311-320

311
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்,
ஆர் இடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம்
காடு இறந்தனரே காதலர்;
'நீடுவர்கொல்' என நினையும், என் நெஞ்சே!
'ஆற்றது அருமை நினைந்து, நீ ஆற்றாயாதல் வேண்ட; அவர் அவ்வழி முடியச் சென்றார்' என்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 1

312
அறம் சாலியரோ! அறம் சாலியரோ!
வறன் உண்டாயினும், அறம் சாலியரோ!
வாள் வனப்பு உற்ற அருவிக்
கோள் வல் என்னையை மறைத்த குன்றே.
உடன்போயின தலைமகள் மீண்டு வந்துழி, 'நின் ஐயன்மார் பின் துரந்து வந்த இடத்து நிகழ்ந்தது என்னை?' என்ற தோழிக்கு நிகழ்ந்தது கூறி, தலைமகன் மறைதற்கு உதவி செய்த மலையை வாழ்த்தியது. 2

313
தெறுவது அம்ம, நும் மகள் விருப்பே
உறு துயர் அவலமொடு உயிர் செலச் சாஅய்,
பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க,
நாடு இடை விலங்கிய வைப்பின்
5
காடு இறந்தனள், நம் காதலோளே!
தலைமகள் புணர்ந்து உடன்போகியவழி, செவிலி ஆற்றாமை கண்ட நற்றாய் அவட்குச் சொல்லியது. 3

314
'அவிர் தொடி கொட்ப, கழுது புகவு அயர,
கருங் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவ,
சிறு கண் யானை ஆள் வீழ்த்துத் திரிதரும்
நீள் இடை அருஞ் சுரம்' என்ப நம்
5
தோள் இடை முனிநர் சென்ற ஆறே.
தலைமகன் பிரிந்துழி, அவனுடன் போய் மீண்டார் வழியது அருமை தங்களில் கூறக் கேட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 4

315
பாயல் கொண்ட பனி மலர் நெடுங் கண்
பூசல் கேளார் சேயர் என்ப
இழை நெகிழ் செல்லல் உறீஇ,
கழை முதிர் சோலைக் காடு இறந்தோரே.
சொல்லாது தலைமகன் பிரிந்துழி, தலைமகள் வேறுபாடு கண்ட தோழி இரங்கிச் சொல்லியது. 5

316
பொன் செய் பாண்டில் பொலங்கலம் நந்த,
தேர் அகல் அல்குல் அவ் வரி வாட,
இறந்தோர்மன்ற தாமே பிறங்கு மலைப்
புல் அரை ஓமை நீடிய
5
புலி வழங்கு அதர கானத்தானே.
தலைமகள் மெலிவுக்கு நொந்து, தலைமகன் பிரிவின்கண் தோழி கூறியது. 6

317
சூழ்கம் வம்மோ தோழி! பாழ்பட்டுப்
பைது அற வெந்த பாலை வெங் காட்டு
அருஞ் சுரம் இறந்தோர் தேஎத்துச்
சென்ற நெஞ்சம் நீடிய பொருளே!
தலைமகன் பிரிந்து நீட்டித்துழி, நெஞ்சினைத் தூது விட்ட தலைமகள், அது வாராது தாழ்த்துழி, தோழிக்குச் சொல்லியது. 7

318
ஆய் நலம் பசப்ப, அரும் படர் நலிய,
வேய் மருள் பணைத் தோள் வில் இழை நெகிழ,
நசை நனி கொன்றோர் மன்ற விசை நிமிர்ந்து
ஓடு எரி நடந்த வைப்பின்,
5
கோடு உயர் பிறங்கல், மலை இறந்தோரே.
'நம்மைப் பிரியார்' என்று கருதியிருந்த தலைமகள், அவன் பிரிந்துழி, இரங்கிச் சொல்லியது. 8

319
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின்,
மண் புரை பெருகிய மரம் முளி கானம்
இறந்தனரோ நம் காதலர்?
மறந்தனரோதில் மறவா நம்மே?
தலைமகன் பிரிந்துழி, அவன் உணர்த்தாது பிரிந்தமை கூறிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது. 9

320
முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ,
முழங்குஅழல் அசைவளி எடுப்ப, வானத்து
உருமுப் படு கனலின் இரு நிலத்து உறைக்கும்
கவலை அருஞ் சுரம் போயினர்
5
தவல் இல் அரு நோய் தலைத்தந்தோரே.
தலைமகன் பிரிந்துழிச் சுரத்து வெம்மை நினைந்து, தலைமகள் சொல்லியது. 10

உரை

Home
HOME