141-150 |
141 |
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் |
|
துவலைத் தண் துளி வீசிப் |
|
பசலை செய்தன பனி படு துறையே. |
|
வரைவிடை வைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகின்ற தலைமகள், 'அவன் வரைதற்குப் பிரியவும், நீ ஆற்றாய் ஆகின்றது என்னை?' என்ற தோழிக்குச் சொல்லியது. 1 |
142 |
எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படு சினைப் |
|
புள் இறை கூரும் துறைவனை |
|
உள்ளேன் தோழி! படீஇயர் என் கண்ணே! |
|
வரையாது வந்தொழுகும் தலைமகன் இரவுக்குறிக்கண் சிறைப்புறத்தானாக, 'நின் கண் துயி றற் பொருட்டு நீ அவனை மறக்க வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 2 |
143 |
எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை, |
|
இனிய செய்த; நின்று, பின் |
|
முனிவு செய்த இவள் தட மென் தோளே. |
|
புறத்துத் தங்கி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. 3 |
144 |
எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்த் |
|
தனிக் குருகு உறங்கும் துறைவற்கு |
|
இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே. |
|
'தலைமகன் வரைந்து கோடல் நினையாது, களவொழுக்கமே விரும்பி ஒழுகாநின்றான்' என்பது அறிந்து வேறுபட்ட தலைமகள், 'அவன் கூறியவற்றால் இனிக் கடிதின் வரைவன்; ஆற்றாயாகாது ஒழியவேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது. 4 |
145 |
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ் சினை |
|
ஓதம் வாங்கும் துறைவன் |
|
மாயோள் பசலை நீக்கினன், இனியே! |
|
வரைவு மறுத்த தமர் உடம்படுமாற்றால் சான்றோரைத் தலைமகன் விடுத்தது அறிந்த தோழி தலைமகள் கேட்குமாற்றால் சொல்லியது. 5 |
146 |
எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர் |
|
நறிய கமழும் துறைவற்கு |
|
இனியமன்ற என் மாமைக் கவினே. |
|
வரைவு கடாவவும் வரையாது ஒழுகுகின்றுழி, நம்மை எவ்வகை நினைத்தார் கொல்லோ?' என்று ஐயுற்றிருந்த தலைமகள் வரைவு தலைவந்துழித் தோழிக்குச் சொல்லியது. 6 |
147 |
எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர் |
|
ஒண் தழை அயரும் துறைவன் |
|
'தண் தழை விலை' என நல்கினன், நாடே. |
|
சுற்றத்தார் வேண்டிய கொடுத்துத் தலைமகன் வரைவு மாட்சிப்படுத்தமை அறிந்த தோழி உவந்த உள்ளத்தாளாய்த் தலைமகட்குச் சொல்லியது. 7 |
148 |
எக்கர் ஞாழல் இகந்து படு பெருஞ் சினை |
|
வீ இனிது கமழும் துறைவனை |
|
நீ இனிது முயங்குமதி, காதலோயே! |
|
களவொழுக்கத்தின் விளைவு அறியாது அஞ்சிய வருத்தம் நீங்க வதுவை கரண வகையான் முடித்த பின்பு, தலைமகளைப் பள்ளியிடத்து உய்க்கும் தோழி சொல்லியது. 8 |
149 |
எக்கர் ஞாழல் பூவின் அன்ன |
|
சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு |
|
அணங்கு வளர்த்து, அகறல் வல்லாதீமோ! |
|
வரைந்து எய்திய தலைமகன் தலைவியோடு பள்ளியிடத்து இருந்துழித் தோழி வாழ்த்தியது. 9 |
150 |
எக்கர் ஞாழல் நறு மலர்ப் பெருஞ் சினைப் |
|
புணரி திளைக்கும் துறைவன் |
|
புணர்வின் இன்னான்; அரும் புணர்வினனே. |
|
முன் ஒருகால் பிரிந்து வந்த தலைமகன் பின்னும் பிரிந்து வந்துழி அவனை முயங்காளாக, தோழி, 'நீ இவ்வாறு செய்தற்குக் காரணம் என்?' என்று வினவியவழி, தலைமகள் தோழிக்குத் தலைமகன் கேட்பச் சொல்லியது. 10 |