211-220

211
நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன
வயலைஅம் சிலம்பின் தலையது
செயலைஅம் பகைத் தழை வாடும் அன்னாய்!

தலைமகன் ஆற்றாமை கண்டு, கையுறை ஏற்ற தோழி தலைமகள் தழை ஏற்க வேண்டிக் கூறியது. 1

212
சாத்த மரத்த பூழில் எழு புகை
கூட்டு விரை கமழும் நாடன்
அறவற்கு எவனோ, நாம் அகல்வு? அன்னாய்!

வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுத்தவழி, தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 2

213
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்ந்த
ஈர்ந் தண் பெரு வடு, பாலையில், குறவர்,
உறை வீழ் ஆலியின், தொகுக்கும் சாரல்
மீமிசை நல் நாட்டவர் வரின்,
5
யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய்!

வரைவொடு வருதலைத் துணிந்தான் என்பது தோழி கூறக் கேட்ட தலைமகள் சொல்லியது. 3

214
சாரல் பலவின் கொழுந் துணர் நறும் பழம்
இருங் கல் விடர் அளை வீழ்ந்தென, வெற்பில்
பெருந்தேன் இறாஅல் சிதறும் நாடன்,
பேர் அமர் மழைக் கண் கலிழ, தன்
5
சீருடை நல் நாட்டுச் செல்லும் அன்னாய்!

தலைமகன், 'ஒருவழித் தணப்பல்' என்று கூறியவதனை அவன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குத் தோழி சொல்லியது. 4

215
கட்டளை அன்ன மணி நிறத் தும்பி,
இட்டிய குயின்ற துளைவயின் செலீஇயர்,
தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர்
தீம் குழல் ஆம்பலின், இனிய இமிரும்
5
புதல் மலர் மாலையும் பிரிவோர்
அதனினும் கொடிய செய்குவர் அன்னாய்!

இரவுக்குறி நயந்த தலைமகள், பகற்குறிக்கண் வந்து நீங்கும் தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லியது. 5

216
குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை,
நெடும் புதல் கானத்து மடப் பிடி ஈன்ற
நடுங்கு நடைக் குழவி கொளீஇய, பலவின்
பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு,
5
கொய்தரு தளிரின் வாடி, நின்
மெய் பிறிதாதல் எவன்கொல்? அன்னாய்!

வரைவு நீட ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழி கூறியது. 6

217
பெரு வரை வேங்கைப் பொன் மருள் நறு வீ
மான் இனப் பெருங் கிளை மேயல் ஆரும்
கானக நாடன் வரவும், இவள்
மேனி பசப்பது எவன்கொல்? அன்னாய்!

வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன் மீட்சி உணர்ந்த தோழி ஆற்றாளாகிய தலைமகட்குச் சொல்லியது. 7

218
நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்;
மயிர் வார் முன்கை வளையும் செறூஉம்;
களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி
எழுதரு மழையின் குழுமும்
5
பெருங் கல் நாடன் வரும்கொல்? அன்னாய்!

தலைமகன் வரைவு வேண்டிவிடத் தமர் மறுத்துழி, அது கேட்டு, 'இஃது என் ஆம் கொல்?' என்று ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி தனக்கு நற்குறி செய்யக்கண்டு, 'கடிதின் வந்து வரைவான்' எனச் சொல்லியது. 8

219
கருங் கால் வேங்கை மாத் தகட்டு ஒள் வீ
இருங் கல் வியல் அறை வரிப்பத் தாஅம்
நல் மலை நாடன் பிரிந்தென,
ஒள் நுதல் பசப்பது எவன்கொல்? அன்னாய்!

வரைவிடை வைத்துப் பிரிந்த அணுமைக்கண்ணே ஆற்றாளாகிய தலைமகட்குத் தோழி கூறியது. 9

220
அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி
ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன்
பெரு வரை அன்ன திரு விறல் வியல் மார்பு
முயங்காது கழிந்த நாள், இவள்
5
மயங்கு இதழ் மழைக்கண் கலிழும் அன்னாய்!

நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 10

உரை

Home
HOME