| முகப்பு | தொடக்கம் | 
| 
கண்டீரக்கோப் பெரு நள்ளி | 
| 
 148 | 
| 
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின் | |
| 
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி, | |
| 
நாள்தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து, | |
| 
கூடு விளங்கு வியல் நகர், பரிசில் முற்று அளிப்ப; | |
| 
5 | 
பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி, | 
| 
செய்யா கூறிக் கிளத்தல் | |
| 
எய்யாதாகின்று, எம் சிறு செந் நாவே. | |
| 
திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
 | |
| 
கண்டீரக் கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது.
 | 
| 
 149 | 
| 
நள்ளி! வாழியோ; நள்ளி! நள்ளென் | |
| 
மாலை மருதம் பண்ணி, காலை | |
| 
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி, | |
| 
வரவு எமர் மறந்தனர் அது நீ | |
| 
5 | 
புரவுக் கடன் பூண்ட வண்மையானே. | 
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 150 | 
| 
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன | |
| 
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி, | |
| 
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என் | |
| 
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி, | |
| 
5 | 
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால், | 
| 
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி, | |
| 
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன், | |
| 
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ, | |
| 
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை, | |
| 
10 | 
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே | 
| 
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத் | |
| 
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின் | |
| 
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின், | |
| 
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி, | |
| 
15 | 
நல் மரன் நளிய நறுந் தண் சாரல், | 
| 
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி, | |
| 
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே, | |
| 
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம் | |
| 
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என, | |
| 
20 | 
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் | 
| 
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்; | |
| 
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்; | |
| 
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்; | |
| 
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே | |
| 
25 | 
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி | 
| 
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின், | |
| 
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர், | |
| 
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே. | |
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 151 | 
| 
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப, | |
| 
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன், | |
| 
கிழவன் சேட் புலம் படரின், இழை அணிந்து, | |
| 
புன் தலை மடப் பிடி பரிசிலாக, | |
| 
5 | 
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்க் | 
| 
கண்டீரக்கோன்ஆகலின், நன்றும் | |
| 
முயங்கல் ஆன்றிசின், யானே; பொலந் தேர் | |
| 
நன்னன் மருகன் அன்றியும், நீயும் | |
| 
முயங்கற்கு ஒத்தனை மன்னே; வயங்கு மொழிப் | |
| 
10 | 
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை | 
| 
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் | |
| 
மணம் கமழ் மால் வரை வரைந்தனர், எமரே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
இளங் கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் ஒருங்கு இருந்தவழி, சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங் கண்டீரக்கோவைப் புல்லி, இள விச்சிக்கோவைப் புல்லாராக 'என்னை என் செயப் புல்லீராயினீர்?' என, அவர் பாடியது.
 |