IV


முன்னை நாளில் கலித்தொகை பயிலாத ஒருவனைக் கற்றவரென எவரும் போற்றார். திருத்தக்க தேவர் சேக்கிழார் கம்பன் சிவஞான முனிவர் முதலிய புலவர் பெருமக்கள் கலித்தொகை பயின்ற கல்வியாளர்கள் என்பது கவனிக்கத்தக்கது. பாட்டின்பத்துக்கு ஊற்றாயுள்ள கலித்தொகை படியாத ஒருவன் எங்ஙனஞ் சிறந்த பாவலனாவன்?

இத்துணைச் சிறப்புவாய்ந்த கலித்தொகை, பாலைக்கலி. குறிஞ்சிக்கலி, மருதக்கலி, முல்லைக்கலி, நெய்தற்கலியென ஐந்து பகுதிகளையுடையது. ஆகவே இந்நூலில் ஐந்திணை காணலாம். இந்நூல், இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலிய உரையாசிரியர் ஆட்சியையும் பெற்றது.

கலித்தொகை மூலமும், அதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் வரைந்த அரிய உரையும் இற்றைக்குச் சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்னர்த் தமிழ்த்தாயின் தவப்புதல்வருள் ஒருவராய அன்பர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டன. இது போழ்து சென்னை பிரஸிடென்ஸி காலேஜ் தமிழ்ப்பண்டிதர் ஸ்ரீமான், அனந்தராம ஐயர் அவர்களால் கலித்தொகையின் பாலையும், குறிஞ்சியும், நச்சினார்க்கினியர் உரையோடு வெளியிடப்பட்டிருக்கின்றன. ஸ்ரீமான் ஐயர் அவர்கள் தமிழ்ப்புலமையும் உழைப்பும் இக்கலித்தொகைப் பதிப்பில் நன்கு புலனாகின்றன. தமிழ்ப்புலமை மிக்க ஐயர் எழுதியுள்ள ஆராய்ச்சிக் குறிப்புக் கலித்தொகை பயில்வோர்க்குப் பெருந்துணை செய்வதாகும். இப்பதிப்பிலுள்ள விசேடம் முகவுரையில் விளக்கப்பட்டிருக்கிறது. அது வருமாறு:-

1. பல ஏட்டுச் சுவடிகளோடு ஒப்பிட்டதினாலும்....................அகராதியும் எழுதிச் சேர்த்தல் முதலியவையாம்,1

அநபாயன் சடையப்பவள்ளல் போன்றார் இல்லா இந்நாளில், தமிழ்வளம் அருகிவரும் இக்காலத்தில், தமிழ்ப்புலவர்கள் மிடியால்பீடிக்கப்பட்டு வருந்தும் இச்சமயத்தில் ஸ்ரீமான் அனந்தராம ஐயர் சங்க நூல்களில் தலையாயதை ஆராய்ச்சிக்குறிப்புடன் வெளியிடப் புகுந்தது குறித்து எமது நன்றி யறிதலான வணக்கத்தை அத்தமிழ்ப் பெரியார்க்குச் செலுத்துகிறோம். ஏனைய பகுதிகளும் ஸ்ரீமான் ஐயர் விரும்புமாறு விரைவில் வெளிவர எல்லாம் வல்ல இறைவன் அருள் செய்வானாக.


1 முதற்சம்புடத்தின் முகவுரை பக்கம் 10-1, முதல் 11-9 வரை பார்க்க.