|  | தொடக்கம் | 
| 
ஆலத்தூர் கிழார் | 
| 
 34 | 
| 
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும், | |
| 
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும், | |
| 
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும், | |
| 
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என, | |
| 
5 | 
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன் | 
| 
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என, | |
| 
அறம் பாடின்றே ஆயிழை கணவ! | |
| 
'காலை அந்தியும், மாலை அந்தியும், | |
| 
புறவுக் கரு அன்ன புன் புல வரகின் | |
| 
10 | 
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி, | 
| 
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு, | |
| 
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து, | |
| 
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி, | |
| 
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு | |
| 
15 | 
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன், | 
| 
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின் | |
| 
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின், | |
| 
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்; | |
| 
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து, | |
| 
20 | 
சான்றோர் செய்த நன்று உண்டாயின், | 
| 
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி, | |
| 
கொண்டல் மா மழை பொழிந்த | |
| 
நுண் பல் துளியினும் வாழிய, பலவே! | |
| 
திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
 | 
| 
 36 | 
| 
அடுநை ஆயினும், விடுநை ஆயினும், | |
| 
நீ அளந்து அறிதி, நின் புரைமை வார் கோல், | |
| 
செறி அரிச் சிலம்பின், குறுந் தொடி மகளிர் | |
| 
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் | |
| 
5 | 
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய, | 
| 
கருங் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய் | |
| 
நெடுங் கை நவியம் பாய்தலின், நிலை அழிந்து, | |
| 
வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப, காவுதொறும் | |
| 
கடி மரம் தடியும் ஓசை தன் ஊர் | |
| 
10 | 
நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப, | 
| 
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு, ஈங்கு, நின் | |
| 
சிலைத் தார் முரசம் கறங்க, | |
| 
மலைத்தனை என்பது நாணுத் தகவு உடைத்தே. | |
| 
திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
 | |
| 
அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.
 | 
| 
 69 | 
| 
கையது, கடன் நிறை யாழே; மெய்யது, | |
| 
புரவலர் இன்மையின் பசியே; அரையது, | |
| 
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் | |
| 
ஓம்பி உடுத்த உயவல் பாண! | |
| 
5 | 
பூட்கை இல்லோன் யாக்கை போலப் | 
| 
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை; | |
| 
வையகம் முழுதுடன் வளைஇ, பையென | |
| 
என்னை வினவுதி ஆயின், மன்னர் | |
| 
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை, | |
| 
10 | 
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி, | 
| 
புலாக் களம் செய்த கலாஅத் தானையன் | |
| 
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே; | |
| 
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப் | |
| 
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார் | |
| 
15 | 
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் | 
| 
கிள்ளி வளவற் படர்குவை ஆயின், | |
| 
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல் | |
| 
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி, | |
| 
நீ அவற் கண்ட பின்றை, பூவின் | |
| 
20 | 
ஆடு வண்டு இமிராத் தாமரை | 
| 
சூடாயாதல் அதனினும் இலையே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
 | 
| 
 225 | 
| 
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய, | |
| 
இடையோர் பழத்தின் பைங் கனி மாந்த, | |
| 
கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர, | |
| 
நில மலர் வையத்து வல முறை வளைஇ, | |
| 
5 | 
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு, | 
| 
'ஆற்றல்' என்பதன் தோற்றம் கேள், இனி: | |
| 
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை, | |
| 
முள்ளுடை வியன் காட்டதுவே 'நன்றும் | |
| 
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்கொல்?' என, | |
| 
10 | 
இன் இசைப் பறையொடு வென்றி நுவல, | 
| 
தூக்கணங் குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப | |
| 
ஒரு சிறைக் கொளீஇய திரி வாய் வலம்புரி, | |
| 
ஞாலங் காவலர் கடைத்தலை, | |
| 
காலைத் தோன்றினும் நோகோ யானே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் நலங்கிள்ளியை ஆலத்தூர் கிழார் பாடியது.
 | 
| 
 324 | 
| 
வெருக்கு விடை அன்ன வெகுள் நோக்குக் கயந் தலை, | |
| 
புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய், | |
| 
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் | |
| 
சிறியிலை உடையின் சுரையுடை வால் முள் | |
| 
5 | 
ஊக நுண் கோல் செறித்த அம்பின், | 
| 
வலாஅர் வல்வில் குலாவரக் கோலி, | |
| 
பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் | |
| 
புன் புலம் தழீஇய அம் குடிச் சீறூர், | |
| 
குமிழ் உண் வெள்ளை பகு வாய் பெயர்த்த | |
| 
10 | 
வெண் காழ் தாய வண் கால் பந்தர், | 
| 
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து, | |
| 
பாணரொடு இருந்த நாணுடை நெடுந்தகை | |
| 
வலம் படு தானை வேந்தர்க்கு | |
| 
உலந்துழி உலக்கும் நெஞ்சு அறி துணையே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
ஆலத்தூர் கிழார் பாடியது.
 |