முகப்புதொடக்கம்

பதிப்புரை

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றி முத்த குடிமையில் முகிழ்த்தவா தமிழர் என்பது , ஆசிரியர் ஐயனாரிதனார் கண்டுரைத்த பேருண்மையாகும் . அதற்கு அரண்செய்வது , ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியம்.

இதற்குமுன் இப் பொருளதிகார நச்சினார்க்கினியர் . பேராசிரியர் உரைகளை யாம் வெளியிட்டுள்ளமை யாவரும் நன்கறிந்ததே . இவ்வுரை , வித்துவான் பாடத்துக் குரியதாக இருத்தலானும் , பொருளதிகாரத்துக்கு முழுதுமுள்ள உரையாக இருத்தலானும் எமக்குக் கிடைத்த பதிப்பும் ம்படிகளைக் கொண்டு செப்பனிட்டு வெளியிட்டுள்ளோம் . வேறு படிகளோ ஏட்டுச் சுவடிகளோ கிடைப்பின் அன்பர்கள் அவற்றை அனுப்பினும் , தமிழாசிரியாகள் வேறு திருத்தங்கள் எவையேனுமிருந்து தெரிவிப்பினும் , அவற்றை4 மறுபதிப்பில் சேர்த்து வெளியிடுவோம் . அதற்குப் பாராட்டும் கடப்பாடுடையேம் .

இப் பொருளதிகாரத்துக்குப் பிற ஆசிரியர்கள் உரையிருப்பினும் இளம்பூரணர் உரை கருத்து வளனும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறனுமிக்க பேருரை. இவ்வுரைக்கேற்ற கருத்தினை நன்கு விளக்க அவ்வந் நூற்பா , மேற்கோள் விளக்கச் செய்யுட்களின் முதற்குறிப்பு அகரவரிசையும் இணைத்துள்ளனம் .

இப்பதிப்பு ஆசிரிய குலத்திற்கும் மாணவ குலத்திற்கும் பெரிதும் பயன் தருவதொன்றாகும் . எனினும் ஏறத்தாழ 700 பக்கங்களைக் கொண்ட இந்நூலைப் படிப்போர் வசதி கருதி மூன்று பகுதிகளாகப் பிரித்து அகத்திணை இயல் , புறத்திணை இயல் முதற்பகுதியாகவும் ; மெய்ப்பாட்டியல் முதல் நூல் இறுதி வரை மூன்றாம் பகுதியாகவும் அமைத்துள்ளோம் . இலக்கண அன்பர்கள், குறிப்பாக மாணவர்கள் இதனைத் தக்கபடி பயன் படுத்தி இலக்கண அறிவு பெறுவார்களாக.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.


முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்