361-370 |
361 |
உயர்கரைக் கான் யாற்று அவிர்மணல் அகன்துறை |
|
வேனில் பாதிரி விரி மலர் குவைஇத் |
|
தொடலை தைஇய மடவரல் மகளே! |
|
கண்ணினும் கதவ, நின் முலையே! |
|
5 |
முலையினும் கதவ, நின் தட மென் தோளே! |
புணர்ந்து உடன்போகிய தலைமகன் இடைச்சுரத்துக்கண் விளையாட்டு வகையால் பூத்தொடுக்கின்ற தலைமகளைக் கண்டு புகழ, அவள் அதற்கு நாணி, கண்புதைத்த வழிச் சொல்லியது. 1 |
362 |
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அருங் கவலை, |
|
சிறு கண் யானை உறு பகை நினையாது, |
|
யாங்கு வந்தனையோ பூந் தார் மார்ப! |
|
அருள் புரி நெஞ்சம் உய்த்தர |
|
5 |
இருள் பொர நின்ற இரவினானே? |
சேணிடைப் பிரிந்த தலைமகன் இடைநிலத்துத் தங்காது இரவின்கண் வந்துழித் தோழி சொல்லியது. 2 |
363 |
சிலை வில் பகழிச் செந் துவர் ஆடைக் |
|
கொலை வில் எயினர் தங்கை! நின் முலைய |
|
சுணங்கு என நினைதி நீயே; |
|
அணங்கு என நினையும், என் அணங்குறு நெஞ்சே. |
|
புணர்ந்து உடன் செல்கின்ற தலைமகன் இடைச்சுரத்துத் தலைமகளை நலம் பாராட்டியது. 3 |
364 |
முளவு மா வல்சி எயினர் தங்கை |
|
இளமா எயிற்றிக்கு, நின் நிலை அறியச் |
|
சொல்லினென் இரக்கும்அளவை |
|
வென் வேல் விடலை! விரையாதீமே! |
|
உடன்போக்கு நயந்த தலைமகன் அதனைத் தோழிக்கு உணர்த்த, அவள் முடிப்பாளாய்ச் சொல்லியது. 4 |
365 |
கண மா தொலைச்சித் தன்னையர் தந்த |
|
நிண ஊன் வல்சிப் படு புள் ஓப்பும் |
|
நலம் மாண் எயிற்றி போலப் பல மிகு |
|
நன்னல நயவரவு உடையை |
|
5 |
என் நோற்றனையோ? மாவின் தளிரே! |
வரைவிடை வைத்துப் பிரிந்து மீள்கின்றான் இடைச்சுரத்துக் குழைத்த மாவின் தளிர் கண்டு சொல்லியது. 5 |
366 |
அன்னாய், வாழி! வேண்டு, அன்னை! 'என் தோழி |
|
பசந்தனள் பெரிது' எனச் சிவந்த கண்ணை, |
|
கொன்னே கடவுதி ஆயின், என்னதூஉம், |
|
அறிய ஆகுமோ மற்றே |
|
5 |
முறி இணர்க் கோங்கம் பயந்தமாறே? |
தலைமகளை நோக்கி, 'இவ் வேறுபாடு எற்றினான் ஆயிற்று?' என்று வினவிய செவிலிக்குத் தோழி அறத்தொடு நின்றது. 6 |
367 |
பொரி அரைக் கோங்கின் பொன் மருள் பசு வீ, |
|
விரிஇணர் வேங்கையொடு, வேறு பட மிலைச்சி, |
|
விரவு மலர் அணிந்த வேனில் கான் யாற்றுத் |
|
தேரொடு குறுக வந்தோன் |
|
5 |
பேரொடு புணர்ந்தன்று அன்னை! இவள் உயிரே. |
நொதுமலர் வரைவின்கண் தோழி செவிலிக்கு அறத்தொடு நின்றது. 7 |
368 |
எரிப் பூ இலவத்து ஊழ் கழி பல் மலர் |
|
பொரிப் பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும் |
|
தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி |
|
எம்மொடு கொண்மோ, பெரும! நின் |
|
5 |
அம் மெல்லோதி அழிவிலள் எனினே! |
'வேனிற்காலத்து நும்மொடு விளையாட்டு நுகர வருவல்' என்று, பருவம் குறித்துப் பிரியலுற்ற தலைமகற்குத் தோழி கூறியது. 8 |
369 |
வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில் |
|
முளை நிரை முறுவல் ஒருத்தியொடு, நெருநல் |
|
குறி நீ செய்தனை என்ப; அலரே, |
|
குரவ நீள் சினை உறையும் |
|
5 |
பருவ மாக் குயில் கௌவையின், பெரிதே! |
பரத்தை ஒருத்தியுடன் பொழிலகத்துத் தங்கி வந்த தலைமகன் தலைமகள் வினாயவழி, 'யாரையும் அறியேன்' என்றானாக, அவள் கூறியது. 9 |
370 |
வண் சினைக் கோங்கின் தண் கமழ் படலை |
|
இருஞ் சிறை வண்டின் பெருங் கிளை மொய்ப்ப, |
|
நீ நயந்து உறையப்பட்டோள் |
|
யாவளோ? எம் மறையாதீமே. |
|
பரத்தைஒருத்திக்குப் பூ அணிந்தான் என்பது கேட்ட தலைமகள், 'அஃது இல்லை' என்று மறைக்கும் தலைமகற்குக் கூறியது. 10 |