201-210 |
201 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! என்னை |
|
தானும் மலைந்தான்; எமக்கும் தழை ஆயின; |
|
பொன் வீ மணி அரும்பினவே |
|
என்ன மரம்கொல், அவர் சாரலவ்வே! |
|
நொதுமலர் வரைவின்கண் செவிலி கேட்குமாற்றால் தலைமகள் தோழிக்கு அறத்தொடுநிலை குறித்து உரைத்தது. 1 |
202 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் ஊர்ப் |
|
பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும் |
|
குடுமித் தலைய மன்ற |
|
நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே. |
|
தலைமகன் வரைதல் வேண்டித் தானே வருகின்றமை கண்ட தோழி உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குக் காட்டிச் சொல்லியது. 2 |
203 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைத் |
|
தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு |
|
உவலைக் கூவல் கீழ |
|
மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே. |
|
உடன்போய் மீண்ட தலைமகள், 'நீ சென்ற நாட்டு நீர் இனிய அல்ல; நீ எங்ஙனம் நுகர்ந்தாய்?' எனக் கேட்ட தோழிக்குக் கூறியது. 3 |
204 |
அன்னாய், வாழி, வேண்டு, அன்னை! அஃது எவன்கொல்? |
|
வரையர மகளிரின் நிரையுடன் குழீஇ, |
|
பெயர்வுழிப் பெயர்வுழித் தவிராது நோக்கி, |
|
நல்லள் நல்லள் என்ப; |
|
5 |
தீயேன் தில்ல, மலை கிழவோற்கே! |
வரையாது வந்தொழுகும் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4 |
205 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! என் தோழி |
|
நனி நாண் உடையள்; நின்னும் அஞ்சும்; |
|
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் |
|
மலர்ந்த மார்பின் பாயல் |
|
5 |
தவ நனி வெய்யள்; நோகோ; யானே. |
நொதுமலர் வரைவு வேண்டி விட்டுழித் தலைமகட்கு உளதாகிய வருத்தம் நோக்கி, 'இவள் இவ்வாறு ஆதற்குக் காரணம் என்னை?' என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 5 |
206 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! உவக்காண் |
|
மாரிக் குன்றத்துக் காப்பாள் அன்னன்; |
|
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள், |
|
பாசி சூழ்ந்த பெருங் கழல், |
|
5 |
தண் பனி வைகிய வரிக் கச்சினனே! |
இரவுக்குறிக்கண் தலைமகன் வந்து குறியிடத்து நின்றமை அறிந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 6 |
207 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நன்றும் |
|
உணங்கல கொல்லோ, நின் தினையே? உவக்காண் |
|
நிணம் பொதி வழுக்கின் தோன்றும், |
|
மழை தலைவைத்து, அவர் மணி நெடுங் குன்றே. |
|
'மழையின்மையால் தினை உணங்கும்; விளையமாட்டா; புனங்காப்பச் சென்று அவரை எதிர்ப்படலாம் என்று எண்ணியிருந்த இது கூடாதாயிற்று' என வெறுத்திருந்த தலைமகட்குத் தோழி சொல்லியது. 7 |
208 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! கானவர் |
|
கிழங்கு அகழ் நெடுங் குழி மல்க வேங்கைப் |
|
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு, |
|
மணி நிற மால் வரை மறைதொறு, இவள் |
|
5 |
அறை மலர் நெடுங் கண் ஆர்ந்தன பனியே. |
செவிலிக்கு அறத்தொடு நின்ற தோழி, அவளால் வரைவு மாட்சிமைப் பட்ட பின்பு, 'இவள் இவ்வாறு பட்ட வருத்தம் எல்லாம் நின்னின் தீர்ந்தது' என்பது குறிப்பின் தோன்ற அவட்குச் சொல்லியது. 8 |
209 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நீ மற்று |
|
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின், |
|
கொண்டல் அவரைப் பூவின் அன்ன |
|
வெண் தலை மா மழை சூடி, |
|
5 |
தோன்றல் ஆனாது, அவர் மணி நெடுங் குன்றே. |
வரைவிடை வைத்துப்பிரிவின்கண் அவனை நினைவு விடாது ஆற்றாளாகியவழி, 'சிறிது மறந்து ஆற்ற வேண்டும்' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 9 |
210 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! நம் படப்பைப் |
|
புலவுச் சேர் துறுகல் ஏறி, அவர் நாட்டுப் |
|
பூக் கெழு குன்றம் நோக்கி நின்று, |
|
மணி புரை வயங்கு இழை நிலைபெறத் |
|
5 |
தணிதற்கும் உரித்து, அவள் உற்ற நோயே. |
காப்பு மிகுதிக்கண் தலைமகள் மெலிவுகண்டு, 'தெய்வத்தினான் ஆயிற்று' என்று வெறியெடுப்புழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10 |