யாமமும் நெடிய

378. நெய்தல்
யாமமும் நெடிய கழியும்; காமமும்
கண்படல் ஈயாது பெருகும்; தெண் கடல்
முழங்கு திரை, முழவின் பாணியின், பைபய,
பழம் புண் உறுநரின், பரவையின் ஆலும்;
5
ஆங்கு அவை நலியவும், நீங்கி யாங்கும்,
இரவு இறந்து, எல்லை தோன்றலது; அலர் வாய்
அயல் இற் பெண்டிர் பசலை பாட,
ஈங்கு ஆகின்றால்-தோழி!-ஓங்கு மணல்
வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து,
10
பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பி,
பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு
நாடாது இயைந்த நண்பினது அளவே.

தோழி சிறைப்புறமாகச் சொல்லியது; தலைமகன் ஒருவழித் தணந்த பின்னை வன்புறை எதிர்மொழிந்ததூஉம் ஆம்.-வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்