நெய்தல் கூம்ப

187. நெய்தல்
நெய்தல் கூம்ப, நிழல் குணக்கு ஒழுக,
கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய,
பல் பூங் கானலும் அல்கின்றன்றே;
இன மணி ஒலிப்ப, பொழுது படப் பூட்டி,
5
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய,
தேரும் செல் புறம் மறையும்; ஊரொடு
யாங்கு ஆவதுகொல் தானே-தேம் பட
ஊது வண்டு இமிரும் கோதை மார்பின்,
மின் இவர் கொடும் பூண், கொண்கனொடு
10
இன் நகை மேவி, நாம் ஆடிய பொழிலே?

தலைமகன் பகற்குறி வந்து மீள்வானது செலவு நோக்கி, தலைமகள் தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியது.-ஒளவையார்