351-360 |
351 |
அத்தப் பலவின் வெயில் தின் சிறு காய், |
|
அருஞ் சுரம் செல்வோர், அருந்தினர் கழியும் |
|
காடு பின் ஒழிய வந்தனர்; தீர்க, இனி |
|
பல் இதழ் உண்கண் மடந்தை! நின் |
|
5 |
நல் எழில் அல்குல் வாடிய நிலையே. |
பிரிந்த தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. 1 |
352 |
விழுத் தொடை மறவர் வில் இடத் தொலைந்தோர் |
|
எழுத்துடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப் |
|
பெருங் கை யானை இருஞ் சினம் உறைக்கும் |
|
வெஞ் சுரம் 'அரிய' என்னார், |
|
5 |
வந்தனர் தோழி! நம் காதலோரே! |
இதுவும் அது. 2 |
353 |
எரிக் கொடி கவைஇய செவ் வரை போலச் |
|
சுடர்ப் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம் |
|
நீ இனிது முயங்க, வந்தனர் |
|
மா இருஞ் சோலை மலை இறந்தோரே. |
|
இதுவும் அது. 3 |
354 |
ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை |
|
மறியுடை மான் பிணை கொள்ளாது கழியும் |
|
அரிய சுரன் வந்தனரே |
|
தெரிஇழை அரிவை! நின் பண்பு தர விரைந்தே. |
|
இதுவும் அது. 4 |
355 |
திருந்துஇழை அரிவை! நின் நலம் உள்ளி, |
|
'அருஞ் செயல் பொருள்பிணி பெருந் திரு உறுக!' எனச் |
|
சொல்லாது பெயர் தந்தேனே பல் பொறிச் |
|
சிறு கண் யானை திரிதரும் |
|
5 |
நெறி விலங்கு அதர கானத்தானே. |
நினைந்த எல்லையளவும் பொருள் முற்றி நில்லாது, பெற்ற பொருள் கொண்டு, தலைவியை நினைந்து, மீண்ட தலைமகன் அவட்குச் சொல்லியது. 5 |
356 |
உள்ளுதற்கு இனியமன்ற செல்வர் |
|
யானை பிணித்த பொன் புனை கயிற்றின், |
|
ஒள் எரி மேய்ந்த சுரத்திடை |
|
உள்ளம் வாங்க, தந்த நின் குணனே. |
|
வினை முற்றி மீண்டு வந்த தலைமகன் தலைவிக்கு அவள் குணம் புகழ்ந்து கூறியது. 6 |
357 |
குரவம் மலர, மரவம் பூப்ப, |
|
சுரன் அணி கொண்ட கானம் காணூஉ, |
|
'அழுங்குக, செய்பொருள் செலவு!' என விரும்பி, நின் |
|
அம் கலிழ் மாமை கவின |
|
5 |
வந்தனர் தோழி! நம் காதலோரே. |
பொருள்வயிற் பிரிந்து ஆண்டு உறைகின்ற தலைமகன் குறித்த பருவ வரவு கண்டு, கடிதின் மீண்டு வந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது. 7 |
358 |
கோடு உயர் பல் மலை இறந்தனர் ஆயினும், |
|
நீட விடுமோ மற்றே நீடு நினைந்து, |
|
துடைத்தொறும் துடைத்தொறும் கலங்கி, |
|
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே? |
|
தலைமகள் ஆற்றாமை கண்டு பிரிந்த தலைமகன் வந்தனனாகத் தோழி சொல்லியது. 8 |
359 |
அரும் பொருள் வேட்கையம் ஆகி, நிற் துறந்து, |
|
பெருங் கல் அதரிடைப் பிரிந்த காலைத் |
|
தவ நனி நெடிய ஆயின; இனியே, |
|
அணியிழை உள்ளி யாம் வருதலின் |
|
5 |
நணிய ஆயின சுரத்திடை ஆறே. |
மீண்டு வந்த தலைமகன் அவளைப் பிரிகின்ற காலத்துச் சுரத்துச் சேய்மையும், வருகின்ற காலத்து அதன் அணிமையும், கூறியது. 9 |
360 |
எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை |
|
அரிய ஆயினும், எளிய அன்றே |
|
அவவு உறு நெஞ்சம் கவவு நனி விரும்பி, |
|
கடு மான் திண் தேர் கடைஇ, |
|
5 |
நெடு மான் நோக்கி! நின் உள்ளி யாம் வரவே! |
வினைமுற்றி மீண்டு வந்த தலைமகன், 'சுரத்து அருமை நோக்காது வந்தவாறு என்னை?' என வினவிய தலைமகட்குச் சொல்லியது. 10 |