பாடினோர்
முதலியவர்களின் வரலாறு
4. கபிலர் : - இந்நூலின் மூன்றாம்
நூறாகிய குறிஞ்சித்திணையைப் பாடிய இவர் கடைச்சங்கப்
புலவர்களுள் ஒருவர். கபிலரென்னும் பெயருள்ள முனிவர் சிலருண்டு; அவருள் எவருடைய பெயர்
இவருக்கு இடப்பட்டதோ அது விளங்கவில்லை. இவர் பிறந்த ஊர் பாண்டிய
நாட்டிலுள்ள திருவாதவூர் ; இது “நீதிமா மதூக நீழ 1னெட்டிலை யிருப்பை யென்றோர்
காதல்கூர், பனுவல் பாடுங் கபிலனார் பிறந்த மூதூர், சோதிசேர் வகுள நீழற் சிலம்பொலி
துளங்கக் காட்டும் வேதநாயகனார் வாழும் வியன்றிரு வாதவூரால்” (திருவால : 27 : 4)
என்பதனால் வெளியாகின்றது. இவர் அந்தண வருணத்தினர்; “யானே பரிசிலன் மன்னுமந்தணன்”,
“யானே தந்தை தோழ னிவரென் மகளிர், அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே”
(புறநா.200, 201) எனத் தம்மைப் புலப்படுத்துவதற்காக இவர் கூறிய செய்யுட்களும்,
“புலனழுக் கற்ற வந்த ணாளன்” (புறநா. 126) என மாறோக்கத்து நப்பசலையார்
இவரைப்
பாராட்டிக் கூறிய செய்யுளும் இதனைப் புலப்படுத்தும்.
வேள்பாரியின் உயிர் நண்பரும் அவன்
அவைக்களத்துப் புலவருமாக இவர் விளங்கினார். அவன்
தன் மகளிரை மணஞ் செய்து கோடற்குத் தாம் விரும்பியபடி தன் கொடாததுபற்றிச் சினந்து
தமிழ் நாட்டு மூவேந்தரும் பெரும் போர் செய்ய நினைந்து நால்வகைச் சேனைகளோடும்
அவன்
மலையைச் சூழ்ந்தபோது அவர்களைச் சிறிதும் மதியாது அவனுடைய அருமைக் குணங்களைப்
புலப்படுத்திப் பாடினர்; அவற்றைப் புறநானூற்றிற் காணலாம்; அவனிறந்தபின்பு, இவர்
மனமுருகிப்பல செய்யுட்களாற் புலம்பி, அவன் புதல்வியரை அழைத்துச் சென்று மணஞ்
செய்துகொள்ளும்படி இருங்கோவேள், விச்சிக்கோன் என்பவர்களை வேண்ட மறுத்தமை கண்டு
அவர்களை வெறுத்துப் பின்பு அம்மகளிரைப் பார்ப்பார்க்கு _________________________________________________________________
1 “நெட்டிலை யிருப்பை வட்ட வொண்பூ,
வாடா தாயிற் பீடு
டைப் பிடியின், கோடேய்க் கும்மே வாடிலோ, பைந்தலைப், பரதர்
மனைதொறு முணங்கும், செந்தலை யிறவின் சீரேய்க் கும்மே” -
தமிழ் நாவலர் சரிதை.
வாழ்க்கைப் படுத்திவிட்டு வந்து தம்முடைய நட்புக் கடனைக் கழித்தனர்.
ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவித்தற்குக்
குறிஞ்சிப் பாட்டை இயற்றினர். பதிற்றுப்பத்தில்
எ-ஆம் பத்தைப் பாடிச் சேரமான் செல்வக்கடுங்கோவாழியாதனிடம் நூறாயிரங்
காணமும்
அவன் நன்றாவென்னும் ஒரு மலைமீது ஏறிக் கண்டுகொடுத்த நாடும் பரிசிலாகப் பெற்றனர்.
பதினெண்கீழ்க்கணக்கினுள் ஒன்றாகிய
இன்னாநாற்பதும், கலித்தொகையில் இரண்டாவதாகிய குறிஞ்சியிலுள்ள கலிப்பாக்களும்
இவர் இயற்றியனவே. இவர் குறிஞ்சித் திணையில் மிகப்
பயின்றவரென்றும் அதன் வளங்களை விளங்கப் பாடுதலிற் பேராற்றலுடையவரென்றும் இவர்
இயற்றிய செய்யுட்கள் புலப்படுத்தும்.
இவரருளிச் செய்தனவாக 278-பாடல்கள்
(நற். 20; குறுந். 29; கலித். 29; ஐங். 100; பதிற். 10;
அகநா. 16; புறநா. 30; குறிஞ்சி. 1; “நெட்டிலை யிருப்பை”
என்பது-1; திருவள்ளுவ. 1;
இன்னா. 41) இப்பொழுது கிடைக்கின்றன. பன்னிருபாட்டியலில் இவர் பெயரினோடு
சில
சூத்திரங்கள் காணப்படுகின்றன. இவருடைய வாக்கில் விநாயகக்கடவுள், முருகக் கடவுள்,
சிவபெருமான், பலதேவர், திருமால் இவர்களுடைய துதிகள் வந்திருக்கின்றன. இதனால் இவர்
சமயக்கோட்பாட்டிற் பாரதம் பாடிய பெருந்தேவனாரைப் போன்றவராக எண்ணப்படுகிறார்.
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு
என்னும் முத்தொகுதி நூல்களிலும்
இவருடைய பாடல்களும் நூல்களும் கலந்திருத்தல் இவரது பெருமையை விளக்குகின்றது.
“அரசவை பணிய வறம்புரிந்து வயங்கிய, மறம்புரி கொள்கை வயங்குசெந்நாவின் உவலை
கூராக் கவலையி னெஞ்சின் நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன்” (பதிற். 85)
எனப்
பெருங்குன்றூர்கிழாரும், “வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” (புறநா. 53)
எனப்
பொருந்திலிளங்கீரனாரும்,“புலனழுக்கற்ற வந்தணாளன், இரந்து சென் மாக்கட்கினியிடனின்றிப்
பரந்திசை நிற்கப் பாடினன், பொய்யா நாவிற் கபிலன்” (புறநா. 126 174) என மாறோக்கத்து
நப்பசலையாரும் பாடியவற்றைப் பார்க்கையில் இவருடைய மனவாக்குக் காயங்களின்
தூய்மையும் அறம்புரி கொள்கையும் பெரும்புலமையும் அன்புடைமையும் நட்பின் பெருமையும்
நன்கு விளங்குகின்றன.
இவராற் பாடப்பட்டோர் : அகுதை,இருங்கோவேள்,ஓரி
சேரமான் செல்வக் கடுங்கோவாழியாதன்,
சேரமான் மாந்தரஞ்சேரலிரும் பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, மலையன்,
விச்சிக்கோன், வேள்பாரி, வையாவிக்கோப்பெரும்பேகன் என்பவர்கள்.கொல்லிமலை,
பறம்புநாடு,
பறம்புமலை, முள்ளூர்க்கானமென்பவைகள் இவராற்பாராட்டப் பெற்றிருத்தலின், அவைகள்
இவர்
காலத்தில் விளக்க முற்றிருந்தனவென்றும், இவர் பழகிய இடங்களென்றும் சொல்லலாம்.
நட்பு, வண்மை, நன்றி மறவாமை என்பவைகளை இவருடைய செய்யுட்களிற் பரக்கக் காணலாம்.
பழைய இலக்கண உரைகளில் வந்துள்ள ‘கபிலபரணர்’
என்பதனால் பரணர் என்பவருக்கும்
“பின்னமில் கபிலன் றோழன் பெயரிடைக் காடனென்போன்” (திருவால. 20 :
1) என்னும்
திருவிருத்தத்தால் இடைக்காடருக்கும் சிறந்த நட்பினராக இவர் எண்ணப்படு்கிறார்.
இவர் வேறு;
தொகை நூல்களிற் காணப்படும் தொல்கபிலர் என்பவர் வேறு. வீரசோழியம், தொகைப்
படலம்,
6-ஆம் கட்டளைக் கலித்துறையுரையால். பரணருடன் இவர் வாது செய்தனரென்பது
வெளியாகின்றது. 11-ஆம் திருமுறையில் வந்துள்ள மூத்தநாயனார் திருவிரட்டை மணிமாலை,
சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந்தாதி என்னும் பிரபந்தங்கள்
மூன்றையும் அருளிச் செய்த கபிலதேவ நாயனார் என்பவர் இவரேயென்று சிலர்
கூறுவர். மேற்கூறிய திருவிளையாடற் புராணத்தில், இடைக்காடன் பிணக்குத் தீர்த்ததிருவிளையாடல்,
11-ஆம் திருவிருத்தத்தில், “எனையந்தாதி சொன்னவன் கபிலன்”
என்று சிவபெருமான் கட்டளையிட்டருளியதாக வந்திருத்தல் காண்க.
‘முதலிற் கூறுஞ் சினையறி
கிளவி’ என்னும் தொல்காப்பியச் சூத்திரத்துக்கு இளம்பூரணரும், சேனாவரையரும்
எழுதிய உரையால் கபிலராற்செய்யப் பெற்றுக் கபிலம்
என்னும் பெரிய நூலொன்று இருந்ததாகத் தெரிகிறது. இவருடைய விரிந்த வரலாற்றைப்
பத்துப்பாட்டுப் பதிப்பிலுள்ள பாடினோர் வரலாற்றில் காணலாம்.
|