301-310

301
மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர்,
அருஞ் சுரம் செல்வோர், சென்னிக் கூட்டும்
அவ் வரை இறக்குவை ஆயின்,
மை வரை நாட! வருந்துவள் பெரிதே.
பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைமகற்குச் சொல்லியது 1

302
அரும்பொருள் செய் வினை தப்பற்கும் உரித்தே;
பெருந் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள்;
செல்லாய் ஆயினோ நன்றே
மெல்லம் புலம்ப! இவள் அழப் பிரிந்தே.
பொருள்வயிற் பிரியும் தலைமகன், 'பிரிவு உடன்படுத்த வேண்டும்' என்றானாக, அவற்குத் தோழி சொல்லியது. 2

303
புதுக் கலத்தன்ன கனிய ஆலம்
போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ் சுரம்
தண்ணிய இனிய ஆக;
எம்மொடும் சென்மோ, விடலை! நீயே.
சுரத்து அருமை கூறி உடன் செலவு மறுக்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. 3

304
கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய
ஆன் நீர்ப் பத்தல் யானை வௌவும்
கல் அதர்க் கவலை செல்லின், மெல் இயல்
புயல் நெடுங்கூந்தல் புலம்பும்;
5
வய மான் தோன்றல்! வல்லாதீமே.
பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 4

305
களிறு பிடி தழீஇப் பிற புலம் படராது,
பசி தின வருந்தும் பைது அறு குன்றத்து,
சுடர்த் தொடிக் குறுமகள் இனைய,
எனைப்பயம் செய்யுமோ விடலை! நின் செலவே?
'உடன்போக்கு ஒழித்துத் தனித்துச் செல்வல்' என்ற தலைமகற்குத் தோழி கூறியது. 5

306
வெல்போர்க் குருசில்! நீ வியன் சுரன் இறப்பின்,
பல் காழ் அல்குல் அவ் வரி வாட,
குழலினும் இனைகுவள் பெரிதே
விழவு ஒலி கூந்தல் மாஅயோளே.
பிரியும் தலைமகற்குத் தோழி தலைமகள் பிரிவாற்றாமை கூறியது. 6

307
ஞெலி கழை முழங்குஅழல் வயமா வெரூஉம்
குன்றுடை அருஞ் சுரம் செலவு அயர்ந்தனையே;
நன்று இல, கொண்க! நின் பொருளே
பாவை அன்ன நின் துணைப் பிரிந்து வருமே.
பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் அதன் சிறப்புக் கூறியவழி, தோழி அதனை இழித்துக் கூறியது. 7

308
பல் இருங் கூந்தல் மெல்லியலோள்வயின்
பிரியாய் ஆயினும் நன்றே; விரிஇணர்க்
கால் எறுழ் ஒள் வீ தாஅய
முருகு அமர் மா மலை பிரிந்தெனப் பிரிமே.
'பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி, 'பிரியாதொழியப் பெறின் நன்று; பிரிவையாயின் இப் பருவத்து இம் மாமலை எங்களை விட்டுப் பிரிந்தால் பிரி', எனச் சொல்லியது. 8

309
வேனில் திங்கள் வெஞ் சுரம் இறந்து
செலவு அயர்ந்தனையால் நீயே; நன்றும்
நின் நயந்து உறைவி கடுஞ் சூல் சிறுவன்
முறுவல் காண்டலின், இனிதோ
5
இறு வரை நாட! நீ இறந்து செய் பொருளே?
'பொருள் வயிற் பிரிவல்' என்ற தலைமகற்குத் தோழி சொல்லியது. 9

310
பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்,
இலங்கு வளை மென் தோள், இழை நிலை நெகிழப்
பிரிதல் வல்லுவைஆயின்,
அரிதே விடலை! இவள் ஆய்நுதல் கவினே!
பிரிகின்ற தலைமகற்குத் தோழி, 'நீ நினைக்கின்ற கருமம் முடித்தாய் ஆயினும், இவள் நலம் மீட்டற்கு அரிது' எனச் சொல்லி, செலவு அழுங்குவித்தது. 10

உரை

Home
HOME