அச்சம் பெருமிதம்
(வீரம்) உவகை வெகுளி என்பன; இவை எட்டாயின. இவற்றோடு சமநிலை ஒன்றுகூட்டி ஒன்பதெனப்
பகுத்தனர். சமநிலை, ஒத்ததன்மையெனப் பொருள்படும். அஃது உலகில் நிகழாத ஒன்று. அது மக்களின்
மன உணர்வின் கண்ணும் நிகழாத நிகழ்ச்சியென அவ்வொன்றையும் விலக்கி எண்வகையே அமைத்தார்.
சமநிலை எத்தகைத்தென வினவின் ஒருவன்மீது மற்றொருவன் வேல் கொண்டு குத்தினும், வாள் கொண்டு
வெட்டினும் அதற்கு வருந்தாது இருத்தலும், கலவைச் சந்தனத்தை உடல் குளிரப் பூசினும் அதற்கு மகிழாதிருத்தலுமாகிய உளமோடா உயரியநிலை. இதனை, "செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும் நெஞ்சோர்ந் தோடாநிலை" என எடுத்துரைப்பர் பேராசிரியர். இந்நிலை, தொடர்ந்த மும்மலம் முருக்கி வெம்பவக்கடல் தொலையக் கடந்த முனிவர்களும் செயலில் கொணரமுடியாத அரியநிலை; இஃது உலகியலுக்கு ஒவ்வாதது; உயிருள்ள எப்பொருளுக்கும் பொருந்தாநிலை யென்று ஆசிரியர் தொல்காப்பியனார் தம் அறிவு மதுகை கொண்டாய்ந்து அதனை நீக்கி, "நகையே அழுகை இளிவரல் மருட்கை அச்சம் பெருமிதம் வெகுளிஉவகையென்று அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப" என அளந்து அறுதியிட்டு எண்வகையே கொண்டமை அறியற்பாலது. உவமவியல் என்பது உலகியற் பொருள்களைக் கூர்ந்து நோக்கிப் பகுத்துணர்கின்ற பகுத்தறிவு பகரும் நூல் ஆகும். இதன்கண் இவ்வளவு உயர்ந்த பண்புடையது இப்பொருள், தாழ்ந்த பண்புடையது இப்பொருள் என நன்கு ஆய்ந்து தாம் கண்ட பொருள்களைக்கொண்டு காணாத பொருள்களை விளக்கிச் சுட்டியுரைக்கும் தனி நூலாகும். செய்யுளியல் என்பது ஓசைகளில் பல்வேறு நிலைகளைச் செவிப்புலனுக்கேற்ப நாவா லசைத்துப் பாகுபடுத்திக் காணப்பட்ட இசைப்பகுப்பு நூல் என்னலாம். இதனைத் தொல்காப்பியச் செய்யுளியல் நூற்பாவே, "மாத்திரை எழுத்தியல் அசைவகை எனாஅ" என்று 'துவங்குமுகத்தே' 'அசைவகை' என்று குறிப்பது கொண்டு அறியப்பெறும். இதில் நூறு வகையான வண்ண வேறுபாடுகள் குறித்துரைக்கின்றார். வண்ணமாவது இசையின் வகைகள். அவற்றை இக் காலத்துச் 'சந்தக் குழிப்பு' என வழங்குவர்; இவ்வகை இவர் நூறெனக் கூறினாரேனும், அஃது அவ்வக்காலத்துக்கேற்ற முறையில் கற்று வல்ல புலவர்களால் வெவ்வேறு வகைப்பட அமைத்து யாக்கும் பாவகைகளில் வரும் வண்ணங்களெல்லாம் கொள்ளலாம். அதற்கு இவர் ஒரு வழி வகுத்துக் காட்டினர். இதன்கண் மந்திரமொழி முதலியவற்றிற்கும் இலக்கணம் வகுத்துள்ளனர். எனவே, இஃது ஒலிபற்றிய அமைப்பெல்லாம் கண்டு தெளிதற்கு ஏற்றதாக மிளிர்கின்றது. பொருளியல் என்பது, இப் பொருளதிகாரத்துக்கே புறனடை போன்று இன்றியமையாத திருத்த முறையாகப் பொதுப்பட அமைத்த பகுதியாகும். நூலின் இறுதியில் நிற்பது மரபியல்; இதன்கண் உயிர்ப் பொருள்களின் தன்மைகளை நன்கு ஆய்ந்து, அவற்றின் அறிவு குணம் செயல், ஆண் பெண் பகுப்பு, அவையிற்றை வழங்கும் முறை, அறிவு முறையினால் உயிர்கள் படிப்படியாக உயர்ந்து செல்லுதல் முதலியவற்றையும் அளந்து கூறி, அவற்றுள் மனவுணர்வினால் மற்றை உயிர்களினும் உயர்வு பெற்றுள்ள மக்கட் பண்பையும் அறுதியிட்டு உறுதிப்படுத்துரைத்துள்ளது. இவ்வகை உயிர்களை அவர் ஓரறிவு உயிர்முதல் ஆறறிவு உயிர்வரை பாகுபடுத்து உரைக்கும் முறை, இற்றை ஞான்று உயிர்நூலார் உரைக்கும் பகுப்பு முறைக்கு ஒத்த ஒன்றாகும். அவை,
"ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே" என்பனவாம். இவற்றையெல்லாம் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே
கூர்ந்தறிந்து உரைக்கும் ஒருநூல் தமிழ்மொழியில் உண்டென்றால் இத் தொல்காப்பியத்தையன்றி வேறெதைக் காட்டவொல்லும்? இன்னும் இதன்கண் உலகம் ஐம்பெரும் பொருள்களின் கூட்டுறவால் சுழற்சிபெற்று இயங்குகின்ற தன்மையையும் அளந்து, அளவை முறையாக ஆய்ந்து உணர்த்துவதும் அறிந்து அறிந்து இன்புறற் பாலதொன்றாம். இதனை,
'நிலம் தீ நீர்வளி விசும்போ டைந்தும்
கலந்த மயக்கம் உலகம்’
என்பது காண்க. இவர் உயிர்களைத் தனித்தனி அறிவுமுறை கொண்டு பகுத்துரைப்பதோடமையாது, அவ்வுயிர் வகைகளையும் இவ்விவ்வாறு வழங்கவேண்டுமென வரையறுத்துரைப்பாராயினர். அன்றியும் அவ்வுயிர்களின் ஆண்மை பெண்மை இயல்புகளை நன்கு நுனித்தறிந்து ஆண் வடிவாக இருப்பினும் அஃது ஆண்மையிற் றிரிந்து பெண்மை யியல்பாக இருக்குமானால் வடிவுபற்றிப் பகுக்காது உணர்வுபற்றிப் பெண்பாலகப் பகுத்துரைப்பது இவர்தம் கூர்த்தறியும் நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுகின்றது. ‘சேவற் பெயர்க்கொடை சிறகொடு சிவணும் மாயிருந் தூவி மயிலலங் கடையே’
என்னும் நூற்பாவில் ’சேவல்’ என்னும் ஆண்பால் குறிக்கும் பெயர் பறவைகளுள் மயிலினத்துக்குச் சாலாது மற்றை இனத்துக்குப் பொருந்துமென்று வகுத்துரைத்தமைகொண்டு தெளியலாம். இதற்கு இளம்பூரணராகிய இவ்வுரையாசிரியர் தெளிவுற விளக்கிற்றிலராயினும் பேராசிரியர் வகுத்த உரையில், "மாயிருந் தூவிமயில் என்றதனான், அவை தோகையுடையவாகிப் பெண்பால் போலும் சாயலவாகலான் ஆண்பாற்றன்மை இலவென்பது கொள்க" என விளக்கிக் கூறியது கொண்டறியற்பாலதாம். ஆதலால், இப் பொருளதிகாரத்துட் கூறப்பெற்றிருக்கின்ற ஒன்பது இயல்களும் ஒன்பது வகைப்பட்ட தனித்தனி நூலென்றே கோடற்பாற்றாம். இது. தமிழர்தம் அறிவுக்கருவூலம்; தமிழக வாழ்க்கை நெறிகாட்டி, மக்களை மாக்களினின்றும் பிரித்து இருள்தீர்ந்த கண்ணராகச் செய்யும் காளாமணி விளக்கு; ஒழுக்க உறையுள்; விழுப்பெரு முழுமணி; தமிழர் நாகரிகம் போர் படை குடி செல்வம் காதல் வாழ்வு அன்புமுறை நாடு நகர்வளம் பிறயாவும் சுரந்து சுரந்து அறிவு வேட்கை ஆற்றும் வற்றாத ஊற்று இஃதெனின், நடுவு பிறழ்ந்ததாகாது, உண்மை; வெறும் புகழ்ச்சியன்று. தொல்காப்பிய உரை எழுந்த வரலாறு இவ்வெல்லாச் சிறப்பும் ஒருங்கே வாய்ந்த அரிய பெரிய இந்நூலுக்குப் பல நூற்றாண்டுகள்வரை உரையெழுதப் பெறவில்லை. ஆசிரியர்கள் வழிவழியாகத் தத்தம்மாணவர்கட்குத் தாம் தாமே உணர்ந்த அளவுக்கு உரையமைத்துப் பாடஞ்சொல்லி வருவாராயினர். இவ்வாறு தொன்றுதொட்ட மரபு மரபாக உரை சொல்லப் போந்தவர்கள், நாளாக நாளாகத் தற்காலம்போல், தத்தமக்குத் தோன்றியவாறே தம் கருத்துக்கேற்பத் திரித்துப் பொருள் கூறி வருவாராயினர், அதனால், நாட்டில் பல்வேறு திறப்பட்ட கருத்துடை ஆசிரியர் பல்கி, யானைகண்ட குருடர்போலத் தாம் தாம் சொல்வதே உண்மை யுரையென வீணுரை பகர்வாராயினர். இங்ஙனமே சில நூற்றாண்டுக் காலங்கள் கழிவவாயின. இக்காலத்தே, தமிழ்நாடு செய்த நல்லூழ்வகையால் இளம்பூரணவடிகள் தோன்றினார். இவர் தமிழ்மொழியை முற்றக்கற்ற முழுதுணர் பெரியராய் இலகி, தொல்காப்பிய நூற்பெருங் கடலுட் புக்குத் தம் நுண்மாண் நுழைபுல மாட்சியால் நுணுகி ஆய்ந்து தெள்ளத் தெளிந்த பேருரை வகுப்பாராயினார், இவருரை மூன்றதிகாரங்கட்கும் முற்ற முடியவுள்ளது, இவர் முதல்முதல் இதற்கு உரையெழுதிய பெருமைச் சிறப்புக்கொண்டு இவரை இடுகுறிப்பெயராற் கூறாது, உரையாசிரியர் என்னும் சிறப்புப் பெயரால் வழங்குவாராயினர். இவர்தம் உரைச் சிறப்புக்கு இப்பெயரொன்றே சான்று நின்று பகரும். இவரின் பின்னர் வடநூற்கடலை நிலைகண்டுணர்ந்த சேனாவரையர், நுணுகி ஆழ்ந்து விரிந்த தம் மதிநுட்பங்கொண்டு சொல்லதிகாரத்துக்கு மட்டும் ஒரு நல்லுரை வரைந்தளித்தனர். பேராசிரியர் பொருளதிகாரம் மெய்ப்பாட்டியல் முதலாக மரபியல் இறுதியாக ஐந்தியல்களுக்கு மட்டுமே உரையெழுதியுள்ளனர். உற்று ஆய்ந்தால் இவர் தொல்காப்பியம் முழுதுக்கும் உரை கண்டனரெனத் தெரிகின்றது. ஆனால், முழுதும் இதுகாறும் கிட்டிற்றில்லை. நச்சினால்க்கினியர் எழுத்தததிகாரம் சொல்லதிகாரங்கட்கும் பொருளதிகார அகத்திணையியல் முதலாகப் பொருளியல் இறுதியாக ஐந்தியல்களுக்கு மட்டுமே உரை வகுத்துள்ளனர்.ஏனைய பகுதிகட்கு எழுதவில்லையென்றே தோன்றுகிறது; கல்லாடர் சொல்லதிகாரச் சில பகுதிகட்கு மட்டுமே உரை வரைந்துள்ளனர்.அவர் உரையில் சில பகுதிகளன்றி முழுதும் வெளிவந்திலது; தெய்வச்சிலையாருரை, சொல்லதிகாரத்துக்கு மட்டுமே இன்றுகாறும் வெளிவந்துள்ளது. எனவே, இன்ன இன்ன பகுதிகட்கு இன்னின்னார் இவ்விதுவரை உரைகண்டாரென்று அறுதி கொண்டுரைத்தற்கு அகப்புறச் சான்றுகள் ஒன்றுமில்லை.'வந்தது கொண்டு வாராதது உணர்தல் ' , என்பது கொண்டு அவையிவற்றை ஆய்வாளர் முடிபு காண்பாராக. இளம்பூரணர் உரைச்சிறப்பு எது எவ்வகையாயினும் தொல்காப்பியம் முழுதிற்கும் முற்ற முடியக் கிடைத்திருக்கும் உரை இவ்விளம்பூரணம் ஒன்றேயாகும்.இவ்வுரை ஏனைய உரைகளினும் கருத்து விளக்கமும் தெளிவும் மிக்கது. இதன் சிறப்பை நச்சினார்க்கினியத்தையும் பேராசிரியத்தையும் ஒருங்கே ஒப்ப வைத்துக் கொண்டு பயில்வார் தெற்றென உணர்வர். இவர் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் ஒண்மையுடையார்; விரிக்க வேண்டுமிடத்து மிகைபடக் கூறாது வேண்டியாங்கு விரித்தும், சுருக்க வேண்டுமிடத்து மிகச் சுருக்காது கருத்து விளக்கம் பெறச் சுருக்கியும் கூறும் மதிநலம் மிக்குடையார். எடுத்துக்காட்டாக அகத்திணையியலில் அகம் இன்னதென்பதை விளக்கிச் சொல்லுங்கால் ,'அகப்பொருளாவது
போகநுகர்ச்சியாக லான் அதளான் ஆயபயன் தானே அறிதலின், அகம் என்றார்' என்று
விளக்கியும், புறம் அன்னதென்பதை விளக்கிக் கூறுங்கால், புறப்பொருளாவது மறஞ்செய்தலும் அறஞ்செய்தலும் ஆகலான் , அவற்றான் ஆய பயன் பிறர்க்குப் புலனாதலின் புறம் என்றார் . அஃதற்றாக அறம் பொருள் இன்பம் வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள் யாதனுள் அடங்குமெனின், அவையும் உரிப்பொருளினுள் அடங்கும்' என்று விளக்கி விரித்துரைத்தும் தெளித்தலால் நன்கு அறியலாம். இன்னும் இவர்தம் உரை ஆங்காங்கே பருந்தும் நிழலும்போல் நூற்பாக்களின் நுணுகிய கருத்துக்களை உண்மை பிறழாது விளக்கி யாவரும் எளிதிற் கற்றுணருமாறு திறம்பட வகுத்துரைத்திருப்பதைப் பயில்வார்கள் நன்கறியலாம். இத்தகைய உரைவளமிக்க இவ் விளம்பூரணத்தின் கருத்துக்களைத் தழுவியும் வேறுபட்டும் இயைந்துள்ள நச்சினார்க்கினியருரையையும், பேராசிரியருரையையும் ஆங்காங்கே வேண்டுமிடத்து அடிக்குறிப்பாக அமைத்துக் காட்டப்பெற்றுள்ளது. அதனால் இவ்வுரை நயத்தோடு அவ்வுரையையும் ஒப்ப நோக்கி உண்மை தெளிய விரும்பும் ஆராய்ச்சியாளருக்கும் கற்றுத்துறைபோக விரும்பும் மாணவர்கட்கும் பெரும்பயனாக அமையும். இளம்பூரணார் வாழ்க்கை வரலாறு
இவ்வளவு அரிய கருத்து நயமிக்க பேருரை வகுத்துத் தந்த உரையாசிரியர் வாழ்க்கை வரலாறு பற்றி அறிய விரும்புவது யாவர்க்கும் இயல்பேயாகும்.ஆனால், அவர்பற்றிய வாழ்க்கைக் குறிப்புகளைத் தெற்றென அறிதற்குரிய அகச் சான்றுகள் இல்லை, ஆயினும் ஆங்காங்கே கண்டு கேட்ட வுரை கொண்டே அறிய வேண்டுவதாகவுளது. அவற்றுள் ஒன்றிரண்டு சான்றுக்காகக் காட்டியுரைப்பாம்.
இவர் வாழ்ந்த இடம் பாண்டி நாட்டில் கீழ்க் கடற்கரைப் பகுதியிலுள்ள செல்லூரென்றும் மறையில் வல்ல இளம்போதி என்பாரின் புதல்வரென்றும் , அந்தணர் வகுப்பினரென்றும் கூறுவர்.
இவர் வரலாற்றைக் குறித்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து ஆசிரியரான திரு. டி. வி. பண்டாரத்தாரவர்கள் செந்தமிழ்த் தொகுதி 42 ல் பகுதி 10 முதல் 12 வரையுள்ள இதழ்களில் ஒரு கட்டுரை வரைந்துள்ளனர். அதன் ஒரு பகுதி வருமாறு:
-------------------------
-------------------------
-------------------------
பாயிருங் காப்பியச் சுவைபல உணர்ந்தகம்
தோய மடுத்தோர் தொல்காப் பியனுரை
முத்திற ஒத்தினுக் கொத்தசீர்க் காண்டிகை
சொன்னிலை மேற்கொள் தொகுபொருள் துணிபுடன்
இயல்நூற் பாமுடி பிணைத்தடி காட்டித்
தலைகடை கூட்டித் தந்தனன் பண்டே
கொங்குவேள் மாக்கதை குறிப்புரை கண்டோன்
தன்னறி அளவையில் நல்லுரை தேவர்
பன்மணிக் குறட்பான் மதிப்பிடப் பொறித்தோன்
குண கடற் செல்லூர் மணக்குடி புரியான்
தண்முலை முகையென வெண்ணூல் சூடி
அந்தணன் துறவோன் அருமறை உணர்ந்த
இளம்போதி பயந்த புனிதன்
இளம்பூ ரணனுரை இனிதுவாழ் கீங்கென்'
என்னும் பாட்டினால் இவர் கொங்குவேள் மாக்கதையாகிய உதயணன் காதைக்குக் குறிப்புரை யெழுதியுள்ளன ரென்றும், திருக்குறளுக்கும் உரையெழுதின ரென்றும் தெரிகின்றது. ஆனால், திருக்குறளுக்கு உரை வகுத்தவர்களைக் குறிக்கும்.
'தருமர் மனக்குடவர் தாமத்தர் நச்சர்
பரிமேல் அழகர் பருதி- திருமலையர்
மல்லர் பரிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர்நூற்
கெல்லையுரை செய்தார் இவர்'
என்னும் பழைய வெண்பாவொன்றினால் பதின்மர் திருக்குறளுக்கு உரை கண்டவர்கள் என்று கூறப்பெற்றுள்ளது. ஆனால், இதில் இளம்பூரணர் ஒருவராகப் பெயர் குறிக்கப் பெறவில்லை. ஆயினும், செல்லூர் மணக்குடி புரியான்' என மேற்காட்டிய பாட்டின்கண் வரும் மணக்குடி என்பதே மருவு மொழியாகி மணக்குடவர் ஆனதென்று கொள்ளற்கு இடனுண்டு. குடி, குடம் ஆக மாறிவருதல் வழக்கில் இயல்பாக இருக்கின்றது. குடிக்கூலி குடக்கூலியாகத் திரிந்ததுபோல, மணக்குடியார் மணக்குடவர் ஆயினார் போலும்! இவற்றைத் தவிர வேறு இவரைப்பற்றிய வாழ்க்கைக் குறிப்புக்கள் நன்கு தெற்றென அறியக் கிட்டவில்லை. வழங்கும் கதைகளும் உண்மையென்று கோடற்கமையாது.
இளம்பூரணர் வரலாற்றில் சில வேறுபாடுகள்
'அந்தணன் துறவோன்......... இளம்போதி பயந்த புனிதன் இளம்பூரணன்' என்னும் பாடலடிகளினால் இவர் மறையவர் குலத்தாரென்றும், இளம்போதி மகனாரென்றும் குறிப்பிடப்படுகின்றது. நம் தமிழ்நாட்டில் வேறுபட்ட இருவேறு கருத்துக்கள் இடைக்காலத்தில் தோன்றி வளரலாயின. ஒன்று ஒருவன் அறிஞனாக இருந்தால் அவன் மறையவர் குலத்தானாகவே இருத்தல் கூடுமென்பது; மற்றொன்று தமிழில் நூல் செய்தால் அது, வடமொழியிலிருந்து மொழிபெயர்த்ததாகக் கூறவேண்டுமென்பது. இம்மருட்சிக் கொள்கையைக் கடைப்பிடியாகக் கொண்டே வள்ளுவர், ஒளவையார் போன்ற பெரியார் வரலாறெல்லாம் புனைந்துரைக்கப்பட்டன. அவற்றுக்கு என்ன உண்மைச் சான்றுண்டு? இதைப் போன்றே இவர் வரலாறு பற்றிய கதைகளும் புனைந்துரையென்றே கோடல் பொருந்துவதாகும். தொல்காப்பியருக்குத் திரணதூமாக்கினி யென்று புனைபெயர் சூட்டி ஆரியராக்கிய இக் கட்டுக் கதையாளர் வேறென்னதான் கூறார்? எனவே, இப் புனைந்துரைகளை உண்மையென நம்பாது தமிழுக்கு உரையெழுதி வளம்படுத்திய பெரியார்களுள் இவரும் ஒருவர் எனக் கொள்ளுதலே தக்கது.
தொல்காப்பியத் தனிச்சிறப்பு
தமிழ்மொழியின் மெல்லிய ஒலிநயமும் சிறுசிறு சொற் குழுமமும் தொன்மையும் ஒண்மையும் ஒருங்கே தெளிந்துணரத் தொல்காப்பியமும் அதன் உரைவளங்களும் தமிழ்த்திருநாட்டிற்கு வற்றா வளனாய்க் குன்றாத மணி விளக்காய் வாய்ந் தொளிர்கின்றது.
இத் தன்மைத்தாம் ஒரு பெருநூல் தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னே தோன்றி வேரூன்றி நிற்பதாயின் அது, தமிழர்தம் பழைமையையும் நாகரிக மேம்பாட்டையும் தெள்ளத்தெளிய விளக்குவதொன்றாம்.
இதனை எழுத்தெண்ணிக் கற்ற பெரியார் பண்டும் இன்றும் பல்கியுள்ளனர். பிற்கால வேற்றுமொழி மயக்கத்தால் 'தமிழில் என்ன இருக்கிற' தென்று தம்மையும் தமிழ் மாந்தராகக் கருதும் பேரறிஞர்கள் இற்றைஞான்று இதனைக் கருத்து வைத்துக் கற்க முற்படின், இதுவே நிலநூல் உயிர் நூல் ஒலிநூல் பொருள்நூல் அறிவு விரிக்கும் அருள் நூல் என வுணர்வர். இதன் பெருமையைத் தமிழக முழுதுமன்றி ஆழிசூழ் உலகம் எங்கும் உணர்ந்தின்புறச் செய்ய வேண்டுவது, தமிழ் மாந்தர்கள் ஒவ்வொருவரின் கைம்மாறு வேண்டாக் கடப்பாடாகும்.
'நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்'
செல்லூர்க்கிழார்,
செ.ரெ. இராமசாமி பிள்ளை,
கழகப்புலவர்.
|