கொக்கினுக்கு

280. மருதம்
'கொக்கினுக்கு ஒழிந்த தீம் பழம், கொக்கின்
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்
தூங்கு நீர்க் குட்டத்து, துடுமென வீழும்
தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை
5
புலவாய்' என்றி-தோழி!-புலவேன்-
பழன யாமைப் பாசடைப் புறத்து,
கழனி காவலர் சுரி நந்து உடைக்கும்,
தொன்று முதிர் வேளிர், குன்றூர் அன்ன என்
நல் மனை நனி விருந்து அயரும்
10
கைதூவு இன்மையின் எய்தாமாறே.

வாயில் வேண்டிச் சென்ற தோழிக்குத் தலைமகள் மறுத்து மொழிந்தது; தலைமகனை ஏற்றுக்கொண்டு வழிபட்டாளைப் புகழ்ந்து புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியதூஉம் ஆம்.- பரணர்