| முகப்பு | தொடக்கம் | 
| 
ஒளவையார் | 
| 
 87 | 
| 
களம் புகல் ஓம்புமின், தெவ்விர்! போர் எதிர்ந்து, | |
| 
எம்முளும் உளன் ஒரு பொருநன்; வைகல் | |
| 
எண் தேர் செய்யும் தச்சன் | |
| 
திங்கள் வலித்த கால் அன்னோனே. | |
| 
திணை தும்பை; துறை தானை மறம்.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
 | 
| 
 88 | 
| 
யாவிர் ஆயினும், 'கூழை தார் கொண்டு | |
| 
யாம் பொருதும்' என்றல் ஓம்புமின் ஓங்கு திறல் | |
| 
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன், | |
| 
கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் | |
| 
5 | 
விழவு மேம்பட்ட நல் போர் | 
| 
முழவுத் தோள் என்னையைக் காணா ஊங்கே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 89 | 
| 
'இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல், | |
| 
மடவரல், உண்கண், வாள் நுதல், விறலி! | |
| 
பொருநரும் உளரோ, நும் அகன் தலை நாட்டு?' என, | |
| 
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே! | |
| 
5 | 
எறி கோல் அஞ்சா அரவின் அன்ன | 
| 
சிறு வல் மள்ளரும் உளரே; அதாஅன்று, | |
| 
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை | |
| 
வளி பொரு தெண் கண் கேட்பின், | |
| 
'அது போர்' என்னும் என்னையும் உளனே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 90 | 
| 
உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் | |
| 
அடை மல்கு குளவியொடு கமழும் சாரல், | |
| 
மறப் புலி உடலின், மான் கணம் உளவோ? | |
| 
மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய | |
| 
5 | 
இருளும் உண்டோ, ஞாயிறு சினவின்? | 
| 
அச்சொடு தாக்கிப் பார் உற்று இங்கிய | |
| 
பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய, | |
| 
வரி மணல் ஞெமர, கல் பக, நடக்கும் | |
| 
பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ? | |
| 
10 | 
எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை | 
| 
வழு இல் வன் கை, மழவர் பெரும! | |
| 
இரு நிலம் மண் கொண்டு சிலைக்கும் | |
| 
பொருநரும் உளரோ, நீ களம் புகினே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 91 | 
| 
வலம் படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார் | |
| 
களம் படக் கடந்த கழல் தொடித் தடக் கை, | |
| 
ஆர் கலி நறவின், அதியர் கோமான்! | |
| 
போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி! | |
| 
5 | 
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி | 
| 
நீலமணி மிடற்று ஒருவன் போல | |
| 
மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப் | |
| 
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட | |
| 
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது, | |
| 
10 | 
ஆதல் நின் அகத்து அடக்கி, | 
| 
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே! | |
| 
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
 | |
| 
அவனை அவர் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.
 | 
| 
 92 | 
| 
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா; | |
| 
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு | |
| 
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை; | |
| 
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் | |
| 
5 | 
கடி மதில் அரண் பல கடந்த | 
| 
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 93 | 
| 
திண் பிணி முரசம் இழுமென முழங்கச் | |
| 
சென்று, அமர் கடத்தல் யாவது? வந்தோர் | |
| 
தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு, | |
| 
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் | |
| 
5 | 
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ, | 
| 
காதல் மறந்து, அவர் தீது மருங்கு அறுமார், | |
| 
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் | |
| 
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி, | |
| 
'மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த | |
| 
10 | 
நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!' என | 
| 
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ | |
| 
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து | |
| 
அண்ணல் யானை அடு களத்து ஒழிய, | |
| 
அருஞ் சமம் ததைய நூறி, நீ, | |
| 
15 | 
பெருந் தகை! விழுப் புண் பட்ட மாறே. | 
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
அவன் பொருது புண்பட்டு நின்றோனை அவர் பாடியது.
 | 
| 
 94 | 
| 
ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின், | |
| 
நீர்த் துறை படியும் பெருங் களிறு போல | |
| 
இனியை, பெரும! எமக்கே; மற்று அதன் | |
| 
துன் அருங் கடாஅம் போல | |
| 
5 | 
இன்னாய், பெரும! நின் ஒன்னாதோர்க்கே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 95 | 
| 
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி, | |
| 
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து, | |
| 
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே, | |
| 
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து, | |
| 
5 | 
கொல் துறைக் குற்றில மாதோ என்றும் | 
| 
உண்டாயின் பதம் கொடுத்து, | |
| 
இல்லாயின் உடன் உண்ணும், | |
| 
இல்லோர் ஒக்கல் தலைவன், | |
| 
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே. | |
| 
திணை பாடாண் திணை; துறை வாள் மங்கலம்.
 | |
| 
அவன் தூதுவிட, தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட, அவர் பாடியது.
 | 
| 
 96 | 
| 
அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின், | |
| 
திரண்டு நீடு தடக்கை, என்னை இளையோற்கு | |
| 
இரண்டு எழுந்தனவால், பகையே: ஒன்றே, | |
| 
பூப் போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி, | |
| 
5 | 
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே, | 
| 
'விழவின்றுஆயினும், படு பதம் பிழையாது, | |
| 
மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க் | |
| 
கைமான் கொள்ளுமோ?' என, | |
| 
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
 | 
| 
 97 | 
| 
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள், | |
| 
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின், | |
| 
ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே; | |
| 
வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர் | |
| 
5 | 
நறுங் கள்ளின் நாடு நைத்தலின், | 
| 
சுரை தழீஇய இருங் காழொடு | |
| 
மடை கலங்கி நிலை திரிந்தனவே; | |
| 
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர் | |
| 
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின், | |
| 
10 | 
பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே; | 
| 
மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர் | |
| 
பொலம் பைந் தார் கெடப் பரிதலின், | |
| 
களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே; | |
| 
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப் | |
| 
15 | 
பொலந் தும்பைக் கழல் பாண்டில் | 
| 
கணை பொருத துளைத் தோலன்னே. | |
| 
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? 'தடந் தாள், | |
| 
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர் | |
| 
நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு | |
| 
20 | 
இறுக்கல் வேண்டும், திறையே; மறுப்பின், | 
| 
ஒல்வான் அல்லன், வெல்போரான்' எனச் | |
| 
சொல்லவும் தேறீராயின், மெல் இயல், | |
| 
கழல் கனி வகுத்த துணைச் சில் ஓதி, | |
| 
குறுந் தொடி மகளிர் தோள் விடல் | |
| 
25 | 
இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே. | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
 | 
| 
 98 | 
| 
முனைத் தெவ்வர் முரண் அவியப் | |
| 
பொரக் குறுகிய நுதி மருப்பின் நின் | |
| 
இனக் களிறு செலக் கண்டவர் | |
| 
மதில் கதவம் எழுச் செல்லவும், | |
| 
5 | 
பிணன் அழுங்கக் களன் உழக்கிச் | 
| 
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் | |
| 
இன நல் மாச் செலக் கண்டவர் | |
| 
கவை முள்ளின் புழை அடைப்பவும், | |
| 
மார்புறச் சேர்ந்து ஒல்காத் | |
| 
10 | 
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் | 
| 
தோல் கழியொடு பிடி செறிப்பவும், | |
| 
வாள் வாய்த்த வடுப் பரந்த நின் | |
| 
மற மைந்தர் மைந்து கண்டவர் | |
| 
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும், | |
| 
15 | 
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென, | 
| 
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும் | |
| 
கூற்றத்து அனையை; ஆகலின், போற்றார் | |
| 
இரங்க விளிவதுகொல்லோ வரம்பு அணைந்து | |
| 
இறங்குகதிர் அலம்வரு கழனி, | |
| 
20 | 
பெரும் புனல் படப்பை, அவர் அகன் தலை நாடே! | 
| 
திணை வாகை; துறை அரச வாகை; திணை வஞ்சியும், துறை கொற்ற வள்ளையும் ஆம்.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 99 | 
| 
அமரர்ப் பேணியும், ஆவுதி அருத்தியும், | |
| 
அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும், | |
| 
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய | |
| 
தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல, | |
| 
5 | 
ஈகை அம் கழல் கால், இரும் பனம் புடையல், | 
| 
பூ ஆர் காவின், புனிற்றுப் புலால் நெடு வேல், | |
| 
எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம் | |
| 
வழு இன்று எய்தியும் அமையாய், செரு வேட்டு, | |
| 
இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணிச் | |
| 
10 | 
சென்று, அமர் கடந்து, நின் ஆற்றல் தோற்றிய | 
| 
அன்றும், பாடுநர்க்கு அரியை; இன்றும் | |
| 
பரணன் பாடினன் மற்கொல் மற்று நீ | |
| 
முரண் மிகு கோவலூர் நூறி, நின் | |
| 
அரண் அடு திகிரி ஏந்திய தோளே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவன் கோவலூர் எறிந்தானை அவர் பாடியது.
 | 
| 
 100 | 
| 
கையது வேலே; காலன புனை கழல்; | |
| 
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்; | |
| 
வட்கர் போகிய வளர் இளம் போந்தை | |
| 
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு, | |
| 
5 | 
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ, | 
| 
சுரி இரும் பித்தை பொலியச் சூடி, | |
| 
வரிவயம் பொருத வயக் களிறு போல, | |
| 
இன்னும் மாறாது சினனே; அன்னோ! | |
| 
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே; | |
| 
10 | 
செறுவர் நோக்கிய கண், தன் | 
| 
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே. | |
| 
திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
 | |
| 
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.
 | 
| 
 101 | 
| 
ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்; | |
| 
பல நாள் பயின்று, பலரொடு செல்லினும், | |
| 
தலை நாள் போன்ற விருப்பினன்மாதோ | |
| 
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி | |
| 
5 | 
அதியமான்; பரிசில் பெறூஉம் காலம் | 
| 
நீட்டினும், நீட்டாதுஆயினும், களிறு தன் | |
| 
கோட்டு இடை வைத்த கவளம் போலக் | |
| 
கையகத்தது; அது பொய் ஆகாதே; | |
| 
அருந்த ஏமாந்த நெஞ்சம்! | |
| 
10 | 
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே! | 
| 
திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 102 | 
| 
'எருதே இளைய; நுகம் உணராவே; | |
| 
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே; | |
| 
அவல் இழியினும், மிசை ஏறினும், | |
| 
அவணது அறியுநர் யார்?' என, உமணர் | |
| 
5 | 
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன, | 
| 
இசை விளங்கு கவி கை நெடியோய்! திங்கள் | |
| 
நாள் நிறை மதியத்து அனையை; இருள் | |
| 
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே? | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.
 | 
| 
 103 | 
| 
ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத் | |
| 
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி, | |
| 
'கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?' எனச் | |
| 
சுரன்முதல் இருந்த சில் வளை விறலி! | |
| 
5 | 
செல்வைஆயின், சேணோன் அல்லன்; | 
| 
முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை | |
| 
மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும் | |
| 
பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி; | |
| 
பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை | |
| 
10 | 
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப, | 
| 
அலத்தற் காலை ஆயினும், | |
| 
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே! | |
| 
திணை அது; துறை விறலியாற்றுப்படை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.
 | 
| 
 104 | 
| 
போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை: | |
| 
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும் | |
| 
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும் | |
| 
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை | |
| 
5 | 
நுண் பல் கருமம் நினையாது, | 
| 
'இளையன்' என்று இகழின், பெறல் அரிது, ஆடே. | |
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 140 | 
| 
தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன் | |
| 
மடவன், மன்ற; செந் நாப் புலவீர்! | |
| 
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த | |
| 
அடகின் கண்ணுறைஆக யாம் சில | |
| 
5 | 
அரிசி வேண்டினேமாக, தான் பிற | 
| 
வரிசை அறிதலின், தன்னும் தூக்கி, | |
| 
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர் | |
| 
பெருங் களிறு நல்கியோனே; அன்னது ஓர் | |
| 
தேற்றா ஈகையும் உளதுகொல்? | |
| 
10 | 
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே? | 
| 
திணை அது; துறை பரிசில் விடை.
 | |
| 
அவனை ஒளவையார் பாடியது.
 | 
| 
 187 | 
| 
நாடா கொன்றோ; காடா கொன்றோ; | |
| 
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ; | |
| 
எவ் வழி நல்லவர் ஆடவர், | |
| 
அவ் வழி நல்லை; வாழிய நிலனே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
ஒளவையார் பாடியது.
 | 
| 
 206 | 
| 
வாயிலோயே! வாயிலோயே! | |
| 
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம் | |
| 
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து | |
| 
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப் | |
| 
5 | 
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே! | 
| 
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி | |
| 
தன் அறியலன்கொல்? என் அறியலன்கொல்? | |
| 
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென, | |
| 
வறுந் தலை உலகமும் அன்றே; அதனால், | |
| 
10 | 
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை; | 
| 
மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர் | |
| 
மழுவுடைக் காட்டகத்து அற்றே | |
| 
எத் திசைச் செலினும், அத் திசைச் சோறே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது.
 | 
| 
 231 | 
| 
எறி புனக் குறவன் குறையல் அன்ன | |
| 
கரி புற விறகின் ஈம ஒள் அழல், | |
| 
குறுகினும் குறுகுக; குறுகாது சென்று, | |
| 
விசும்புற நீளினும் நீள்க பசுங் கதிர்த் | |
| 
5 | 
திங்கள் அன்ன வெண்குடை | 
| 
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
 | 
| 
 232 | 
| 
இல்லாகியரோ, காலை மாலை! | |
| 
அல்லாகியர், யான் வாழும் நாளே! | |
| 
நடுகல் பீலி சூட்டி, நார் அரி | |
| 
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்கொல்லோ | |
| 
5 | 
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய | 
| 
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே? | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 235 | 
| 
சிறிய கள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே! | |
| 
பெரிய கள் பெறினே, | |
| 
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும்; மன்னே! | |
| 
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! | |
| 
5 | 
பெருஞ் சோற்றானும் நனி பல கலத்தன்; மன்னே! | 
| 
என்பொடு தடி படு வழி எல்லாம் எமக்கு ஈயும்; மன்னே! | |
| 
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்; மன்னே! | |
| 
நரந்தம் நாறும் தன் கையால், | |
| 
புலவு நாறும் என் தலை தைவரும்; மன்னே! | |
| 
10 | 
அருந் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ, | 
| 
இரப்போர் கையுளும் போகி, | |
| 
புரப்போர் புன்கண் பாவை சோர, | |
| 
அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில் | |
| 
சென்று வீழ்ந்தன்று, அவன் | |
| 
15 | 
அரு நிறத்து இயங்கிய வேலே! | 
| 
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ? | |
| 
இனி, பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை; | |
| 
பனித் துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர் | |
| 
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று | |
| 
20 | 
ஈயாது வீயும் உயிர் தவப் பலவே! | 
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
 | 
| 
 269 | 
| 
குயில் வாய் அன்ன கூர்முகை அதிரல் | |
| 
பயிலாது அல்கிய பல் காழ் மாலை | |
| 
மை இரும் பித்தை பொலியச் சூட்டி, | |
| 
புத்தகல் கொண்ட புலிக் கண் வெப்பர் | |
| 
5 | 
ஒன்று இரு முறை இருந்து உண்ட பின்றை, | 
உவலைக் கண்ணித் துடியன் வந்தென, | 
| 
பிழி மகிழ் வல்சி வேண்ட, மற்று இது | |
| 
கொள்ளாய் என்ப, கள்ளின் வாழ்த்தி; | |
| 
கரந்தை நீடிய அறிந்து மாறு செருவில் | |
| 
10 | 
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர், | 
| 
கொடுஞ் சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்ப, | |
| 
தடிந்து மாறு பெயர்த்தது, இக் கருங் கை வாளே. | |
| 
திணை வெட்சி; துறை உண்டாட்டு.
 | |
| 
ஒளவையார் பாடியது.
 | 
| 
 286 | 
| 
வெள்ளை வெள் யாட்டுச் செச்சை போலத் | |
| 
தன் ஓரன்ன இளையர் இருப்ப, | |
| 
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக் | |
| 
கால் கழி கட்டிலில் கிடப்பி, | |
| 
5 | 
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே! | 
| 
திணை கரந்தை; துறை வேத்தியல்.
 | |
| 
ஒளவையார் பாடியது.
 | 
| 
 290 | 
| 
இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே; சினப் போர் | |
| 
இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்! | |
| 
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை, | |
| 
எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன் | |
| 
5 | 
அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே; | 
| 
மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும், | |
| 
உறைப்புழி ஓலை போல, | |
| 
மறைக்குவன் பெரும! நிற் குறித்து வரு வேலே. | |
| 
திணை கரந்தை; துறை குடிநிலை உரைத்தல்.
 | |
| 
ஒளவையார் பாடியது.
 | 
| 
 295 | 
| 
கடல் கிளர்ந்தன்ன கட்டூர் நாப்பண், | |
| 
வெந்து வாய் மடித்து வேல் தலைப் பெயரி, | |
| 
தோடு உகைத்து எழுதரூஉ, துரந்து எறி ஞாட்பின், | |
| 
வரு படை போழ்ந்து வாய்ப் பட விலங்கி, | |
| 
5 | 
இடைப் படை அழுவத்துச் சிதைந்து வேறாகிய, | 
| 
சிறப்புடையாளன் மாண்பு கண்டருளி, | |
| 
வாடு முலை ஊறிச் சுரந்தன | |
| 
ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே. | |
| 
திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
 | |
| 
ஒளவையார் பாடியது.
 | 
| 
 311 | 
| 
களர்ப் படு கூவல் தோண்டி, நாளும், | |
| 
புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை. | |
| 
தாது எரு மறுகின் மாசுண இருந்து, | |
| 
பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு | |
| 
5 | 
ஒருவரும் இல்லை மாதோ, செருவத்து; | 
| 
சிறப்புடைச் செங் கண் புகைய, ஓர் | |
| 
தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே. | |
| 
திணை அது; துறை பாண்பாட்டு.
 | |
| 
ஒளவையார் பாடியது.
 | 
| 
 315 | 
| 
உடையன்ஆயின் உண்ணவும் வல்லன்; | |
| 
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்; | |
| 
மடவர் மகிழ் துணை; நெடு மான் அஞ்சி | |
| 
இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போல, | |
| 
5 | 
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்றதன் | 
| 
கான்று படு கனை எரி போல, | |
| 
தோன்றவும் வல்லன் தான் தோன்றுங்காலே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
 | 
| 
 367 | 
| 
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் | |
| 
தமவேஆயினும் தம்மொடு செல்லா; | |
| 
வேற்றோர்ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்; | |
| 
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப் | |
| 
5 | 
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, | 
| 
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய | |
| 
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து, | |
| 
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி, | |
| 
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்; | |
| 
10 | 
வாழச் செய்த நல்வினை அல்லது | 
| 
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை; | |
| 
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் | |
| 
முத்தீப் புரையக் காண்தக இருந்த | |
| 
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்! | |
| 
15 | 
யான் அறி அளவையோ இதுவே: வானத்து | 
| 
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப் | |
| 
பரந்து இயங்கு மா மழை உறையினும், | |
| 
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே! | |
| 
திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
 | |
| 
சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.
 | 
| 
 390 | 
| 
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும் | |
| 
மறவை நெஞ்சத்து ஆயிவாளர், | |
| 
அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ், | |
| 
.............................................மன்ன முற்றத்து, | |
| 
5 | 
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர் | 
| 
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர், | |
| 
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என் | |
| 
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப் | |
| 
பாடி நின்ற பல் நாள் அன்றியும், | |
| 
10 | 
சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின் | 
| 
வந்ததற் கொண்டு, 'நெடுங் கடை நின்ற | |
| 
புன் தலைப் பொருநன் அளியன்தான்' என, | |
| 
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை | |
| 
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து, | |
| 
15 | 
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ, | 
| 
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும், | |
| 
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் | |
| 
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி, | |
| 
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை | |
| 
20 | 
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற, | 
| 
அகடு நனை வேங்கை வீ கண்டன்ன | |
| 
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி, | |
| 
'கொண்டி பெறுக!' என்றோனே உண் துறை | |
| 
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்; | |
| 
25 | 
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடி வாழ்த்தி, | 
| 
............................................ | |
| 
வான் அறியல என் பாடு பசி போக்கல்; | |
| 
அண்ணல் யானை வேந்தர் | |
| 
உண்மையோ, அறியல்? காண்பு அறியலரே! | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.
 | 
| 
 392 | 
| 
மதி ஏர் வெண் குடை அதியர் கோமான், | |
| 
கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான் | |
| 
பசலை நிலவின் பனி படு விடியல், | |
| 
பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை | |
| 
5 | 
ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ, | 
| 
'உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து, | |
| 
நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து | |
| 
அணங்குடை மரபின் இருங் களந்தோறும், | |
| 
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி, | |
| 
10 | 
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் | 
| 
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச் | |
| 
சென்று யான் நின்றனெனாக, அன்றே, | |
| 
ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி | |
| 
வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர் கரை | |
| 
15 | 
நுண் நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத் | 
| 
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் | |
| 
கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ, | |
| 
ஊண் முறை ஈத்தல் அன்றியும், கோள் முறை | |
| 
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து | |
| 
20 | 
அரும் பெறல் அமிழ்தம் அன்ன | 
| 
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.
 |