191-200 |
191 |
கடற்கோடு செறிந்த, மயிர் வார் முன்கை, |
|
கழிப் பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல், |
|
கானல் ஞாழல் கவின் பெறும் தழையள். |
|
வரையர மகளிரின் அரியள் என் |
|
5 |
நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே. |
'நின்னால் காணப்பட்டவள் எவ்விடத்து எத்தன்மையள்?' என்று வினாவிய பாங்கற்குத் தலைமகன் கூறியது. 1 |
192 |
கோடு புலம் கொட்ப, கடல் எழுந்து முழங்க, |
|
பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும் |
|
துறைவன் பிரிந்தென, நெகிழ்ந்தன, |
|
வீங்கின மாதோ தோழி! என் வளையே! |
|
வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் வந்துழித் தலைவி முனிந்து கூறுவாள்போலத் தன் மெலிவு நீங்கினமை தோழிக்குத் சொல்லியது. 2 |
193 |
வலம்புரி உழுத வார் மணல் அடைகரை |
|
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும் |
|
துறை கெழு கொண்க! நீ தந்த |
|
அறைபுனல் வால் வளை நல்லவோ தாமே? |
|
வரையாது வந்து ஒழுகும் தலைமகன் தலைமகட்கு வளைகொண்டு வந்து கொடுத்துழி, 'பண்டை வளை போலாவாய், மெலிந்துழி நீங்கா நலன் உடையவோ இவை?' எனத் தலைமகள் மெலிவு சொல்லித் தோழி வரைவுகடாயது. 3 |
194 |
கடற் கோடு அறுத்த, அரம் போழ் அவ் வளை |
|
ஒண் தொடி மடவரல் கண்டிகும்; கொண்க! |
|
நல் நுதல் இன்று மால் செய்தென, |
|
கொன் ஒன்று கடுத்தனள், அன்னையது நிலையே. |
|
பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகனைத் தோழி எதிர்ப்பட்டு மனைக்கண் நிகழ்ந்தது கூறி, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. 4 |
195 |
வளை படு முத்தம் பரதவர் பகரும் |
|
கடல் கெழு கொண்கன் காதல் மட மகள் |
|
கெடல் அருந் துயரம் நல்கி, |
|
படல் இன் பாயல் வௌவியோளே. |
|
வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிந்த தலைமகன் தனித்து உறைய ஆற்றானாய்ச் சொல்லியது. 5 |
196 |
கோடு ஈர் எல் வளை, கொழும் பல் கூந்தல், |
|
ஆய் தொடி, மடவரல் வேண்டுதிஆயின் |
|
தெண் கழிச் சேயிறாப் படூஉம் |
|
தண் கடல் சேர்ப்ப! வரைந்தனை கொண்மோ. |
|
குறை மறுக்கப்பட்ட தலைமகன் பின்னும் குறைவேண்டியவழித் தோழி சொல்லியது. 6 |
197 |
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி, |
|
முகம் புதை கதுப்பினள், இறைஞ்சி நின்றோளே |
|
புலம்பு கொள் மாலை மறைய |
|
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே. |
|
தலைமகன் இடந்தலைப்பாட்டின்கண் தலைவியது நிலைமை கண்டு சொல்லியது. 7 |
198 |
வளை அணி முன்கை, வால் எயிற்று அமர் நகை, |
|
இளையர் ஆடும் தளை அவிழ் கானல், |
|
குறுந் துறை வினவி நின்ற |
|
நெடுந் தோள் அண்ணல் கண்டிகும், யாமே. |
|
பரத்தையர் மனைக்கண் பல் நாள் தங்கி, பின்பு ஆற்றாமையே வாயிலாக வந்த தலைமகனை எதிர்ப்பட்ட தோழி தலைமகட்குச் சொல்லியது. 8 |
199 |
கானல்அம் பெருந் துறைக் கலிதிரை திளைக்கும் |
|
வான் உயர் நெடு மணல் ஏறி, ஆனாது, |
|
காண்கம் வம்மோ தோழி! |
|
செறிவளை நெகிழ்த்தோன் எறிகடல் நாடே! |
|
தலைமகன் ஒருவழித் தணந்துழி ஆற்றாளாகிய தலைமகளை ஆற்றுவிக்கும் தோழி சொல்லியது. 9 |
200 |
இலங்கு வீங்கு எல்வளை! ஆய்நுதல் கவின, |
|
பொலந்தேர்க் கொண்கன் வந்தனன் இனியே; |
|
விலங்கு அரி நெடுங் கண் ஞெகிழ்மதி; |
|
நலம் கவர் பசலையை நகுகம் நாமே! |
|
உடன்போக்குத் துணிந்தவழி, அதற்கு இரவின்கண் தலைமகன் வந்தது அறிந்த தோழி தலைமகளைப் பாயல் உணர்த்திச் சொல்லியது. 10 |