111-120 |
111 |
அம்ம வாழி, தோழி! பாணன் |
|
சூழ் கழிமருங்கின் நாண் இரை கொளீஇச் |
|
சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை |
|
பிரிந்தும் வாழ்துமோ நாமே |
|
5 |
அருந் தவம் முயறல் ஆற்றாதேமே? |
'இற்செறிப்பார்' எனக் கேட்ட தலைமகள் வரையாது வந்து ஒழுகும் தலைவன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லியது. 1 |
112 |
அம்ம வாழி, தோழி! பாசிலைச் |
|
செருந்தி தாய இருங் கழிச் சேர்ப்பன் |
|
தான் வரக் காண்குவம் நாமே; |
|
மறந்தோம் மன்ற, நாணுடை நெஞ்சே. |
|
களவு நீடுவழி, 'வரையலன்கொல்?' என்று அஞ்சிய தோழிக்குத் தலைமகன் வரையும் திறம் தெளிக்க, தெளிந்த தலைமகள் சொல்லியது. 2 |
113 |
அம்ம வாழி, தோழி! நென்னல் |
|
ஓங்குதிரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு, |
|
ஊரார், 'பெண்டு' என மொழிய, என்னை, |
|
அது கேட்டு, 'அன்னாய்' என்றனள், அன்னை; |
|
5 |
பைபய 'எம்மை' என்றனென், யானே. |
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, 'நெருநல் இல்லத்து நிகழ்ந்தது இது' எனத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 3 |
114 |
அம்ம வாழி, தோழி! கொண்கன் |
|
நேரேம் ஆயினும், செல்குவம் கொல்லோ |
|
கடலின் நாரை இரற்றும் |
|
மடல்அம் பெண்ணை அவனுடை நாட்டே? |
|
இடைவிட்டு ஒழுகும் தலைமகன் வந்து சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது. 4 |
115 |
அம்ம வாழி, தோழி! பல் மாண் |
|
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய |
|
தண்ணம் துறைவன் மறைஇ, |
|
அன்னை அருங் கடி வந்து நின்றோனே! |
|
இற் செறிப்புண்ட பின்பும், வரைந்து கொள்ள நினையாது தலைமகன் வந்தானாக, அதனை அறிந்த தலைமகள் அவன் கேட்குமாற்றால் தோழிக்குச் சொல்லியது. 5 |
116 |
அம்ம வாழி, தோழி! நாம் அழ, |
|
நீல இருங் கழி நீலம் கூம்பும் |
|
மாலை வந்தன்று, மன்ற |
|
காலை அன்ன காலை முந்துறுத்தே. |
|
எற்பாட்டின்கண் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 6 |
117 |
அம்ம வாழி, தோழி! நலனே |
|
இன்னது ஆகுதல் கொடிதே! புன்னை |
|
அணி மலர் துறைதொறும் வரிக்கும் |
|
மணி நீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே. |
|
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 7 |
118 |
அம்ம வாழி, தோழி! யான் இன்று, |
|
அறனிலாளற் கண்ட பொழுதில், |
|
சினவுவென் தகைக்குவென் சென்றனென் |
|
பின் நினைந்து இரங்கிப் பெயர்தந்தேனே. |
|
சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது; தோழி வாயில் மறுத்த தலைமகள், பின்பு தலைமகன் வந்துழி, நிகழ்ந்ததனை அவட்குக் கூறியதூஉம் ஆம். 8 |
119 |
அம்ம வாழி, தோழி! நன்றும் |
|
எய்யாமையின் ஏதில பற்றி, |
|
அன்பு இலன் மன்ற பெரிதே |
|
மென் புலக் கொண்கன் வாராதோனே! |
|
'வரைதற்கு வேண்டுவன முயல்வேம்' எனச் சொல்லி வரையாது செலுத்துகின்ற தலைமகன் சிறைப்புறத்தான் ஆனமை அறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 9 |
120 |
அம்ம வாழி, தோழி! நலம் மிக |
|
நல்லஆயின, அளிய மென் தோளே |
|
மல்லல் இருங் கழி மல்கும் |
|
மெல்லம் புலம்பன் வந்தமாறே. |
|
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்து சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 10 |