யாங்குச் செய்வாம்.....பொன் வீ

259. குறிஞ்சி
யாங்குச் செய்வாம்கொல்-தோழி!-பொன் வீ
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல்,
பெருங் கல் நாடனொடு இரும் புனத்து அல்கி,
செவ் வாய்ப் பைங் கிளி ஓப்பி, அவ் வாய்ப்
5
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி,
சாரல் ஆரம் வண்டு பட நீவி,
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி
அரிய போலக் காண்பேன்-விரி திரைக்
கடல் பெயர்ந்தனைய ஆகி,
10
புலர் பதம் கொண்டன ஏனற் குரலே?

தோழி தலைமகளைச் செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது.-கொற்றங் கொற்றனார்