181-190 |
181 |
நெய்தல் உண்கண், நேர் இறைப் பணைத் தோள் |
|
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர் |
|
குப்பை வெண் மணல் குரவை நிறூஉம் |
|
துறை கெழு கொண்கன் நல்கின், |
|
5 |
உறைவு இனிது, அம்ம! இவ் அழுங்கல் ஊரே. |
'இக் களவொழுக்கம் நெடிது சொல்லின், இவ் ஊர்க்கண் அலர் பிறக்கும்' என்று அஞ்சியிருந்த தலைவி, 'தலைமகன் வரைந்து கொள்ளத் துணிந்தான்' என்று கூறிய தோழிக்குச் சொல்லியது. 1 |
182 |
நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇக் |
|
கை புனை நறுந் தார் கமழும் மார்பன் |
|
அருந் திறல் கடவுள் அல்லன் |
|
பெருந் துறைக் கண்டு, இவள் அணங்கியோனே. |
|
தலைமகள் மெலிவுகண்டு, 'தெய்வத்தால் ஆயிற்று' எனத் தமர் நினைந்துழி, தோழி அறத்தொடு நின்றது. 2 |
183 |
[கணங்கொள் அருவிக் கான் கெழு நாடன் |
|
குறும்பொறை நாடன், நல்வயல் ஊரன்,] |
|
தண் கடல் சேர்ப்பன் பிரிந்தென, பண்டையின் |
|
கடும் பகல் வருதி கையறு மாலை! |
|
5 |
கொடுங்கழி நெய்தலும் கூம்பக் |
காலை வரினும், களைஞரோ இலரே. |
|
வரைவிடைவைத்துப் பிரிந்துழி ஆற்றாளாகிய தலைமகள் மாலைக்குச் சொல்லியது. (முதலிரண்டு அடிகள் சில பிரதிகளில் காணப்படுகின்றன.) 3 |
184 |
நெய்தல் இருங் கழி நெய்தல் நீக்கி |
|
மீன் உண் குருகினம் கானல் அல்கும் |
|
கடல் அணிந்தன்று, அவர் ஊரே; |
|
கடலினும் பெரிது, எமக்கு அவருடை நட்பே. |
|
வாயில் வேண்டி வந்தார் தலைமகன் அன்புடைமை கூறியவழி, வாயில் மறுக்கும் தலைமகள் சொல்லியது. 4 |
185 |
அலங்குஇதழ் நெய்தல் கொற்கை முன்துறை |
|
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய், |
|
அரம் போழ் அவ் வளைக் குறுமகள் |
|
நரம்பு ஆர்த்தன்ன தீம் கிளவியளே. |
|
'ஆயமகளிருள் நின்னால் நயக்கப்பட்டாள் யாவள்?' என வினவிய தோழிக்குத் தலைமகன் சொல்லியது. 5 |
186 |
நாரை நல் இனம் கடுப்ப, மகளிர் |
|
நீர் வார் கூந்தல் உளரும் துறைவ! |
|
'பொங்குகழி நெய்தல் உறைப்ப, இத் துறைப் |
|
பல்கால் வரூஉம் தேர்' என, |
|
5 |
'செல்லாதீமோ' என்றனள், யாயே. |
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி செறிப்பு அறிவுறீஇ வரைவுகடாயது. 6 |
187 |
நொதுமலாளர் கொள்ளார் இவையே; |
|
எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும் |
|
நெய்தல்அம் பகைத்தழைப் பாவை புனையார்; |
|
உடலகம் கொள்வோர் இன்மையின், |
|
5 |
தொடலைக்கு உற்ற சில பூவினரே. |
தோழி கையுறை மறுத்தது. 7 |
188 |
இருங் கழிச் சேயிறா இனப் புள் ஆரும் |
|
கொற்கைக் கோமான் கொற்கைஅம் பெருந் துறை |
|
வைகறை மலரும் நெய்தல் போலத் |
|
தகை பெரிது உடைய, காதலி கண்ணே! |
|
விருந்து வாயிலாகப் புகுந்த தலைமகன் தலைவி இல்வாழ்க்கைச் சிறப்புக் கண்டு, மகிழ்ந்து சொல்லியது. 8 |
189 |
புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல் |
|
பொன்படு மணியின் பொற்பத் தோன்றும் |
|
மெல்லம் புலம்பன் வந்தென, |
|
நல்லஆயின தோழி! என் கண்ணே. |
|
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வரைவான் வந்துழிக் கண்டு உவகையோடு வந்த தோழி, 'நின் கண் மலர்ச்சிக்குக் காரணம் என்?' என்று வினாவிய தலைவிக்குத் சொல்லியது. 9 |
190 |
தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ |
|
வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும் |
|
மெல்லம் புலம்பன் மன்ற எம் |
|
பல் இதழ் உண்கண் பனி செய்தோனே. |
|
தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10 |