பூதன் தேவனார்

80. மருதம்
'மன்ற எருமை மலர் தலைக் காரான்
இன் தீம் பாற்பயம் கொண்மார், கன்று விட்டு,
ஊர்க் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும்
பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து,
5
தழையும் தாரும் தந்தனன், இவன்' என,
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ,
தைஇத் திங்கள் தண் கயம் படியும்
பெருந் தோட் குறுமகள் அல்லது,
மருந்து பிறிது இல்லை, யான் உற்ற நோய்க்கே.

சேட்படுக்கப்பட்டு ஆற்றானாய தலைவன், தோழி கேட்ப, தன் நெஞ்சிற்கு உரைத்தது.-பூதன்தேவனார்