நற்றிணை
முகவுரை
     தமிழிலுள்ள நூல்களுள் காலத்தால் மிக முந்தியவை சங்க இலக்கியங்கள். கடைச் சங்க காலத்திலும் அதற்கு முன்பும் வாழ்ந்த புலவர் பெருமக்களின் பாடல்களில் சிறந்தன பலவும் கடைச் சங்க காலத்தின் இறுதியில் ஒருங்கு தொகுக்கப்பட்டன. இவை தொகை நூல்கள் எனப்படுபவை. பாவகையாலும், பொருள் பட்டு, எட்டுத் தொகுதிகளாக அமைக்கப்பட்டன. இவற்றைப் பண்டைய உரையாசிரியர்கள் 'தொகை' என்றும், 'எண் பெருந்தொகை' என்றும், குறிப்பிட்டுள்ளனர்.

     எட்டுத்தொகை நூல்களாவன; நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்பனவாம். இவ் வரிசை,

     நற்றிணை, நல்ல குறுந்தொகை, ஐங்குறுநூறு,
     ஒத்த பதிற்றுப்பத்து, ஓங்கு பரிபாடல்,
     கற்றறிந்தார் ஏத்தும் கலியே, அகம், புறம், என்று
     இத் திறத்த எட்டுத் தொகை.

என்ற பாடலில் காணும் அடைவுமுறையாகும். இம் முறையில் நூல்கள் தொகுக்கப்படவில்லை என்றும், தொகை நூல்களுள் குறுந்தொகை முதலாவதாகவும், ஏனைய நூல்கள் அதன் பின்னராகவும், தொகுக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

     ஒட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை ஒன்பது முதல் பன்னிரண்டு அடி வரையிலுள்ள நானூறு அகவற் பாக்களின் தொகுதி. குறுந்தொகை, நெடுந்தொகை, இரண்டிற்கும் இடைப் பட்டு, அளவான அடிகளை உடைமையினால், இது 'நற்றிணை' என வழங்கப்பட்டது போலும்.

     'நற்றிணை நானூறு' என்றும் இது வழங்கப்பெறும். 'இதனைத் தொகுப்பித்தான் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி' என்பது பழங் குறிப்பு. தொகுத்தாரது பெயர் தெரியவில்லை. நற்றிணைப் பாடல்களில் 234ஆம் பாடல் முற்றும் கிடைக்கவில்லை. 385ஆம் பாடலின் பிற்பகுதியும் மறைந்து போயிற்று. 56 பாடல்களின் ஆசிரியர் பெயர் காணப்பெறவில்லை. ஏனைய பாடல்களைப் பாடியவர்களின் தொகை 192.

     நற்றிணைச் செய்யுட்களுக்குக் குறிஞ்சி, முல்லை, முதலிய ஐந்திணைப் பாகுபாடு ஏட்டுப் பிரதிகளில் காணப் பெறவில்லை. இவை பதிப்பாசிரியர்களால் ஊகித்துக் கொடுக்கப் பெற்றனவே. அகப் பொருட் பாடல்களின் பொருள் விளக்கத்திற்கு இத் திணை விளக்கம் இன்றியமையாதது என்னும் கருத்தாலும், அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை ஆகியவற்றில் திணைப் பாகுபாடு பழமையாகவே உள்ளமையாலும், இந் நூலுக்கும் திணைப் பாகுபாடு பாடல்களின் தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பாடல்களின் அடியில் கொடுக்கப் பெற்றுள்ள கருத்துகள் பழமையானவை. அவை இந் நூலைத் தொகுத்தவராலேனும் பிற்காலத்தவராலேனும் அமைக்கப்பெற்றிருத்தல் வேண்டும்.