| முகப்பு | தொடக்கம் | 
| 
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரன், கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனா | 
| 
 54 | 
| 
எம் கோன் இருந்த கம்பலை மூதூர், | |
| 
உடையோர் போல இடையின்று குறுகி, | |
| 
செம்மல் நாள் அவை அண்ணாந்து புகுதல் | |
| 
எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே; | |
| 
5 | 
இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து, | 
| 
வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு | |
| 
ஆனாது ஈயும் கவி கை வண்மைக் | |
| 
கடு மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த | |
| 
நெடுமொழி மன்னர் நினைக்கும் காலை, | |
| 
10 | 
பாசிலைத் தொடுத்த, உவலைக் கண்ணி, | 
| 
மாசு உண் உடுக்கை, மடி வாய், இடையன் | |
| 
சிறு தலை ஆயமொடு குறுகல்செல்லாப் | |
| 
புலி துஞ்சு வியன் புலத்தற்றே | |
| 
வலி துஞ்சு தடக் கை அவனுடை நாடே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரன் பாடியது.
 | 
| 
 61 | 
| 
கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர் | |
| 
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும், | |
| 
மலங்கு மிளிர், செறுவின் தளம்பு தடிந்து இட்ட | |
| 
பழன வாளைப் பரூஉக் கண் துணியல் | |
| 
5 | 
புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக, | 
| 
விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி, | |
| 
நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும் | |
| 
வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர் | |
| 
தெங்கு படு வியன் பழம் முனையின், தந்தையர் | |
| 
10 | 
குறைக்கண் நெடும் போர் ஏறி, விசைத்து எழுந்து | 
| 
செழுங் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும், | |
| 
வைகல் யாணர், நல் நாட்டுப் பொருநன், | |
| 
எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி, | |
| 
சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர்எனின், | |
| 
15 | 
தாம் அறிகுவர் தமக்கு உறுதி; யாம் அவன் | 
| 
எழு உறழ் திணி தோள் வழு இன்று மலைந்தோர் | |
| 
வாழக் கண்டன்றும் இலமே; தாழாது, | |
| 
திருந்து அடி பொருந்த வல்லோர் | |
| 
வருந்தக் காண்டல், அதனினும் இலமே. | |
| 
திணை வாகை; துறை அரச வாகை.
 | |
| 
சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட் சென்னியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
 | 
| 
 167 | 
| 
நீயே, அமர் காணின் அமர் கடந்து, அவர் | |
| 
படை விலக்கி எதிர் நிற்றலின், | |
| 
வாஅள் வாய்த்த வடு ஆழ் யாக்கையொடு, | |
| 
கேள்விக்கு இனியை; கட்கு இன்னாயே: | |
| 
5 | 
அவரே, நிற் காணின் புறம் கொடுத்தலின், | 
| 
ஊறு அறியா மெய் யாக்கையொடு, | |
| 
கண்ணுக்கு இனியர்; செவிக்கு இன்னாரே: | |
| 
அதனால், நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்று இனியர்; | |
| 
ஒவ்வா யா உள, மற்றே? வெல் போர்க் | |
| 
10 | 
கழல் புனை திருந்து அடிக் கடு மான் கிள்ளி! | 
| 
நின்னை வியக்கும் இவ் உலகம்; அஃது | |
| 
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே. | |
| 
திணை அது; துறை அரச வாகை.
 | |
| 
ஏனாதி திருக்கிள்ளியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
 | 
| 
 180 | 
| 
நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே; | |
| 
'இல்' என மறுக்கும் சிறுமையும் இலனே; | |
| 
இறை உறு விழுமம் தாங்கி, அமரகத்து | |
| 
இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து, | |
| 
5 | 
மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி, | 
| 
வடு இன்று வடிந்த யாக்கையன், கொடை எதிர்ந்து, | |
| 
ஈர்ந்தையோனே, பாண் பசிப் பகைஞன்; | |
| 
இன்மை தீர வேண்டின், எம்மொடு | |
| 
நீயும் வம்மோ? முது வாய் இரவல! | |
| 
10 | 
யாம் தன் இரக்கும்காலை, தான் எம் | 
| 
உண்ணா மருங்குல் காட்டி, தன் ஊர்க் | |
| 
கருங் கைக் கொல்லனை இரக்கும், | |
| 
'திருந்து இலை நெடு வேல் வடித்திசின்' எனவே. | |
| 
திணையும் துறையும் அவை; துறை பாணாற்றுப் படையும் ஆம்.
 | |
| 
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
 | 
| 
 197 | 
| 
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு | |
| 
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ, | |
| 
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு | |
| 
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ, | |
| 
5 | 
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு | 
| 
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ, | |
| 
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர் | |
| 
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே; | |
| 
எம்மால் வியக்கப்படூஉமோரே, | |
| 
10 | 
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த | 
| 
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு, | |
| 
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம், | |
| 
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின் | |
| 
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே; | |
| 
15 | 
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும் | 
| 
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்; | |
| 
நல் அறிவு உடையோர் நல்குரவு | |
| 
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
 | 
| 
 394 | 
| 
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின், | |
| 
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன், | |
| 
வலி துஞ்சு தடக் கை வாய் வாள் குட்டுவன், | |
| 
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும், | |
| 
5 | 
உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்! | 
| 
யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை, | |
| 
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, | |
| 
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை | |
| 
வாடா வஞ்சி பாடினேனாக, | |
| 
10 | 
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி, | 
| 
கொன்று சினம் தணியாப் புலவு நாறு மருப்பின் | |
| 
வெஞ் சின வேழம் நல்கினன்; அஞ்சி | |
| 
யான் அது பெயர்த்தனெனாக, தான் அது | |
| 
சிறிது என உணர்ந்தமை நாணி, பிறிதும் ஓர் | |
| 
15 | 
பெருங் களிறு நல்கியோனே; அதற்கொண்டு, | 
| 
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்புறினும், | |
| 
'துன் அரும் பரிசில் தரும்' என, | |
| 
என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே. | |
| 
திணையும் துறையும் அவை. | |
| 
கடைநிலை ஆயின எல்லாம் பாடாண் திணை.
 | |
| 
சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
 |