VIII


"தன்னெஞ்சம் ஏடெனக் கற்றான் தழைமுத் தமிழையுமே" என்றபடி, பிறருடைய சகாயத்தைச் சிறிதும் விரும்பாமல் தம்முடைய மனத்தையும், மற்றைக் கரணங்களையுமே துணையாகக்கொண்டு இவ்வளவு பெருங்காரியத்தைச் செய்து முடித்த தொன்றே இப்பதிப்பாசிரியரின் ஆற்றலை நன்கு அறிவிக்கும்.

இப்பதிப்பிற் காணப்படும் அரியவிஷயங்கள் பல.

1. இதுகாறும் நன்கு விளங்காமலிருந்த கடின பதங்களுக்கு உரியபொருளை யறிந்து விளக்கித் தக்க மேற்கோள்களைக் காட்டியிருத்தல்.

2. உரையிலிருந்த பிழைகளை மூலத்தைக் கொண்டும், மூலத்திலிருந்த பிழைகளை உரையைக் கொண்டும், இவ்விரண்டிலும் இருந்த பிழைகளை வேறுபிரதிகளைக்கொண்டும்நீக்கிச் செப்பஞ்செய்திருத்தல்.

3. ஒவ்வொரு பொருளினுடைய இயற்கையும் நன்கு புலப்படும்படி பழைய நூல்களிலிருந்தும், பிற்காலத்து நூல்கள் பலவற்றிலிருந்தும் பற்பல மேற்கோள்களைக் காட்டியிருத்தல்.

4. இந்நூலிலிருந்தும், வேறு நூல்களிலிருந்தும் ஆங்காங்கு ஒப்புமைப் பகுதிகள் பலவற்றைக் காட்டி யிருத்தல்.

5. பழைய இலக்கண வுரையாசிரியர்கள், உரியவிடங்களில் மேற்கோள்களாக ஆண்டிருக்கும் இடங்களைக் கண்டு பிடித்து அவற்றை விளக்கி யிருத்தல்,

இவை போல்வன பிறவும் காணப்படுகின்றன.

இயல்பாகவே கலித்தொகை மிக்க மதிப்புடையதாயினும், இப்பதிப்பால் இந்நூல் பின்னும் மிக்க கௌரவத்தையடைந்து விளங்குகின்றதென்றே சொல்லலாம்.

மேற்படி ஐயரவர்களுடைய பெருமையைப்பற்றி இன்னும் பல படக் கூறுவதற்கு மனமிருந்தும், இதன்மேலெழுதுதற்கு இப்பொழுது நேரமில்லாமையால் இம்மட்டோடே நிறுத்துகின்றேன்.

சிதம்பரம்
ஸ்ரீ மீநாட்சி தமிழ்க்காலெஜ்
18-7-25.
இங்ஙனம்:
வேசாமிநாதையர்