பெய்து போகு

396. குறிஞ்சி
பெய்து போகு எழிலி வைகு மலை சேர,
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப,
வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள்,
பொன்னின் அன்ன பூஞ் சினை துழைஇ,
5
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை
பாசறை மீமிசைக் கணம் கொள்பு, ஞாயிற்று
உறு கதிர் இள வெயில் உண்ணும் நாடன்!
நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய்
யார்க்கு நொந்து உரைக்கோ யானே-பல் நாள்
10
காமர் நனி சொல் சொல்லி,
ஏமம் என்று அருளாய், நீ மயங்கினையே?

தோழி தலைமகனை வரைவு கடாயது; வரைவு உணர்த்தப்பட்டு ஆற்றாளாய்ச் சொல் லியதூஉம் ஆம்; இரவுக்குறி மறுத்ததூஉம் ஆம்.