விளக்கின் அன்ன

310. மருதம்
விளக்கின் அன்ன சுடர் விடு தாமரை,
களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க,
உண்துறை மகளிர் இரிய, குண்டு நீர்
வாளை பிறழும் ஊரற்கு, நாளை
5
மகட் கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே!
தொலைந்த நாவின் உலைந்த குறு மொழி
உடன்பட்டு, ஓராத் தாயரொடு ஒழிபுடன்
சொல்லலைகொல்லோ நீயே-வல்லை,
களிறு பெறு வல்சிப் பாணன் கையதை
10
வள் உயிர்த் தண்ணுமை போல,
உள் யாதும் இல்லது ஓர் போர்வைஅம் சொல்லே?

வாயிலாகப் புக்க விறலியைத் தோழி சொல்லியது; விறலியை எதிர்ப்பட்ட பரத்தை சொல்லியதூஉம் ஆம்.-பரணர்