| முகப்பு | தொடக்கம் | 
| 
வேள்பாரி | 
| 
 105 | 
| 
சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி! | |
| 
தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை | |
| 
வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப் | |
| 
பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி | |
| 
5 | 
கொள் உழு வியன் புலத்துழை கால் ஆக, | 
| 
மால்புடை நெடு வரைக் கோடுதோறு இழிதரும் | |
| 
நீரினும் இனிய சாயல் | |
| 
பாரி வேள்பால் பாடினை செலினே. | |
| 
திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
 | |
| 
வேள் பாரியைக் கபிலர் பாடியது.
 | 
| 
 106 | 
| 
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் | |
| 
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை | |
| 
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு, | |
| 
மடவர் மெல்லியர் செல்லினும், | |
| 
5 | 
கடவன், பாரி கை வண்மையே. | 
| 
திணை அது; துறை இயன்மொழி.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 107 | 
| 
'பாரி பாரி' என்று பல ஏத்தி, | |
| 
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்; | |
| 
பாரி ஒருவனும் அல்லன்; | |
| 
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 108 | 
| 
குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி | |
| 
ஆரம் ஆதலின், அம் புகை அயலது | |
| 
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும் | |
| 
பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு, | |
| 
5 | 
பாரியும், பரிசிலர் இரப்பின், | 
| 
'வாரேன்' என்னான், அவர் வரையன்னே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 109 | 
| 
அளிதோதானே, பாரியது பறம்பே! | |
| 
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும், | |
| 
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே: | |
| 
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே; | |
| 
5 | 
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே; | 
| 
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே; | |
| 
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து, | |
| 
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே. | |
| 
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து, | |
| 
10 | 
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு, | 
| 
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும், | |
| 
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும், | |
| 
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்; | |
| 
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே: | |
| 
15 | 
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி, | 
| 
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர, | |
| 
ஆடினிர் பாடினிர் செலினே, | |
| 
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே. | |
| 
திணை நொச்சி; துறை மகள் மறுத்தல்.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 111 | 
| 
அளிதோ தானே, பேர் இருங் குன்றே! | |
| 
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே; | |
| 
நீலத்து, இணை மலர் புரையும் உண்கண் | |
| 
கிணை மகட்கு எளிதால், பாடினள் வரினே. | |
| 
திணையும் துறையும் அவை.
 | |
| 
அவனை அவர் பாடியது.
 | 
| 
 236 | 
| 
கலை உணக் கிழிந்த, முழவு மருள், பெரும் பழம் | |
| 
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் | |
| 
மலை கெழு நாட! மா வண் பாரி! | |
| 
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய், நீ; எற் | |
| 
5 | 
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே | 
| 
பெருந் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது, | |
| 
ஒருங்கு வரல் விடாது, 'ஒழிக' எனக் கூறி, | |
| 
இனையைஆதலின் நினக்கு மற்று யான் | |
| 
மேயினேன் அன்மையானே; ஆயினும், | |
| 
10 | 
இம்மை போலக் காட்டி, உம்மை | 
| 
இடை இல் காட்சி நின்னோடு | |
| 
உடன் உறைவு ஆக்குக, உயர்ந்த பாலே! | |
| 
திணை அது; துறை கையறுநிலை.
 | |
| 
வேள் பாரி துஞ்சியவழி, அவன் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்து, வடக்கிருந்த கபிலர் பாடியது.
 |