முன்னைப்
பழமொழிக்கும் முன்னைப் பழமொழியாய்ப்
பின்னைப் புதுமொழிக்கும் பின்னைப்
புதுமொழியாய் இலங்குவது அமிழ்தினும் இனிய நம்
தமிழ்மொழியே என்பது அறிஞர்
கண்டவுண்மையாம். நம் மொழியின்
தொன்மையும், வன்மையும், தெய்வத்தன்மையும்
எடுத்துக்காட்டி நிற்கும் இலக்கணம்
தொல்காப்பியம் ஒன்றே. அதனையொத்த
தொல்லையெல்லையை யெட்டிய நூல் இலக்கணம்
இலக்கியங்களுள் ஒன்றும் இன்று என்று துணிந்து
கூறலாம். அயனாட்டு மொழிகள் அனைத்தினும்
சிறந்த மொழி நம்மொழி என்பதற்குப்
பொருளிலக்கணமே போதிய சான்றாம். எழுத்து,
சொல் இவற்றிற்கு இலக்கணம் வகுத்த நூல்கள்
எந்நாட்டிலும் உள்ளன. பொருளிலக்கணத்தைப்
புகுத்தியவர் தொல்காப்பியர் ஒருவரே.
அவர்க்கு முன்னரும் பொருளிலக்கணம் தமிழ்
மொழியில் அமைந்திருந்தது எனற்கு ஆதரவு
கண்டிலம். கால வரையறை காணப்படாத தனிச்
சிறப்புவாய்ந்த தமிழ்மொழியிலக்கண நூல்
தொல்காப்பியம் ஒன்றே என்பது ஆய்வாளர்
ஆய்ந்து கண்ட முடிவாம்.
தொல்காப்பியம்
என்ற இலக்கண நூலுக்கு உரை கண்டவர் எத்துணையர்
என வரையறுத்துக் கூற இயலாது; பலர் உரை
வரைந்திருப்பர்; அவர் தீட்டிய வுரை யேட்டுச்
சுவடிகள் சிதலும் கனலும் புனலும் தின்றன வொழிய
நின்றனவே இன்று நாம் காண்பனவாதலின்.
இதுகாறும் புலவர் போற்றி வைத்துள்ள
உரைகளாகக் கண்டு அச்சிற் பதித்து
வெளியிடப்பட்டன இளம் பூரணம்,
நச்சினார்க்கினியம், சேனாவரையம்,
தெய்வச்சிலையம், கல்லாடம், பேராசிரியம்
என்பனவே, பேராசிரியர் உரை பொருளதிகாரம்
பிற்பகுதி நான்கு (மெய்ப்பாடு, உவமம்,
செய்யுள், மரபு) இயல்கட்கு உரியவையே
கிடைத்துள்ளன. கல்லாடர் உரை சொல்லதிகாரம்
260 நூற்பாக்கட்கு மட்டும் கிடைத்துள்ளது.
சேனாவரையர், தெய்வச்சிலையார் இருவர்
வரைந்த வுரை சொல்லதிகாரத்திற்கு மட்டுமே
எனத் தோன்றுகிறது. நச்சினார்க்கினியர்
எழுத்து, சொல், பொருள் மூன்றுக்கும்
வரைந்திருப்பர் என எண்ணினும் இறுதி
நான்கியலுக்கும் அவருரை கிடைத்திலது.
இளம்பூரணருரையே தொல்காப்பிய முழுவதுக்கும்
வரைந்த தொன்மையுரையாகத் தோன்றுவது. இம்
முறையில் உள்ளன தொல்காப்பியவுரைகள் எனக்
காண்க.
எழுத்துச்
சொல் பொருள் என நின்ற மூன்றில் நடுநின்ற
சொல்லிற்கு ஐவருரை யமைந்து கிடக்கக் கண்டது
வியப்பினும் |