தன்று என்னும் வெண்பாமாலையுள் வாகைத்திணையுள் இறுதிச் சூத்திரத்தா னுணர்க' (சூ. 63, உரை) என்றுமாறனலங்கார உரையாசிரியரும் கூறுவனவற்றால் இந்நூலிலுள்ள கொளுக்கள் சூத்திரங்களெனவும் வழங்கப்படுமென்று தெரியவருகிறது. இந்நூலாசிரியராகிய *ஐயனாரிதனார்சேரர் பரம்பரையில் உதித்தவரென்பதும் இதற்கு முதனூல், ஆசிரியர் அகத்தியனாருடைய மாணாக்கர் பன்னிருவராலும் அருளிச்செய்யப்பட்ட பன்னிரு படல மென்பதும் "மன்னியசிறப்பின்"என்னும் இந்நூற் சிறப்புப் பாயிரத்தாலும், "மெய்யி னார்தமிழ் வெண்பாமாலையுள், ஐய னாரித னமர்ந்துரைத் தனவே"என்னும் இந்நூலின் 18 - ஆம் சூத்திரத்தாலும், "பன்னிருபடல முதனூலாக வழிநூல் செய்த வெண்பாமாலை ஐயனாரிதனாரும் இது கூறினார்"(தொல். மரபு. சூ. 94, பேர்.) என்பதனாலும் உணரப்படும்; பன்னிருபடலத்தின் வழி நூலென்பதற்கேற்ப வெட்சிப் படலமுதல் பெருந்திணைப் படலம் இறுதியாகப் பன்னிரண்டு படல உறுப்புக்களை இதன்பாற் காணலாம். ஐயனாரிதனார் தமிழ் நூல்களிற் சிறந்த அறிவு வாய்ந்தவர்; சைவசமயத்தினர். தாம் சேரர் மரபினராயினும் சோழ பாண்டியர்களையும் ஒப்பச் சிறப்பித்தலும், சைவரேனும் திருமாலைப்பற்றி உரிய இடங்களிற் கூறுதலும் இவருடைய நடுநிலையின் உயர்வைப் புலப்படுத்துகின்றன. இந்நூல் பெரும்பாலும் வெண்பாமாலை எனவே வழங்கப்படும். இதி லூள்ள வெண்பாக்களுட் பலவும், கொளுக்களுட் சிலவும்இளம்பூரணர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார்,நச்சினார்க்கினியர், புறநானூற் றுரையாசிரியர் முதலியவர்களால்மேற்கோளாக எடுத்துக் காட்டப் பட்டும் உரைநடையாகஎழுதப்பட்டும் உள்ளன. இலக்கண விளக்க உரையாசிரியர் இந்நூலைப் பெரும்பாலும்எடுத்தாண்டிருக்கின்றனர். இதனால், பண்டைக் காலத்திலிருந்த அரசர் பகைவருடைய பசுக்களைக் கவர்தல் முதலிய போர்முறையும், அரசர் அந்தணர் வணிகர் வேளாளர் முதலியோர் ஒழுகலாறும், பிறவும் புலப்படும். பெரும் பாலும் வீரத்தைப் பற்றிய செய்திகளே இதனுள் அமைந்துள்ளன. இதிற் கூறப்பட்ட யுத்தமுறை முதலியவற்றிற்கும் தொல்காப்பியப் புறத்திணையியலிற் கூறப்பட்டுள்ளவற்றிற்கும் ஆங்காங்குச் சிற்சில வேறுபாடுகள் காணப்படினும், சொன் முடிபும் பொருண்முடிபும் வேறு படாமையின் 'மரபுநிலை திரியாதன' என்று பெரியோர் கூறுவர். புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய நூல் உரைகளில் புறப் பொருட் செய்திகளுக்கு இலக்கணம் கூறவந்த அந்நூலுரையாசிரியர்கள் இந்நூலிற் கூறப்பட்ட முறையைப் பின்பற்றியே எழுதுகின்றனர். இதற்கு முதனூலாகிய பன்னிருபடலச் சூத்திரங்களுட் சில யாப்பருங்கல விருத்தியுரை, இலக்கண விளக்கவுரை முதலிய பழையவுரைகளில் ஆங்காங்குக் காணப்படுகின்றனவேயன்றி, அந்நூல் முழுவதும் இக்காலத்து அகப்படாமையால் இதிலுள்ள சில திணைகளின் இலக்கணமும் துறைப்பெயர்கள் பலவற்றின் பொருட் காரணமும் புலப்படவில்லை; இந்நூலுரையாலும் அவை விளங்கவில்லை. ஆயினும், தொல்காப்பியப் புறத்திணையியற்குரிய உரைகளால் அவற்றுட் பெரும்பாலன நன்கு விளங்குகின்றன. இந்நூலுறுப்புக்களாகிய பன்னிரண்டு படலத்தும் முறையே அமைந்த வெட்சி முதலிய திணைகளுள், (1) வெட்சித்திணையாவது: - பகைவருடைய பசுக்களைக் கவர்தல்; இதற்கு வெட்சிப் பூவையேனும், மாலையையேனும் சூடுதல் மரபு. வெட்சியென்பது ஒருவகை மரம்; இதன் மலர் செந்நிறமுடையது. இத்திணை வெட்சியரவம் முதலிய பத்தொன்பது துறைகளையுடையது. இதனை அகத்திணைகளுள் ஒன்றாகிய குறிஞ்சியின் புறனென்பர் தொல்காப்பியர்; புறத். சூ. 1. (2) கரந்தைத்திணையாவது: - பகைவர் கவர்ந்த பசுக்களை மீட்டல்; இதற்குக் கரந்தைப் பூவைச் சூடுதல் உரியது; கரந்தை யென்பது கொட்டைக் கரந்தையென்னும் பூடு; "நாகுமுலையன்ன நறும்பூங் கரந்தை" (புறநா. 261) என்பதனால் அதன் பூவின் இயல்பு பெறப்படும். இத்திணை கரந்தையரவ முதலிய பதின்மூன்று துறைகளையுடையது; இது வெட்சித்திணைக்கு மறுதலைத் திணை; "வெட்சியும் கரந்தையுந் தம்முண் மாறே" (பன்னிரு.); இது வெட்சிக் கரந்தையென்றும் கூறப் படுவதுண்டெனத் தெரிகிறது. கரந்தையென்று ஒருதிணை கொள்ளாது நிரைமீட்டலை வெட்சித்திணையுள் அடக்குவர் தொல்காப்பியர். அவர் கூறும் கரந்தையென்னும் பகுதி தன்னுறுதொழிலாக வேத்தியலின் வழுவிவந்த பொதுவியலைக் குறிக்கின்றது. (3) வஞ்சித்திணையாவது: - பகைவருடைய நாட்டைக் கொள்ள நினைந்து போர்செய்தற்கு மேற்செல்லல்; இதற்கு வஞ்சிப் பூவைச் சூடுதல் உரித்து; வஞ்சியென்பது ஒருவகைக் கொடி; இப்பெயரினதாகிய மரமொன்றும் உண்டு. இத்திணை வஞ்சியரவ முதலிய இருபது துறை களையுடையது இதனை மண்ணாசையால் மேற்சேறலென்றும், முல்லைத் திணையின் புறனென்றும் கூறுவர் தொல்காப்பியர்; புறத். சூ. 6. (4) காஞ்சித்திணையாவது: - போர் செய்தற்கு வந்த பகைவர்க்கு எதிர்சென்று ஊன்றுதல்; இதற்குக் காஞ்சிப் பூவைச் சூடுதல் உரித்து; காஞ்சி யென்பது ஒரு மரம். இத்திணை காஞ்சி யெதிர்வு முதலிய இருபத்தொரு துறைகளை யுடையது; இது வஞ்சித்திணைக்கு மறுதலைத் திணை; "வஞ்சியுங் காஞ்சியுந் தம்முண்மாறே" (பன்னிரு.); இத்திணை வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் சாற்றும் * ஐயனாரிதனாரென்பது திருவிடைக்கழியைச் சார்ந்த குராஞ்சேரியிலுள்ள சாஸ்தாவின் பெயர். இப்படியே சாஸ்தாவின் பெயராக இது பலவிடத்தும் வழங்குகின்றது.
|