முகப்புதொடக்கம்

பொருளதிகாரம்

களவியல்

இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின், களவியல் என்னும் பெயர்த்து. களவொழுக்கம் உணர்த்தினமையாற் பெற்ற பெயர். அஃதாதல் ஈண்டு உரைக்கின்றதனால் பயன் இன்றாம்;களவென் பது அறம் அன்மையின் [ எனில் ], அற்றன்று; களவு என்னும் சொல் கண்டுழியெல்லாம் அறப்பாற் படாதென்றால் அமையாது, களவாவது, பிறர்க்குரிய பொருள் மறையிற்கோடல், இன்னதன்றி, ஒத்தார்க்கும் மிக்கார்க்கும் பொதுவாகிய கன்னியரைத் தமர் கொடுப்பக் கொள்ளாது, கன்னியர், தம் இச்சையினால் தமரை மறைத்துப் புணர்ந்து பின்னும் அந் நிலை வாழாமல் நிற்றலால் இஃது அறமெனப்படும் அன்னதாதல் இச் சூத்திரத்தானும் விளங்கும்.

அஃதற்றாக, மேலை ஓத்தினேடு இவ்வோத்திற்கு இயைபு என்னை மெனின், கைக்கிளை முதற் பெருந்திணை இறுவாயாக எழுதிணை ஓதி அவற்றின் புறத்து நிகழுந் திணைகளும் ஓதிப்போந்தார். அவ்வெழுதிணையினும் ஒருதலை வேட்கையாகிய கைக்கிளையும், ஒப்பில்கூட்டமாகிய பெருந்திணையும் ஒழித்து இருவரன்பும் ஒத்தநிலைமையாகிய நடுவன் ஐந்திணைக் கண்ணும் புணர்ப்பும் பிரிதலும் இரத்தலும் இரங்கலும் ஊடலுமாகிய உரிப்பொருள் களவு கற்பு என்னும் இருவகைக் கைக்கோளினும் நிகழுமாதலின், அவ்விருவகைக் கைக்கோளினும் களவகிய கைக்கோள் இவ்வோத்தினுள் உணர்த்துதலான் அவற்றின் பின் கூறப்பட்டது; இது நடுவணைந்திணைக்கன் நிகழும் பொருட் பாகுபாடாயின், அகத் திணையியலின் பின்வைக்கற்பாலதுஎனின், ஆண்டு வைக்கக் கருதின் "வெட்சிதானை குறிஞ்சியது புறனே" [புறத்திணை - 59] என்னும் மாட்டேறு பெறாதாம், அதனிடைக் களவியலும் கற்பியலும் கிடத்தலான் என்க.

மற்றும், அஃது யாங்ஙனம் உணர்த்தினரோ எனின்,

"காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்1
பாங்கொடு தழாஅலுந் போழியிற் புணர்வுமென்று
ஆங்கநால் வகையினும் அடைந்த சார்வொடு2
மறையென மொழிதன் மறையோர் ஆறே"

(செய்யுளியல், 178)

என்பதனான் இந்நால்வகையும் இதனுள் உரைக்கப்படுகின்றதென்று கொள்ளப்படும், காமப்புணர்ச்சி யெனினும், இயற்கைப்புணர்ச்சியெனினும், முன்னூறு புணர்ச்சியெனினும், தெய்வப் புணர்ச்சி யெனினும் ஒக்கும். இவையெல்லாம் காரணப்பெயர் . அஃதாவது, ஒத்தார் இருவர் தாமே கூடுங்கூட்டம். இடந்தலைப் பாடாவது இயற்க்கை புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிற்றை ஞான்றும் அவ்விடத்துச் சென்று எதிர்ப் படுதல் . பாங்கற் கூட்டமாவது, இப் புணர்ச்சி பாங்கற்கு உரைத்து, நீயெமக்குத் துணையாக வேண்டுமென்ற அவன் குறிவழிச் சென்று தலைமகள் நின்ற நிலையை யுணர்த்தச் சென்று கூடுதல், தோழியிற் கூட்டமாவது, இவற்றின் பின்னர் இக்கூட்டம் நீடச்சேறல் வேண்டித் தோழியை இரந்து பின்னின்று அவள் வாயிலாகக் கூடுதல்.அவை நான்கும் இம்முறையே நிகழும் என்று கொள்க. இனி இம்முறை நிகழாது இடையீடு பட்டு வரும். அஃதாமாறு, தலைமகள் எதிர்பட்டுழி அன்புடையார் எல்லார்க்கும் இயற்க்கைப் புணர்ச்சி முட்டின்றிக்கூடுதல் உலகியல் அன்மையான் தலைமகளை யாதானும் ஓரிடத்து எதிர்ப்பட்ட தலைமகன் அவன் காதற் குறிப்புணர்ந்து நின்று, கூட்டத்திற்கு இடையீடு உண்டாயுழியும் ஆண்டுச் சென்ற வேட்கை தணி யாது நின்று, முன்னைஞான்று கண்டாற் போலப் பிற்றை ஞான்றும் காணலாகுமோ என ஆண்டுச் சேறலும் , தலைமகளும் அவ்வாறே வேட்கையான் அடர்ப்புண்டு ஆண்டுவருதலும் ஆகிய வழிப் புணர்ச்சி நிகழும். ஆண்டு ஆயத்தாரானாதல் பறரானாதல் இடையீடுஉபட்டுழித் தன் வருத்தத்தினைப் பாங்கற்கு உணர்த்தி அவன் தலைமகள் நின்றுழியறிந்து கூற, ஆண்டுச்சென்று புணரும். அவ்விடத்தும் இடையீடு பட்டுழித் தோழிவாயிலாக முயன்றெய்தும் .இவ்வாறும் , ஒரொ வொன்று இடையீடுபட்டு வருதலும் உளவாம்.அவ்வாறாயின், இயற்க்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுழிவரைந்தெய்தல் தக்கதன்றோ எனின் வரைந்தெய்துந்திறம் நீட்டிக்கு மாயின் வேட்கை நிறுத்தலாற்றாதார் புணர்ச்சி கருதி முயல்ப.இவ்வாறு சான்றோர் செய்யுள் வந்தனவும் உளவோ எனின், சான்றோர் செய்யுட்களும் இவ்வாறு பொருள் கொள்ள ஏற்பன உள, அவையாவன :-

"மருந்தின் தீரா மண்ணின் ஆகாது
அருந்தவ முயற்ச்சியின் அகற்றலும் அரிதே
தான்செய் நோய்க்குத் தான்மருந் தாகிய
தேன்இமிர் நறவின் தேறல் போல
நீதர வந்த நிறைஅருந் துயரம் நின்
ஆடுகொடி மருங்கின் அருளின் அல்லது
பிறிதில் தீரா தென்பது பின்நின்று
அறியக் கூறுதும் எழுமோ நெஞ்சே
நாடுவளங் கொண்டு புகழ்நடுதல் வேண்டித்தன்
ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்
கொற்கைஅம் பெருந்துறை குனிதிரை தொகுத்த
விளங்குமுத்து உறைக்கும் வெண்பல்
பன்மாண் சாயல் பரதவர் மகட்கே."

இதனுள் "ஆடுகொடி மருங்கின் அருளின் அல்லது பிறிதில் தீராது" என்பதனான் இயற்கைப் புணர்ச்சி இடையீடு பட்டுப் புணர்ச்சி கருதிக் கூறியவாறு காண்க.

"மயில்கொல் மடவாள்கொல் மாநீர்த் திரையுள்
பயில்வதோர் தெய்வங்கொல் கேளிர் - குயில்பயிரும்3
கன்னி இளஞாழல் பூம்பொழில் நோக்கிய
கண்ணின் வருந்தும்என் நெஞ்சு."

(திணைமொழி 49)

இதனுள் ஐயநிலையைப் பாங்கற்கு உரைத்தலின் புணர்ச்சி இன்றாயிற்று.

"கொண்டல் மாமழை குடக்கேர்பு குழைத்த
சிறுகோல் இணர பெருந்தன் சாந்தம்
வகைசேர் ஐம்பால் தகைபெற வாரிப்
புலர்விடத் துதிர்த்த திகள்படு கூழைப்
பெருங்கண் ஆயம் உவப்பத் தந்தை
நெடுந்தேர் வழங்கும் நிலவுமணல் முற்றத்துப்
பந்தொடு பெயரும் பரிவி லாட்டி
அருளினும் அருளான் ஆயினும் பெரிதழிந்து
பின்னிலை முனியல்மா நெஞ்சே என்னதூஉம்
அருந்துயர் அவலந் தீர்க்கும்
மருந்துபிறி தில்லையான் உற்ற நோய்க்கே."

(நற்றினை-140)

இதனுள் 'அருளினும் அருளாளாயினும்' என்றமையால் கூட்டமின்மையும் 'பின்னிலை முனியல்' என்றமையால் இரந்து பின்னிற் பானாகத் துணிந்தமையும்4, தோழியிற் கூட்டத்து இயற்கைப் புணர் ச்சிக்கு ஒருப்பட்டமையும் உணர்க.

"நறவுக்கமழ் அலரி நறவுவாய் விரிந்து
இறங்கிதழ் கமழும் இசைவாய் நெய்தற்
கண்ணித் தலையர் கருங்கைப் பரதவர்
நின்னையர் அல்லரோ நெறிதாழ் ஓதி
ஒண்சுணங் கிளமுலை ஒருஞான்று புணரின்
நுண்கயிற் றுறுவலை நுமரொடு வாங்கிக்
கைதை வேலி இவ்வூர்ச்
செய்தூட் டேனோ சிறுகுடி யானே."

பெரியீரெனச் சேட்படுத்தவழிக் கூறியது.

"கூறுவம் கொல்லோ கூறலம் கொல்லெனக்
கரந்த காமம் கைநிறுக் கல்லாது
நயந்துநாம் விட்ட நன்மொழி நம்பி
நள்ளாரை யாமத்து விழுமழை கரந்து
5கார்விரை கமழுங் கூந்தற் றூவினை
நுண்ணுதல் ஆகம் பொருந்தினள் வெற்பிள்
6இளமழை சூழ்ந்த மடமயில் போல
வண்டுவழிப் படரத் தண்மலர் வேய்ந்து
வில்வகுப் புற்ற நல்வாங்கு குடச்சூல்
அம்சிலம் பொடுக்கி அஞ்சினள் வந்து
7துஞ்சூர் யாமத்து முயங்கினள் பெயர்வோள்
ஆன்ற கற்பிற் சான்ற 8பெரியள்
அம்மா அரிவையோ அல்லள் தெனா அது
ஆஅய் நன்னாட்டு அணங்குடைச் சிலம்பிற்
கவிரம் பெரிய வுருகெழு கவாஅன்
நேர்மலை நிறைசுனை உறையுஞ்
சூர்மகள்9 மாதோ என்னுமென் நெஞ்சே."

(அகம். 198)

இது தோழியிற் கூடிய தலைமகன் கூற்று.

"அவரை பொருந்திய பைங்குரல் ஏனல்
கவரி மடமா கதூஉம் படர்சாரல்
கானக நாட மறவல் வயங்கிழைக்கு
யானிடை நின்ற புணை"

(ஐந்திணையெழு-1)

இதனானே முந்துற்ற கூட்டமின்மை யுணர்க. இனி ஒரு கூட்டமும் நிகழாது ஆண்டு வந்துடைவேட் கை இருவருக்கும் தணியாது நின்று வரைந்தெய்தலும் ஒன்று. இவ்வகையினாள் இக் களவொழுக்கம் மூவகைப்படும்.


(பாடம்)
1.இடந்தலைப்பாடும்.
2.சார்பொடு - தொல். செய். 186, (நச்சி)
3. குயில் பயிலும்.
4. துணிந்தமையானும்.
5. கார்மலர்
6. இனமழை
7. துஞ்சியாமத்து
8. பேரியல்
9.கொல்லெனத் துணியுமென்.


முன் பக்கம் மேல்அடுத்த பக்கம்