xiv
இதனை நாவலர் பாரதியார், பின்வருமாறு மறுத்துப் புத்துரை
காண்பர்:
“இவ்வுரை, சூத்திரச் சொல்லமைதிக்கு ஏற்காததோடு, வஞ்சியியல்பை இழிதகு பழிதரும் பிழையொழுக்கமாகவும் பண்ணுகிறது.‘எஞ்சா மண்ணசை’ என்ற தொடர், அதையடுத்து நிற்கும் ‘வேந்தனை’ என்னும் இரண்டாம்வேற்றுமைச் சொல்லுக்கு நேரே அடையாயமைவது வெளிப்படை.அவ்வளவிற் கொள்ளாமல், அத்தொடரைப் பின்வரும் ‘வேந்தன்’ என்னும் எழுவாய்ச் சொல்லுக்கும் ஏற்றி, அவன் படையெடுத்துச் செல்லுதற்குக் காரணமே, மற்றவன் மண்ணிடத்து அவனுக்குள்ள வேட்கையாகுமென இவ்வுரைகாரர் விளக்குகின்றார்.மன்னர் போர்கருதிப் படையெடுப்பதன் நோக்கமெல்லாம் பிறர் மண் கவரும்வேட்கைதான் எனும் கொள்கை நாகரிக உலகம் மதிக்கும் போரறமழித்துப் பழிக்கிடனாக்கும்.தக்ககாரணமின்றித் தவறற்ற மெலியாரின் நாட்டை வலியார், மண் வேட்கையாலே படையெடுத்துச் சென்று வென்று கவர்தல் வஞ்சித்திணை எனக்கூறுவது, உயர்ந்த பழந்தமிழ் ஒழுக்கத்தைப் பழிக்கத்தகும் பிழையாக்கி முடிப்பதாகும்!வலிச் செருக்கால், மெலியார் நாட்டைப் பறிப்பது உலகியலில் உண்டேனும், அதனை வெறுத்து விலக்குவதை விட்டு வேத்தியல் அறமாக்கி, வஞ்சியொழுக்கமெனச் சிறப்பித்து, ஒரு திணைவகையாக்குவது, ‘அறனறிந்து மூத்த அறிவுடைய’ தொல்காப்பியர் நூற்பெருமைக் கிழுக்காகும்!அஃது அவர்கருத்தன்மை அவர் சூத்திரச் சொல்லமைப்பே தெற்றெனத் தெளிக்கின்றது.இச்சூத்திரத்தில் ’எஞ்சா மண்ணசையா லிருவேந்தர்’ என்னாமல், ‘எஞ்சா மண்ணசை வேந்தனை’ என்றமைத்ததால் முன்னுரைகாரர் பொருள், தொல்காப்பியர் கருத்தன்று என்பதே தேற்றமாகும்!” இவ்வாறு முன்னைய உரையை மறுப்பவர், “தணியாத பிறர்மண் ஆசையுடைய ஒரு வேந்தனை, (அறமறமுடைய) பிறிதொரு மன்னன், அவன்வஞ்ச நெஞ்சம் அஞ்சுமாறு தானே (படையொடு) மேற்சென்று வென்றடக்குதலைச் சுட்டும் அளவிற்று வஞ்சித்திணை”
|