31-40 |
31 |
அம்ம வாழி, தோழி! மகிழ்நன் |
|
கடன் அன்று என்னும் கொல்லோ நம் ஊர் |
|
முடம் முதிர் மருதத்துப் பெருந் துறை |
|
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே? |
|
முன் ஒரு நாள் தன்னோடு புதுப்புனல் ஆடுழி, 'இனிப் புறத்தொழுக்கம் விரும்பேன்' என ஆயத்தாரோடு சூளுற்ற தலைமகன் பின்பும் பரத்தையரோடு புனலாடத் தொடங்குகின்றான் என்பது கேட்ட தலைமகள், அவன் உழையர் கேட்ப, தோழிக்குச் சொல்லியது. |
32 |
அம்ம வாழி, தோழி! மகிழ்நன் |
|
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு, எழு நாள் |
|
அழுப என்ப, அவன் பெண்டிர் |
|
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே. |
|
வாயில் வேண்டிப் புகுந்தார் கேட்பத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 2 |
33 |
அம்ம வாழி, தோழி! மகிழ்நன் |
|
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெருந் துறை, |
|
பெண்டிரொடு ஆடும் என்ப தன் |
|
தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே. |
|
இதுவும் அது. 3 |
34 |
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப் |
|
பொய்கைப் பூத்த, புழைக் கால் ஆம்பல் |
|
தாது ஏர் வண்ணம் கொண்டன |
|
ஏதிலாளர்க்குப் பசந்த என் கண்ணே. |
|
இதுவும் அது. 4 |
35 |
அம்ம வாழி, தோழி! நம் ஊர்ப் |
|
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் |
|
நிறத்தினும் நிழற்றுதல் மன்னே; |
|
இனிப் பசந்தன்று, என் மாமைக் கவினே. |
|
வாயிலாய்ப் புகுந்தார் தலைமகன் குணம் கூறிய வழி, 'அவனுக்கு இல்லாதனவே கூறுதலால், இப்பொழுது காண் என் மேனி பசந்தது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 5 |
36 |
அம்ம வாழி, தோழி! ஊரன் |
|
நம் மறந்து அமைகுவன் ஆயின், நாம் மறந்து |
|
உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே |
|
கயல் எனக் கருதிய உண் கண் |
|
5 |
பசலைக்கு ஒல்காவாகுதல் பெறினே. |
தான் வாயில் நேரும் குறிப்பினளானமை அறியாது, தோழி வாயில் மறுத்துழி, அவள் நேரும் வகையால் அவட்குத் தலைமகள் சொல்லியது. 6 |
37 |
அம்ம வாழி, தோழி! மகிழ்நன் |
|
நயந்தோர் உண்கண் பசந்து, பனி மல்க |
|
வல்லன் வல்லன் பொய்த்தல்; |
|
தேற்றான், உற்ற சூள் வாய்த்தல்லே. |
|
தலைமகளைச் சூளினால் தெளித்தான் என்பது கேட்ட காதல் பரத்தை தலைமகட்குப் பாங்காயினார் கேட்பத் தன் தோழிக்குச் சொல்லியது. 7 |
38 |
அம்ம வாழி, தோழி! மகிழ்நன் |
|
தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் |
|
தண் தளிர் வௌவும் மேனி, |
|
ஒண் தொடி முன்கை, யாம் அழப் பிரிந்தே. |
|
தலைமகன் மனைவயிற் போகக் கருதினான் என்பது சொல்லிய தன் தோழிக்குப் பரத்தை சொல்லியது. 8 |
39 |
அம்ம வாழி, தோழி! ஊரன் |
|
வெம் முலை அடைய முயங்கி, நம் வயின் |
|
திருந்து இழைப் பணைத்தோள் நெகிழ, |
|
பிரிந்தனன் ஆயினும், பிரியலன் மன்னே. |
|
ஒரு ஞான்று தலைவன் தன் மனைக்கண் சென்றது கொண்டு, 'அவன் பெண்மை நலம் எல்லாம் துய்த்துக் காதல் நீங்கிப் பிரிந்தான்' என்பது தலைவி கூறினாள் எனக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது. |
40 |
'அம்ம வாழி, தோழி! மகிழ்நன் |
|
ஒண் தொடி முன்கை யாம் அழப் பிரிந்து, தன் |
|
பெண்டிர் ஊர் இறைகொண்டனன்' என்ப |
|
கெண்டை பாய்தர அவிழ்ந்த |
|
5 |
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே. |
உலகியல் பற்றித் தலைவன் தன் மனைக்கண் ஒரு ஞான்று போனதே கொண்டு, 'அவ்வழிப் பிரியாது உறைகின்றான்' என்று, அயற் பரத்தையர் பலரும் கூறினார் என்பது கேட்ட காதல்பரத்தை, அவர் பாங்காயினார் கேட்ப, தன் தோழிக்குச் சொல்லியது |