வாழை மென் தோடு

400. மருதம்
வாழை மென் தோடு வார்புஉறுபு ஊக்கும்
நெல் விளை கழனி நேர் கண் செறுவின்,
அரிவனர் இட்ட சூட்டு அயல், பெரிய
இருஞ் சுவல் வாளை பிறழும் ஊர!
5
நினின்று அமைகுவென்ஆயின், இவண் நின்று,
இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ?
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் கெட அறியாதாங்கு, சிறந்த
கேண்மையொடு அளைஇ, நீயே
10
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே.

பரத்தை தலைவனைப் புகழ்ந்தது. முன்பு நின்று யாதோ புகழ்ந்தவாறு எனின், 'நின் இன்று அமையாம்' என்று சொன்னமையான் என்பது.-ஆலங்குடி வங்கனார்